திருகோணமலை - சம்பூர் கடற்கரையை அண்மித்த பகுதியில் நிலக்கீழ் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கையின் போது, இன்று (ஜூலை 20) சில மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவத்தையடுத்து, குறித்த பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து நீதவானுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதையடுத்து, அவர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த நிலையில், எதிர்வரும் ஜூலை 23 ஆம் திகதி குறித்த பகுதியில் முழுமையான விசாரணைகளை ஆரம்பிக்க நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார். அதற்கமைய, மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்ட பகுதியில் காவல்துறையினர் தற்போது பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.
மூதூர் சம்பூர் கடற்கரையோர பகுதியில் கடந்த வியாழக்கிழமை (ஜூலை 17) நிலக்கீழ் கண்ணிவெடி அகழும் பணி ஆரம்பிக்கப்பட்டது. சம்பூர் படுகொலையின் நினைவாக அமைக்கப்பட்ட தூபியை அண்மித்த பகுதியில் அகழ்வுப் பணி மேற்கொண்ட போதே இந்த மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தக் கண்டுபிடிப்பு, கடந்தகால சம்பவங்கள் தொடர்பான மேலும் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்த விசாரணை மூலம் மேலும் தகவல்கள் வெளிவருமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
0 Comments
No Comments Here ..