செம்மணி புதைகுழி விவகாரத்துக்குத் துரித நீதி வேண்டும் என வலியுறுத்தி யாழ். மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று (வெள்ளிக்கிழமை) அடையாளப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இந்த போராட்டத்தின் போது, தமிழர் அரசியல் பிரச்சினை தீர்க்கப்படாது நீண்டுகொண்டு செல்வதற்கு பிரித்தானியாவே பொறுப்புக்கூற வேண்டும் என அகில இலங்கை மக்கள் எழுச்சிக் கட்சியின் செயலாளர் அருள் ஜெயந்திரன் வலியுறுத்தினார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:
இன்று தமிழர் பிரதேசங்களில் மனித புதைகுழிகளில் எலும்புக்கூடுகள் அகழப்பட்டு வருகின்றன. இவை அனைத்தும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் எச்சங்களாகவே இருக்கும் என எண்ணத் தோன்றுகிறது.
இலங்கைக்கு 1948 இல் சுதந்திரம் கிடைத்தபோது, தமிழ், சிங்கள இனங்களுக்கிடையே அரசியல் இழுபறி இருந்துவந்தது. ஆனாலும் அதை பிரித்தானிய அரசோ, அப்போது இருந்த தமிழ் தலைவர்களோ கண்டுகொள்ளவில்லை. அப்போது இருந்த தமிழ் தலைவர்களும், சிங்கள தலைவர்கள் வழங்கிய சலுகைகளுக்கு இசைவாகி அவற்றைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டனர்.
இந்நிலையில், இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு, உள்நாட்டு விசாரணை ஏற்றுக்கொள்ளப்படாத ஒன்றாகக் காணப்படுகிறது. அதேபோன்று சர்வதேச விசாரணையும் வலுவிழந்து காணப்படுகின்றது. எனவே, தமிழ் மக்களின் உரிமைசார் அரசியல் பிரச்சினைக்கு பிரித்தானிய அரசே தீர்வை வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
0 Comments
No Comments Here ..