09,May 2024 (Thu)
  
CH
வாழ்வியல்

மாதவிடாய் தள்ளிபோக மாத்திரையா இயற்கை முறையா எது சிறந்தது

பெண் பருவமடைந்த காலத்துக்கு பிறகு மாதவிடாய் சுழற்சி இயல்பாக இருக்க வேண்டும். பொதுவாக 28 முதல் 35 நாட்களுக்கு இடைப்பட்ட காலத்தில் மாதவிடாய் சுழற்சி வரலாம். இன்றைய நிலையில் பலருக்கும் மாதவிடாய் சுழற்சி சீரற்று வரக்கூடிய சூழலில் மாதவிடாய் சுழற்சி சரியாக வருபவர்கள் அந்த நேரத்தில் வருவதை தடுக்க மாத்திரை எடுப்பதும் பார்க்க முடிகிறது. இப்படி மாதவிடாய் சுழற்சியை தள்ளிபோடுவது ஆரோக்கியமானதா. இது குறித்து சித்த மருத்துவர் உஷாநந்தினி சொல்வது என்ன என்பதை பார்க்கலாம்

இன்று பலரும் சரியாக வரக்கூடிய மாதவிடாய் சுழற்சியை தள்ளிபோடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். பள்ளியில் தேர்வு, பண்டிகை காலம், விருந்துக்கு செல்ல வேண்டும். வெளியூர் செல்ல வேண்டிய சூழல், திருமணம் ஒன்றுக்கு செல்லும் நேரம் என மாதவிடாய் சுழற்சி வரும் நேரத்தை ஒத்திவைக்க மாத்திரைகள் எடுப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். பலரும் இது குறித்து ஆர்வமாக கேள்வி எழுப்புகிறார்கள். மாத்திரையோ அல்லது வீட்டு வைத்தியமோ என்ன செய்யலாம் என்று கேள்விகளை எழுப்பி வருகின்றனர். உண்மையில் இது சரியானதா? மாதவிடாய் சுழற்சியின் அடிப்படை குறித்து முதலில் தெரிந்துகொள்வோம்.

மாதவிடாய் சுழற்சி என்பது கருப்பையின் செயல்பாடுகளை உள்ளடக்கியது. 28 நாள்கள் கருப்பை சுழற்சி முறையில் இயங்க ஹார்மோன் முக்கிய பங்குவகிக்கின்றன. இதில் முதல் 10 நாட்கள் இரத்தத்தில் ஈஸ்ட்ரோஜன் என்னும் ஹார்மோன் கூடுதலாக இருக்கும். அதன் பிறகு கருமுட்டை வெடித்து வெளிவரும் அண்டவிடுப்பின் நிலையானது 12- 15 நாட்கள் வரை நடக்கும். அப்போது இரத்தத்தில் ஈஸ்ட்ரோஜன் அளவு குறைந்து பிரஜெஸ்ட்ரோன் அளவு அதிகரிக்கும். இப்படி இறுதி 10 நாட்களில் ஈஸ்ட்ரோஜன் அளவு குறைந்து ப்ரொஜெஸ்ட்ரோன் அளவுகள் அதிகரிக்கும்.

28 நாட்கள் ஆகும் போது இரண்டு ஹார்மோன் முழுவதுமாக குறைந்து மாதவிடாய் உண்டாகும். இவை தான் மாதவிடாய் சுழற்சியின் போது உடலில் உண்டாகும் மாற்றங்கள்.

இந்த கருப்பை சுழற்சியை தலைகீழாக மாற்றும் வகையில் மாதவிடாய் சுழற்சியை தள்ளிவைக்க மாத்திரைகள் எடுக்கும் போது இந்த ஈஸ்ட்ரோஜன் மற்றும் ப்ரொஜெஸ்ட்ரோன் என்னும் ஹார்மோன் இரத்தத்தில் கூடுதலாக இருந்துகொண்டே இருக்கும். இப்படி நாள் கணக்கில் மாதவிடாய் சுழற்சியை தள்ளிபோட மாத்திரைகள் எடுக்கும் போதெல்லாம் இரத்தத்தில் ஹார்மோன் சுழற்சி அதிகரிக்கவே செய்யும். பிறகு மாத்திரைகள் நிறுத்தியதும் படிப்படியாக ஹார்மோன் அளவு குறைந்து மாதவிடாய் சுழற்சி வரும். மாதவிடாய் மாத்திரைகள் இப்படி தான் செயல்படுகிறது

மாதவிடாய் தள்ளிப்போக மாத்திரை எடுக்கும் போது சில நேரங்களில் மார்பு வலி, மாதவிடாய் வலி, அதிக உதிரபோக்கு, சிலருக்கு மாதவிடாய் வராத நிலை (ஒரு வருடம் வரை கூட மாதவிடாய் சுழற்சி ) வராமல் போகலாம். இந்த மாத்திரைகள் மூளையில் தொடங்கி தைராய்டு வழியாக கருப்பைக்கு போகக்கூடிய ஆயிரக்கணக்கான சிக்னல்களையும் செய்கைகளையும் தடுக்கும் விஷயமாகத்தான் இது பார்க்கப்படுகிறது.

இதனால் சில நேரங்களில் சினைமுட்டைகளில் கட்டி, அதிக உடல் பருமன், கருப்பை கட்டி, கருமுட்டை வளர்ச்சி சீராக இல்லாத நிலை,தூக்கமின்மை, மன குழப்பம் போன்ற பிரச்சனைகள் எதிர்கொள்ள வாய்ப்புண்டு.

 

மாத்திரைகள் எடுப்பதால் தானே பக்கவிளைவுகள் வரும். இயற்கையான வழிமுறைகள் உண்டா என்று கேட்கலா. இதற்கு சித்த மருத்துவத்தில் 14 வேகங்கள் அடக்க கூடாது என்று வகுத்திருக்கிறார்கள். எப்படி சிறுநீர் அடக்க கூடாது மலம் அடக்க கூடாது. தும்மல் அடக்க கூடாது என்று சொல்கிறார்களோ அப்படிதான் இயற்கையாக உடலிலிருந்து வெளியேறும் உதிரபோக்கின் காலத்தை அடக்கவும் கூடாது.

இயற்கையான சுழற்சி முறையை எதிர்த்து செய்வது உடலின் செயல்பாடுகளை மாற்றி அமைக்கவும். மாத்திரைகள் இல்லாமல் இயற்கையான முறையிலும் கூட மாதவிடாயை தள்ளிபோடக்கூடாது என்பதை பெண்கள் புரிந்துகொள்ள வேண்டாம்.

இன்றைய நிலையில் மாதவிடாய் சுழற்சி யை தள்ளிபோடுவது உங்களுக்கு சுலபமாக இருந்தாலும் இது பின்நாளில் குழந்தையின்மை பிரச்சனையை உண்டு செய்யலாம். இயன்றவரை மாதவிடாய் சுழற்சியை தள்ளிப்போட செய்யும் விஷயங்களை இனி தவிர்ப்பதே உங்கள் ஆரோக்கியத்துக்கு நல்லது.




மாதவிடாய் தள்ளிபோக மாத்திரையா இயற்கை முறையா எது சிறந்தது

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு