முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், "பிள்ளையான்" என அழைக்கப்படும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர், 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் முழுமையாக அறிந்திருந்தார் என தற்போதைய விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
இன்று (ஜூலை 09) பாராளுமன்றத்தில் நடைபெற்ற சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் இந்த அதிர்ச்சித் தகவலை வெளியிட்டார். பிள்ளையான், மட்டக்களப்பு சிறைச்சாலையில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த காலப்பகுதியிலேயே ஏப்ரல் 21 தாக்குதலை நடத்த திட்டமிடப்பட்டிருந்தமை குறித்து முழுமையாக அறிந்திருந்தார் என அமைச்சர் ஆனந்த விஜேபால சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, 2018 ஆம் ஆண்டு மட்டக்களப்பு, வவுணதீவு பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த காவல்துறை உத்தியோகத்தர்கள் கொல்லப்பட்டமைக்கும், ஏப்ரல் 21 தாக்குதலுக்கும் தொடர்புள்ளதென அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்றத்தில் குறிப்பிட்டார்.
மேலும், ஏப்ரல் 21 தாக்குதல் சம்பவம் தொடர்பில் செனல் 4 ஊடகத்திற்கு பல தகவல்களை வழங்கிய பிள்ளையானின் நெருங்கிய சகாவான அசாத் மௌலானாவை நாட்டிற்கு அழைத்து வந்து விசாரணைகளை முன்னெடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
இந்தத் தகவல்கள், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகளில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
0 Comments
No Comments Here ..