17,Mar 2026 (Tue)
  
CH

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரிடம் ஈழத்தமிழர் இனப்படுகொலைக்கு சர்வதேச நீதி..

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், இலங்கை வந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க்கிடம் ஈழத்தமிழர்கள் மீதான இனப்படுகொலை மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்குப் பொறுப்புக்கூறலை உறுதிசெய்ய சர்வதேச விசாரணைக்கு வழிசெய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளார். இனமேலாதிக்கம் நிறைந்த இலங்கைத் தீவில் உள்ளகப் பொறிமுறைகள் சாத்தியமற்றது என்பதால் இக்கோரிக்கையை முன்வைத்துள்ளார்.


இந்தச் சந்திப்பு இன்று மாலை கொழும்பில் நடைபெற்றது. இச்சந்தர்ப்பத்தில், 2021 ஜனவரி 15 அன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன், திருமலை மாவட்ட ஆயர் வண.நோயல் இம்மனுவல், வணபிதா ஆம்ஸ்ரோங் அடிகளார், சிவில் சமூக பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கையொப்பமிட்டு ஐக்கிய நாடுகள் சபையின் 47 உறுப்பு நாடுகளின் தலைவர்களுக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிடப்பட்ட விடயங்களை சிறீதரன் எம்.பி. மேற்கோள் காட்டி தனது கோரிக்கையை முன்வைத்தார். அவர் தனது கோரிக்கையை எழுத்துமூலமாகக் கையளித்துள்ளார்.


சிங்கள-பௌத்த பெரும்பான்மைவாதம்: 1948 இல் இலங்கை சுதந்திரம் பெற்றதிலிருந்து, அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் சிங்கள-பௌத்த பெரும்பான்மைவாதத்தை நிறுவனமயமாக்கி, ஈழத்தமிழர்களின் அடையாள வாழ்வைச் சிதைத்து, சுயாட்சி மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை முற்றிலுமாக இல்லாமற் செய்தன.


ஆயுத மோதலும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையும்: ஈழத்தமிழர்களால் நீண்டகாலமாக முன்னெடுக்கப்பட்ட அமைதியான ஜனநாயக எதிர்ப்புப் போராட்டங்கள் கொடூரமாக அடக்கப்பட்டதைத் தொடர்ந்து ஆயுத மோதல் ஏற்பட்டது. இதன் உச்சமாக, 2009 மே மாதத்தில் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை என்ற இனப் பேரவலம் நிகழ்ந்தது.


போருக்குப் பின்னரும் தமிழர் தாயகப் பகுதிகள் இராணுவமயமாக்கப்பட்டு, நில அபகரிப்புகள், மக்கள்தொகை மறுசீரமைப்பு, பொருளாதாரப் புறக்கணிப்பு மற்றும் கலாசார அழிப்பு ஆகியவை தமிழ்த் தேசியத்தை அழிப்பதற்கான ஆயுதங்களாக அரசாலும், அரச படைகளாலும் தொடர்ந்தும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போதைய ஆட்சியும் இந்த அடக்குமுறை நடவடிக்கைகளை நிறுத்தவோ அல்லது மாற்றியமைக்கவோ எந்த அர்த்தமுள்ள நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.


ஐ.நா. தீர்மானங்கள் போதாது: மனித உரிமைகள் பேரவையின் 30/1 (2015) மற்றும் 46/1 (2021) தீர்மானங்கள் உள்ளிட்ட தொடர்ச்சியான தீர்மானங்களை இலங்கை ஏற்றுக்கொண்டாலும், அவை பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளையும், செய்யப்பட்ட குற்றங்களின் வீரியத்தையும் ஈடுசெய்யப் போதுமானதல்ல என்பதையும் அவர் டர்க்கின் கவனத்திற்குக் கொண்டுவந்தார்.


இலங்கை அரசு, OHCHR-ன் OSLAP திட்டத்தை அணுகுவதைத் தொடர்ந்து மறுக்கிறது. இனப்படுகொலை, போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் குறித்த ஆதாரங்களைச் சேகரிப்பதற்கான சர்வதேச முயற்சிகளையும் தடுக்கிறது.


இத்தகைய உள்ளக அரசியல் நிலைமாற்றங்களைக் கடந்து, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையானது தீர்மானங்களுக்கு அப்பால் சென்று, தமிழினப் படுகொலை விவகாரத்தை ஐ.நா. பொதுச் சபைக்கும், ஐ.நா. பாதுகாப்பு பேரவைக்கும், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கும் கொண்டுசெல்லும் தெளிவான குறிக்கோளுடன் கூடிய சர்வதேச நீதிப் பொறிமுறை ஒன்றைச் செயற்படுத்த வேண்டும் என சிறீதரன் எம்.பி. கோரினார்.


நீதிக்கான பாதைகளைத் திறப்பதில் ஏற்படும் தாமதம், இலங்கை அரசுக்கும் தமிழினப் படுகொலையாளிகளுக்கும் தண்டனையிலிருந்து தப்பிப்பதற்கான தைரியத்தை அதிகரிக்கும் என்றும், அதேசமயம் ஈழத்தமிழர்கள் தங்கள் தாயகத்தில் ஒரு தேசமாக அழிக்கப்படுவதையும் துரிதப்படுத்தும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். எனவே, நீதி, உண்மை மற்றும் பொறுப்புக்கூறல் என்பவை தாமதிக்கப்படாதிருப்பதை டர்க்கின் கொள்கை ரீதியான தலைமைத்துவம் உறுதிசெய்ய வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.


இந்தச் சந்திப்பு இலங்கையில் மனித உரிமைகள் மற்றும் இன நல்லிணக்கம் தொடர்பான சர்வதேச அழுத்தங்களை மேலும் அதிகரித்துள்ளது.











ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரிடம் ஈழத்தமிழர் இனப்படுகொலைக்கு சர்வதேச நீதி..

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு