02,Aug 2025 (Sat)
  
CH

ஓய்வூதியம் இரத்து செய்யப்படும் - அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவிப்பு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்கான சட்டமூலம் விரைவில் நிறைவேற்றப்படும் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தி ஆட்சியின் கீழ் ஊழல் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் எனவும் அவர் வலியுறுத்தினார்.


நெடுந்தீவுக்கு வெள்ளிக்கிழமை (ஜூலை 18) விஜயம் செய்த அமைச்சர், மக்கள் அமைப்புகள் மற்றும் மீனவ சங்கப் பிரதிநிதிகளைச் சந்தித்து, அவர்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்தார். அதைத் தொடர்ந்து நெடுந்தீவுப் பகுதியில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் குறித்தும் அவர் விளக்கமளித்தார்.


அமைச்சர் சந்திரசேகர் மேலும் கூறுகையில், "தேசிய மக்கள் சக்தி ஆட்சியின் கீழ் ஊழல்வாதிகள் மற்றும் மோசடியாளர்கள் தப்பவே முடியாது. ஊழல் அரசியல் கலாச்சாரத்துக்கு முடிவு கட்டவே நாம் ஆட்சிக்கு வந்தோம். அதற்கே மக்கள் ஆணை வழங்கியுள்ளனர். அதற்கமைய, ஊழல்களில் ஈடுபட்ட மோசடியாளர்கள் தற்போது சட்டத்தின் பிடிக்குள் சிக்கியுள்ளனர்." என்றார்.


சட்ட விவகாரங்களில் தாம் தலையிடுவதில்லை என்றும், சட்டம் தனது கடமையைச் செய்யும் என்றும் அவர் தெளிவுபடுத்தினார். மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளைக் கட்டம் கட்டமாக நிறைவேற்றுவோம் என்றும், இது குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார். ஐந்தாண்டு காலப்பகுதியில் வழங்கப்பட்ட உறுதிமொழிகளை ஒரே இரவில் நிறைவேற்றிவிட வேண்டும் என சிலர் நினைப்பது தவறு என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.


"வறுமையின் கோரப்பிடியில் இருந்து மக்களை மீட்பதற்காக சமூக சக்தி வேலைத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. அரசியல், பொருளாதார மற்றும் சமூக மேம்பாடே எமது இலக்கு. அந்தச் சமூக மேம்பாட்டுத் திட்டத்தில் வறுமை நிச்சயம் ஒழிக்கப்படும். அதற்குரிய வேலைத்திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன" என அமைச்சர் சந்திரசேகர் மேலும் தெரிவித்தார்.


இந்த நடவடிக்கைகள் இலங்கையின் நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையையும், மக்கள் நலனையும் மையமாகக் கொண்ட ஒரு மாற்றத்தைக் கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.





ஓய்வூதியம் இரத்து செய்யப்படும் - அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவிப்பு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு