சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ, ஆயுர்வேதத் துறையில் அங்கீகரிக்கப்பட்ட 304 வைத்தியர்களுக்கு நியமனங்களை விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் தையிட்டி சித்த போதனா வைத்தியசாலையின் ஆய்வைத் தொடர்ந்து நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.
ஆயுர்வேதத் துறையில் 1,000க்கும் மேற்பட்ட வைத்தியர்கள் இருந்தாலும், அனைவரையும் அரசாங்கப் பணியில் இணைப்பது சாத்தியமில்லை என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார். இருப்பினும், இன்டர்ன்ஷிப் பயிற்சிக்குப் பின்னர் உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ பணி வாய்ப்புகள் வழங்கப்படும் என அவர் உறுதி அளித்தார். மேலும், சில ஆயுர்வேத வைத்தியர்களை சுற்றுலாத் துறையுடன் இணைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கையில் மேற்கத்திய மருத்துவத்துடன் ஆயுர்வேதம், சித்தம் மற்றும் யுனானி போன்ற பாரம்பரிய மருத்துவ முறைகளும் சுகாதார அமைச்சின் கீழ் இயங்குகின்றன. இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் உள்ளூர் மருத்துவத்திற்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். இந்தத் துறைகள் புறக்கணிக்கப்படாமல், அனைத்து மருத்துவ முறைகளுக்கும் உரிய முக்கியத்துவம் வழங்குவது தனது பொறுப்பு என்றும், இவை குறைவாக கவனிக்கப்படும் துறைகள் அல்ல என்றும் அவர் வலியுறுத்தினார்.
0 Comments
No Comments Here ..