கண்டி, பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் திங்கட்கிழமை (04) நடைபெற்றுவரும் ஆசிய கிண்ண ஏ பிரிவு கடைசி லீக் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட நேபாளம் 48.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 230 ஓட்டங்களைப் பெற்றது.
இந்தியாவும் நேபாளமும் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் சந்தித்துக்கொண்டது இதுவே முதல் தடவையாகும்.
சில தினங்களுக்கு முன்னர் முதல்தானில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 104 ஓட்டங்களுக்கு சுருண்ட நேபாளம் இந்தியாவுடனான போட்டியில் பெரும் முன்னேற்றத்தை வெளிப்படுத்தியது.
இந்தியாவின் மிக மோசமான களத்தடுப்பின் காரணமாகவே நேபாளம் இந்த மொத்த எண்ணிக்கையைப் பெற்றது.
2 பந்துகளில் 2 பிடிகள் உட்பட முதல் 5 ஓவர்களில் இந்தியா மிக இலகுவான 3 பிடிகளைக் கோட்டை விட்டது.
மொஹமத் ஷமி வீசிய முதலாவது ஓவரின் கடைசிப் பந்தில் குஷால் பூட்டெல் கொடுத்த பிடியை 1ஆவது ஸ்லிப் நிலையில் ஷ்ரேயாஸ் ஐயர் தவறவிட்டார்.
அடுத்த ஓவரில் மொஹமத் சிராஜ் வீசிய முதலாவது பந்தில் ஆசிப் ஷெய்க் கொடுத்த இலகுவான பிடியை விராத் கோஹ்லி கோட்டை விட்டார்.
5ஆவது ஓவரில் மொஹமத் ஷமியின் 4ஆவது பந்தில் பூட்டெல் கொடுத்த மற்றொரு இலகுவான பிடியை விக்கெட் காப்பாளர் இஷான் கிஷான் கோட்டை விட பந்து பவுண்டறியை நோக்கிச் சென்றது.
இவ்வாறாக 3 பிடிகள் தவறவிடப்பட்டதை சாதமாக்கிக்கொண்ட நேபாளம் 200 ஓட்டங்களுக்கு மேல் பெற்று இந்தியாவுக்கு 231 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
நேபாளம் சார்பாக குஷால் பூட்டெல் (38), ஆசிப் ஷெய்க் (58) ஆகிய இருவரும் 65 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறப்பான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.
மத்திய வரிசையில் குல்சான் ஜா (23), தீப்பேந்த்ரா சிங் அய்ரீ (29), சோம்பால் கமி (48) ஆகியோரும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி மொத்த எண்ணிக்கைக்கு வலு சேர்த்தனர்.
7ஆவது விக்கெட்டில் அய்ரியுடன் 50 ஓட்டங்களைப் பகிர்ந்த கமி, 8ஆவது விக்கெட்டில் சந்தீப் லமிச்சானுடன் மேலும் 34 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.
பந்துவீச்சில் ரவிந்த்ர ஜடேஜா 40 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் மொஹமத் சிராஜ் 61 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
0 Comments
No Comments Here ..