15,Jun 2026 (Mon)
  
CH

இலங்கை அமைச்சர் இந்திய மீனவர்களுக்கு எச்சரிக்கை: அத்துமீறினால் கைது நிச்சயம்

இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழையக்கூடாது என இலங்கை கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கடுமையாக எச்சரித்துள்ளார். அவ்வாறு அத்துமீறினால் அவர்கள் உடனடியாகக் கைது செய்யப்படுவார்கள் என்றும், படகுகள் பறிமுதல் செய்யப்படும் என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.


நேற்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் சந்திரசேகர், மூன்று மாதங்களுக்குப் பிறகு மீண்டும் இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களின் படகுகள் கைப்பற்றப்பட்டதை உறுதிப்படுத்தினார். இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்ததாலேயே இந்தக் கைதுகள் இடம்பெற்றதாகவும் அவர் தெரிவித்தார்.


"தயவுசெய்து எமது கடற்பரப்புக்குள் வரவேண்டாம் என இந்திய மீனவர்களிடம் கேட்டுக்கொள்கின்றோம்," என்று அமைச்சர் கூறினார். அத்துடன், ரோலர் படகு போன்ற தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைகளைப் பயன்படுத்த வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.


இந்திய மீனவர்களின் செயல்களைக் கடுமையாகக் கண்டித்த அமைச்சர், "எமது மீனவர்களின் வாழ்வாதாரத்தை நாசமாக்கிவிட்டு, கடல்வளங்களை அழித்துவிட்டு எம்மை தொப்புள்கொடி உறவுகள் எனக் கூறுவதில் பயனில்லை. இனியும் அந்த விளையாட்டு வேண்டாம்," என்று தெரிவித்தார்.


"எமது கடற்பரப்புக்குள் வரவேண்டாம். வந்தால் கைது செய்யப்படுவீர்கள். உடமைகள் பறிமுதல் செய்யப்படும்," என்று கூறி தனது எச்சரிக்கையை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.


மைலிட்டியில் 124க்கும் மேற்பட்ட இழுவைப் படகுகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அவை குறித்து ஓரிரு நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.




இலங்கை அமைச்சர் இந்திய மீனவர்களுக்கு எச்சரிக்கை: அத்துமீறினால் கைது நிச்சயம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு