சுபஸ்ரீ பிலவ வருடம் மார்கழி மாதம் 17-ந் தேதி (1.1.2022) சனிக்கிழமை, சதுர்த்தசி திதி, கேட்டை நட்சத்திரம், விருச்சிக ராசியில் ஆங்கிலப் புத்தாண்டு பிறக்கின்றது.
ஆண்டின் தொடக்கத்தில் குரு பார்வையால் புனிதமடையும் ராசிகளான மிதுனம், சிம்மம், துலாம் ஆகிய ராசிக்காரர்களுக்கும், எண்கணித அடிப்படையில் ஆண்டின் கூட்டுத் தொகை 6 மற்றும் 8 எண் ஆதிக்கத்தில் வருவதால், 6, 15, 24, 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கும், விருச்சிக ராசியில் புத்தாண்டு பிறப்பதால் விருச்சிக ராசிக்காரர்களுக்கும், சனிக்கிழமை பிறப்பதால் சனி மற்றும் புதன் கிழமையில் பிறந்தவர்களுக்கும் இந்த ஆண்டு யோகம் தரும் ஆண்டாகும். அவர்களுக்கு தொட்டது துலங்கும். தொழில் வளம் மேலோங்கும். வெற்றி வாய்ப்புகள் வீடு தேடி வரும்.
மற்ற ராசி நட்சத்திரங்களில் பிறந்தவர்களும், மற்ற எண் ஆதிக்கத்தில் பிறந்தவர்களும் தங்கள் சுய ஜாதகத்தின் அடிப்படையில் பாக்கிய ஸ்தானத்தின் பலமறிந்து, அதற்குரிய தெய்வ வழிபாடுகளை தேர்ந்தெடுத்து, யோகபலம் பெற்ற நாளில் வழிபட்டு வந்தால் வெற்றிப் பாதைக்கு வழி கிடைக்கும்.
புத்தாண்டின் பொதுப்பலன்
* புத்தாண்டில் சுக்ர பலம் நன்றாக இருப்பதால் மழை வளம் அதிகரிக்கும். மழைநீர் வீடுகளில் புகுந்து மக்களை அச்சுறுத்தலாம்.
* மளிகை சாமான், காய்கறிகள், வாகன உதிரி பாகங்கள், கட்டுமானப் பணிக்குரிய பொருட்கள் போன்றவற்றின் விலை படிப்படியாக உயரலாம்.
* வரிச்சுமை கூடும். தங்கம், வெள்ளி விலை குறைவதுபோல் தோன்றி, மேலும் உயர்ந்து மக்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கலாம். சொத்துக்களின் விலையும் உயரும். சொகுசு வாகனங்கள் மின்சாரத்தின் மூலம் இயங்கும் வாகனங்களாக மாறி, விரைவில் விற்பனைக்கு வரலாம்.
* பெட்ரோல், டீசல், எரிவாயு போன்றவற்றின் விலை ஓரளவு குறையலாம். செவ்வாய் - சனி பார்வை காலங்களிலும், சேர்க்கைக் காலங்களிலும் இயற்கை சீற்றங்கள், நோய் தாக்கங்கள் ஏற்படலாம். மக்கள் மிகமிக கவனத்துடன் செயல்பட வேண்டும்.
* அரசாங்கமும், நீதிமன்றங்களும் புதுப்புது சட்டங்களை உருவாக்கும். பல பிரபலங்கள் வழக்குகளில் சிக்குவதும், விடுபடுவதும் வாடிக்கையாகும். அரசியல் களத்தில் உட்பூசல் அதிகரிக்கும்.
சுபஸ்ரீ பிலவ வருடம் மார்கழி மாதம் 17-ந் தேதி (1.1.2022) சனிக்கிழமை, சதுர்த்தசி திதி, கேட்டை நட்சத்திரம், விருச்சிக ராசியில் ஆங்கிலப் புத்தாண்டு பிறக்கின்றது. நவக்கிரகங்களில் ‘தைரியகாரகன்’ என்று அழைக்கப்படும் செவ்வாயும், ‘ஆயுள்காரகன்’ என்று அழைக்கப்படும் சனியும் சொந்த வீட்டில் சஞ்சரிக்கிறார்கள். புத -சுக்ர யோகத்தோடும், சந்திர- மங்கள யோகத்தோடும் ஆங்கிலப் புத்தாண்டு பிறக்கிறது. அதே நேரத்தில் சர்ப்ப கிரகத்தின் ஆதிக்கமும் கூடியிருக்கிறது. எனவே பிறக்கும் புத்தாண்டில் மக்கள் அனைவரும் நோய்தொற்று அகன்று ஆரோக்கியத்துடனும், அமைதியுடனும் வாழ்க்கை நடத்தவும், தடைகற்கள் எல்லாம் விலகி தன்னிகரற்ற வாழ்வு அமையவும், ஆண்டின் தொடக்க நாளில் தும்பிக்கையானை நம்பிக்கையோடு வழிபடுவோம்.
தமிழ் புத்தாண்டு தொடங்குவதைக் கொண்டாடுவதைப் போல ஆங்கிலப் புத்தாண்டையும் கொண்டாடுவதை மக்கள் வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர். கிரகங்களின் சுழற்சியின் மூலமே மனித வாழ்க்கையின் வளர்ச்சியில் மாபெரும் மாற்றங்கள் ஏற்படுகிறது என்பதை மக்கள் அனைவரும் புரிந்து கொண்டனர். அதனால் தான் மாபெரும் கிரகங்களின் மாற்றங்கள் நிகழும் போதெல்லாம் அதைக் கொண்டாடி, அதற்குரிய தெய்வத்தை வழிபடுகிறார்கள்.
ஒவ்வொரு புத்தாண்டு பிறக்கும் பொழுதும், ‘இந்தப் புத்தாண்டு நமக்கு எப்படி இருக்கும்?, பொருள் வரவை பெருக்குமா?, புதிய பாதை காட்டுமா?’ என்று அனைவருமே சிந்திப்பது வழக்கம். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக ‘உலகமெங்கும் பரவியுள்ள நோய்த் தொற்று அகலுமா? ஆரோக்கியமாக வாழ முடியுமா? இயற்கை சீற்றங்களிலிருந்து தப்பிக்க இயலுமா?’ என்றெல்லாம் சிந்திக்கும் நிலை ஏற்பட்டுவிட்டது. இதற்கெல்லாம் விடைகூறும் விதத்தில் 12 ராசிகளுக்குரிய பலன்களும், போராட்டமான வாழ்க்கை பூந்தோட்டமாக மாறுவதற்கான வழிபாடுகளையும் கணித்து இதில் பலன்கள் எழுதப்பட்டுள்ளது.
புத்தாண்டின் கூட்டுத் தொகை (2022 என்பது 2+0+2+2=6) சுக்ரனுக்குரிய எண் ஆதிக்கத்தில் வருகின்றது. தேதி, மாதத்துடன் கூட்டும்பொழுது வருடப்பிறப்பு நாள் (1+1+2+0+2+2=8) சனி ஆதிக்கத்தில் வருகிறது. வருடத் தொடக்கத்தில் சனியோடு சுக்ரனும், புதனும் இணைந்திருக்கின்றனர். புதனும், சுக்ரனும் சனிக்கு நட்பு கிரகம் என்பதால், இந்த ஆண்டில் சனி கிரகத்திற்குரிய விநாயகப்பெருமான், அனுமன், சனி பகவான், சுக்ரனுக்குரிய சிவன், அம்பிகை, புதனுக்குரிய விஷ்ணு, சொந்த வீட்டில் சஞ்சரிக்கின்ற செவ்வாய்க்குரிய முருகப்பெருமான், கும்ப குருவின் பலம்பெற குரு பகவான், ரிஷபத்தில் ராகு இருப்பதால் நந்தியம்பெருமான், சுக்ரன் ஆதிக்கத்தில் ஆண்டு பிறப்பதால் சரஸ்வதி, லட்சுமி ஆகியோரை முறையாக வழிபட்டால் முன்னேற்றத்தின் முதல்படிக்குச் செல்லலாம்.
கீர்த்தி தரும் கிரக சஞ்சாரம்
இப்புத்தாண்டில் 21.3.2022 அன்று ராகு, கேதுக்களின் பெயர்ச்சி நிகழவிருக்கிறது. மேஷ ராசியில் ராகு பகவானும், துலாம் ராசியில் கேது பகவானும் சஞ்சரிப்பார்கள்.
13.4.2022 அன்று, மீன ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சியாகிச் செல்கிறார். ‘குரு பார்க்க கோடி நன்மை’ என்பதால் இந்தப் பெயர்ச்சியின் விளைவாக கோடி நன்மை பெறும் ராசிகள் கடகம், கன்னி, விருச்சிகம்.
இந்த ஆண்டு மிதுன ராசிக்கு அஷ்டமத்துச் சனியும், கடக ராசிக்கு கண்டகச் சனியும், துலாம் ராசிக்கு அர்த்தாஷ்டமச் சனியும், தனுசு ராசிக்கு பாதச் சனியும், மகர ராசிக்கு ஜென்மச் சனியும், கும்ப ராசிக்கு விரயச்சனியும் நடைபெறுவதால், மேற்கண்ட ராசிக்காரர்கள் மிகுந்த கவனத்தோடு செயல்படுங்கள். அருளாளர்களின் ஆலோசனைகளும், அனுபவஸ்தர்களின் அறிவுரைகளும் துன்பத்தை நீக்கி, இன்பத்தை இல்லம் கொண்டு வந்து சேர்க்கும். குரு மற்றும் சனியின் வக்ர காலத்திலும், சனி -செவ்வாய் பார்வை மற்றும் சேர்க்கைக் காலத்திலும் இயற்கை சீற்றங்களில் இருந்து விடுபடவும், நோயின் தாக்கங்கள் அகலவும், அமைதியும், ஆனந்தமும் அனைவர் வாழ்விலும் குடிகொள்ளவும் இறை வழிபாடுகளை மேற்கொள்ளுங்கள்.
சுபம்.
உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்
0 Comments
No Comments Here ..