ஜூன் 12 அன்று அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமான விபத்தில், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய விஸ்வாஸ் குமார் (40), இன்னும் விபத்தின் அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் தவிக்கிறார். இந்த விபத்தில் 241 விமானப் பயணிகளும், ஊழியர்களும், மேலும் மருத்துவக் கல்லூரி விடுதியில் இருந்த 19 மாணவர்களும் உயிரிழந்தனர்.
விமானத்தின் 11ஏ இருக்கையில் பயணித்த விஸ்வாஸ் குமார் ரமேஷ், விபத்தில் காயமடைந்து அகமதாபாத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அங்கு பிரதமர் மோடி அவரைச் சந்தித்து ஆறுதல் கூறினார். பிரித்தானியாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விஸ்வாஸ், தனது குடும்பத்தினரை சந்திக்க இந்தியா வந்து திரும்பும் வழியிலேயே இந்த விபத்தில் சிக்கியுள்ளார். துரதிர்ஷ்டவசமாக, அவரது சகோதரர் இந்த விபத்தில் உயிரிழந்தார்.
விபத்துக்குப் பிறகு விஸ்வாஸ் குமாரால் யாரிடமும் பேச முடியவில்லை என்று அவரது உறவினர் தெரிவித்துள்ளார். விபத்தில் இருந்து தப்பியது, சகோதரரின் மரணம், மற்றும் விபத்து நடந்த இடத்தில் அவர் கண்ட காட்சிகள் ஆகியவை அவரைப் பெரிதும் பாதித்துள்ளன. இதனால் அவர் நள்ளிரவில் தூக்கத்தில் இருந்து திடீரென எழுந்து, மன அழுத்தத்தால் தூங்க முடியாமல் தவிக்கிறார்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, விஸ்வாஸ் குமார் மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்லப்பட்டார். சகோதரர் உயிரிழந்த சோகத்தில் இருந்தும், விபத்தின் அதிர்ச்சியில் இருந்தும் அவரை மீட்க குடும்பத்தினர் தீவிரமாக முயற்சித்து வருகின்றனர். அவர் லண்டன் திரும்புவது பற்றி இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை, தற்போதுதான் மனநல சிகிச்சை தொடங்கப்பட்டுள்ளது.
0 Comments
No Comments Here ..