12,Jul 2025 (Sat)
  
CH

விடுதலைப் புலிகளின் காலத்தை விடவும் மோசமாகிவிட்டது: சாகர காரியவசம் குற்றச்சாட்டு

இலங்கையின் தேசியப் பாதுகாப்பு விடுதலைப் புலிகளின் (LTTE) காலத்தை விடவும் தற்போது மிக மோசமான நிலைக்குச் சென்றுள்ளது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டியுள்ளார். நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை குறித்து கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.


"நாட்டின் தேசியப் பாதுகாப்பு தற்போது வரலாறு காணாத அச்சுறுத்தலுக்குள் தள்ளப்பட்டுள்ளது. நீதிமன்றத்துக்குள்ளேயே துப்பாக்கிச்சூடுகள் இடம்பெறுகின்றன. பொலிஸார் முன்னிலையிலேயே துப்பாக்கிச்சூடு நடத்தப்படுகின்றது. வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து படுகொலைகள் இடம்பெறுகின்றன," என்று சாகர காரியவசம் கவலை தெரிவித்தார்.


மேலும், "ஆனால், ஆயுதக் குழுக்களின் உறுப்பினர்களே உயிரிழக்கின்றனர் எனக் கூறி இந்தப் படுகொலைகளை நியாயப்படுத்துவதற்கு அரசு முற்படுகின்றது," என்றும் அவர் குற்றஞ்சாட்டினார். சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதற்கே மக்கள் ஒரு அரசைத் தெரிவு செய்கின்றனர் என்பதை சுட்டிக்காட்டிய அவர், கொலை செய்யப்படுபவர்கள் யார் என்பதை விட, எதற்காக இவ்வாறான படுகொலைகள் இடம்பெறுகின்றன என்பதே பிரதானமான விடயம் என வலியுறுத்தினார்.


"எதிர்க் கருத்துக்கள் உடையவர்களைக் கட்டுப்படுத்த முடியாதபோது, அவர்களைப் படுகொலை செய்துவிடும் ஆட்சியைப் பாசிசவாத ஆட்சி என்றே அழைப்பார்கள். ஆதலால், இலங்கையில் தற்போது இடம்பெற்றுவரும் ஆட்சி தொடர்பில் எமக்குப் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. ஏனெனில், விடுதலைப் புலிகளின் காலத்தில்கூட இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறவில்லை," என்று சாகர காரியவசம் தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தினார்.





விடுதலைப் புலிகளின் காலத்தை விடவும் மோசமாகிவிட்டது: சாகர காரியவசம் குற்றச்சாட்டு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு