28,Mar 2024 (Thu)
  
CH
இந்திய செய்தி

அ.தி.மு.க.வின் வாயை அடைக்க முடியாது- கே.பி.முனுசாமி

எட்டு மாத காலமாக தி.மு.க. அரசு மக்களுக்கு செய்யவேண்டிய எந்தவித பணிகளையும் சேவைகளையும் செய்யவில்லை என கே.பி.முனுசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

தருமபுரி மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும் பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான கே.பி. அன்பழகன் வீடு, அலுவலகம் மற்றும் அவரது உறவினர்கள், ஆதரவாளர்கள் வீடுகளில் இன்று காலை லஞ்ச ஒழிப்பு சோதனை நடந்து வருகிறது.

இந்த நிலையில் கிருஷ்ணகிரியில் அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளரும், எம்.எல்.ஏ.வுமான கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. கூறியதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு தோல்வியடைந்ததை திசை திருப்பவும் தி.மு.க.வின் நிரந்தர எதிரியான அ.தி.மு.க.வை அழிக்கவும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி பல்வேறு முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் சோதனை செய்யப்பட்டது. இன்று முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் வீட்டில் சோதனை செய்கின்றனர். அரசியலுக்கு வருவதற்கு முன்பாகவே கே.பி.அன்பழகன் குடும்பம் பாரம்பரியமாக தொழில் செய்யக்கூடிய செல்வந்தர் குடும்பம் ஆகும். அ.தி.மு.க.வின் தலைவர்களையும் செல்வாக்குமிக்க நபர்களையும் சிறுமைப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் தி.மு.க. இது போன்ற சோதனைகளை நடத்தி வருகிறது. இதனை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

ஆட்சியாளர்களின் நிர்பந்தத்தின் பெயரால் தற்பொழுது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வருகிறார்கள். அவர்களாகவே ஒரு கணக்கெடுப்பு செய்து ஊடகங்களில் தெரிவிக்கின்றனர். ஆனால் சோதனை நடத்தும் போது எந்தவித ஆதாரங்களும் கிடைப்பதில்லை. இது தான் எதார்த்தமான உண்மை.

எட்டு மாத காலமாக தி.மு.க. அரசு மக்களுக்கு செய்யவேண்டிய எந்தவித பணிகளையும் சேவைகளையும் செய்யவில்லை. பொங்கல் திருநாளில் மக்களுக்கு கொடுக்கப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்பில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. 2 கோடியே 15 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. இதில் 20 பொருட்களுக்கு 1088 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. கரும்புக்கு மட்டும் 73 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 1159 கோடி ரூபாய் அரசு கொடுத்த பொருட்களை சில்லரை கடையில் சென்று வாங்கினால் கூட அதன் மொத்த விலை 350 ரூபாய்க்குள் அடங்கிவிடுகிறது. ஆனால் அரசு ஒதுக்கிய நிதி கிடைத்தால் ஒரு குடும்பத்திற்கு 570 ரூபாய் வருகிறது. அதாவது ஒரு குடும்ப அட்டைக்கு 275 ரூபாய் ஊழல் செய்து உள்ளது.

இதனை மறைப்பதற்காகவே எங்கள் மீது பழி போட்டு தருமபுரி மாவட்ட செயலாளர் வீடுகளில் சோதனை நடத்தப்படுகிறது. எந்த வழக்காக இருந்தாலும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். சட்டப்படி நிச்சயமாக வழக்குகளில் வெற்றி பெறுவோம்.

தமிழகத்தில் ஊழலுக்கு வித்திட்ட தலைவர் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி. ஊழலைப் பற்றி பேசுவதற்கு எந்தவித தார்மீக உரிமையும் தி.மு.க. அரசுக்கும் தி.மு.க. தலைவர்களுக்கும் கிடையாது. லஞ்ச ஒழிப்பு சோதனை மூலம் அ.தி.மு.க.வின் வாய்களை அடைத்து விடலாம் என்று நினைத்தால் அவர்களைப் போன்ற ஒரு ஏமாளிகள் வேறு யாரும் இருக்க முடியாது.

மாநில அரசு நடத்தும் லஞ்ச ஒழிப்பு சோதனையை மத்திய அரசு விமர்சனம் செய்வது சட்ட ரீதியான முறை கிடையாது. மாநில அரசின் சோதனைகளை மத்திய அரசு கண்காணித்து வருகிறது. நேரம் வரும்பொழுது அது தவறு என்னும் பட்சத்தில் மத்திய அரசு கட்டாயம் நடவடிக்கை எடுக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்




அ.தி.மு.க.வின் வாயை அடைக்க முடியாது- கே.பி.முனுசாமி

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு