05,May 2024 (Sun)
  
CH
கட்டுரைகள்

வரலாறு கூறும் தாராசுரம்

கும்பகோணம்; எனது தென்னிந்தியப் பயணத்தில் நான் ஆச்சரியத்தோடு பார்த்து ரசித்த அழகியலும் சீரும் நிறைந்த ரம்யமான ஊர். சனநெரிசல் கொண்ட கடைத்தெருக்களிலும்கூட புனிதம் பேணப்படும் இடம். எல்லாவற்றிலுமே ஓர் ஒழுங்கு, அணிசேர்த்து நிற்கும் சுறுசுப்பான நகரம். சோழர்களின் சுவடுகளைத் தேடித்தேடி பார்க்கவேண்டும் என்ற காரணமே எனது கும்பகோண பயணத்தின் நோக்கம்.

ஆரம்பகாலத்தில் குடந்தை என்று அழைக்கப்பட்ட இந்தக் கோவில் நகரம் சோழர்களின் பெரும்பாலான வரலாற்றுத் தடங்களை இணைக்கின்ற தலங்களின் நடுநாயகமாகத் திகழ்கிறது. கும்பகோணத்தில் ஓரிரு நாட்கள் தங்கியிருந்தால், உலகப் பிரசித்திபெற்ற மகாமாகக் குளத்தை தன்னகத்தே கொண்டுள்ள எழில்மிகு நகரையும் அதனை அண்மித்த சோழர்களின் சுவடுகளையும் பார்த்து ரசிக்கலாம்.

ஆனால், இவற்றுக்கு விதிவிலக்காக, இரண்டாவது ராஜ ராஜ சோழனால் உருவாக்கப்பட்டு சரித்திரப் புகழ்பெற்று விளங்கும் தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவிலை கண்டு ரசிக்க ஒரு நாள் போதாது. அக்கோவிலில் உள்ள கலையம்சங்களையும், செதுக்கல் வேலைப்பாடுகளையும், அவை கூறும் வரலாற்றுக் கதைகளையும், நுணுக்கமான படைப்புக்களையும் கண்டுகளிக்க தாராளமாக நேரத்தைச் செலவழிப்பதும் தகும்.

கும்பகோணத்திலிருந்து சுமார் நான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ள இக்கோவில் பன்னிரண்டாம் நூற்றாண்டளவில் கட்டப்பட்டது. சிவபக்தச் செல்வர்களாக விளங்கிய சோழ மன்னர்கள் பரம்பரையில் வந்த இரண்டாம் ராஜ ராஜ சோழன், தனது தலைநகரை கங்கைகொண்ட சோழபுரத்தில் இருந்து பழையாறைக்கு மாற்றி அதற்கு ராஜ ராஜ புரம் என பெயரிட்டான்.

அதுவே பின்நாளில் தாராசுரம் ஆயிற்று. இது முற்காலச் சோழர்களின் தலைநகராக விளங்கிய பழையாறை என்பதும் குறிப்பிடத்தக்கது.

சோழர்களால் நிர்மாணிக்கப்பட்ட கலைவெளிப்பாடுகள் செறிந்த கோவில்களில் முதன்மையானதாக இதனைக்கொள்ளலாம். சேக்கிழாரைக் கொண்டு இரண்டாம் குலோத்துங்க சோழன் அறுபத்து மூன்று நாயன்மார்களின் வாழ்க்கை வரலாற்றை பெரிய புராணமாக இயற்றச்செய்தான்.

தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோவிலைக் கட்டிய அவனது மகனான இரண்டாம் இராஜ ராஜ சோழன் அறுபத்து மூன்று நாயன்மார்களையும் இக்கோவிலில் சிற்பங்களாகச் செதுக்கச் செய்துள்ளான். இக்கோவிலின் கலைச் சிறப்பு மேலோங்கி இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.

இக்கோவிலில் அமைக்கப்பட்டுள்ள சிற்ப வேலைப்பாடுகள் பல தமிழ் மக்களின் வரலாற்று, கலாசார தொடர்புகளை சித்தரிப்பதாக அமைக்கப்பட்டுள்ளது. தமிழர் தங்கள் வரலாற்றில் கடைப்பிடித்துவந்த வாழ்வியல், கலை, கலாசாரம் போன்றவை காலத்தால் அழியாது காத்திருக்கும் நிகழ்கால உசாத்துணைகளாகவே இக்கோவில்களை காண முடிகிறது.

எதிர்காலத்தில் வருகின்ற தமிழ்ச் சமூகம் தங்களது முன்னோர்களின் கலாச்சாரப் பெறுமானம் கொண்ட வாழ்வியலை அறிந்து அதன்படி ஒழுகவேண்டி அவர்கள் அவ்வாறான பதிவுகளை அக்கோவில்களில் செய்திருக்க வேண்டும்.

இக்கோவில் அர்த்தமண்டபம், முகமண்டபம், ராஜகம்பீர மண்டபம், கருவறை மண்டபம் என்ற நான்கு பகுதிகளைக் கொண்டது. இம்மண்டபங்கள் தோறும் அடிப்பகுதி, தூண்கள், விமானப் பகுதியென மூன்று பகுதிகளிலும் சிற்பங்கள் நிறைந்து காணப்படுகின்றன.

அவற்றில் நடனக் காட்சிகள், போர் நிகழ்வுகள், மத நிகழ்வுகள், ரிஷிகள், விலங்குகள், கற்பனை உருவங்கள் போன்றவை சிற்பங்களாகசெதுக்கப்பட்டுள்ளன. கருவறை மண்டபத்தின் வெளிப்புறச் சுவரிலே அறுபத்து மூன்று நாயன்மார்களின் உருவங்களும் வரிசையாக அமைந்துள்ளன.

முற்காலத்தில் சைவ சமயத்தின் செழிப்பில் முக்கிய பங்கை நாயன்மார்கள் வகித்தமையே அதற்கான காரணம். கோவில்களில் கடவுளரை மட்டுமே சிற்பங்களாகச் செதுக்கும் வரைமுறையில், சமய மறுமலர்ச்சிக்காகப் பாடுபட்ட நாயன்மார்கள், மக்களின் சிறந்த வாழ்க்கை முறைகள், கலாச்சாரம், ராச்சியங்களின் சிறப்பை எடுத்துரைக்கும் அம்சங்கள், அக்காலத்தில் புழங்கிய இசைக் கருவிகள், கலைஞர்கள் மற்றும் கலை தொடர்பான சிற்பங்கள் போன்றவற்றையும் உள்ளடக்கி, தாங்களால் கட்டப்பட்ட கோவில்களை சோழர்கள் அறிவுப் பெட்டகங்களாகவே அமைத்துள்ளனர்.

சோழர் காலத்தில் வாழ்ந்த பெண்கள், சமூகம் மற்றும் அரசியல் தொடர்பான விடயங்களில் எவ்வாறான பங்களிப்பைச் செய்தனர் என்பதும் இங்கே இடம்பெறத் தவறவில்லை. இது இன்றைய காலகட்டத்தில் வாழ்கின்ற பெண்களுக்கு ஓர் முன்னுதாரணம் என்பதில் இருவேறு கருத்துக்கள் இருக்க இயலாது.

இந்திரனின் வாகனமான ஐராவதம் என்கின்ற வெள்ளை நிற யானை துருவாசர் கொடுத்த சாபத்தினால் தனது நிறத்தை இழந்து, தாராசுரம் கோவிலிலுள்ள சிவனை வழிபட்டதனாலேயே தனது நிறத்தை மீளப் பெற்றதாக சொல்லப்படுகிறது. அதனாலேயே இக்கோவில் ஐராவதேஸ்வரர் கோவில் என அழைக்கப்படுகிறது.

பெயர்க்காரணம் தவிர, இக்கோவிலில் சோழர் காலத்தில் யானைகளின் வகிபாகம் புலப்படுமாறு சிற்பங்களும் அமைக்கப்பட்டுள்ளன. ராஜகம்பீர மண்டபத்தில் காணப்படும் படிகளின் இரண்டு பக்கங்களிலும் இவ்விரண்டு யானைகள் தேர்போன்ற அமைப்புடைய அம்மண்டபத்தை இழுத்துச் செல்வதுபோலவும், இன்னும் ஒரு யானை போர்க்களத்தில் வாலை உயர்த்தியபடி ஓடிச் செல்வது போலவும் அமைக்கப்பட்டுள்ளது.

அவை சோழர்களின் செல்வச் செழிப்பையும், அவர்களது படைகள் மற்றும் போர்களில் பயன்படுத்தப்பட்ட யானைகளின் சிறப்பையும் கூறுவதாக அமைகின்றன. 1178 இல் தமிழகத்திற்கு வந்த சீனப் பயணி சாவ் ஷூ கா சோழர்களின் யானைப் படையைப் பற்றி விவரிக்கின்றார். சோழர்களிடம் சுமார் அறுபதினாயிரத்திற்கும் மேற்பட்ட யானைகள் இருந்ததாகவும், போர் வீரர்கள் யானைமீது ஏறி அம்பெய்திப் போர் செய்ததாகவும், போரில் சாதனைகள் புரிந்த யானைகளுக்கு சிறப்புப் பட்டங்கள் அளிக்கப்பட்டதாகவும் கூறுகிறார்.

ஆகவே, எமது முன்னோர்களின் வீரம், அவர்களது செல்வாக்கு, அவர்ளது படைபலம் போன்றவற்றின் தன்மையை இதன்மூலம் ஊகிக்கலாம். அதன் பொருட்டே இக்கோவிலில் யானைகளின் உருவங்கள் சிறப்போடு செதுக்கப்பட்டுள்ளன.

சிற்பச் சிறப்புக்களையும், சிற்பியின் கலைநுட்பங்களையும் மட்டுமே கண்டுகளிப்பதோடு எமது தேடல் நின்றுவிடக்கூடாது என்பதே இவ்வாறான கோவில்கள் எமக்குச் சொல்லித்தரும் பாடம் என்றே சொல்லவேண்டும். கோவில்களை வெறுமனே ஒரு வழிபாட்டுத் தலமாகவே பார்க்கின்ற இக்காலத்தில், இவ்வாறான கோவில்கள் கட்டப்பட்டதன் நோக்கம் அதுமட்டுமல்ல, என்ற உண்மையை உரக்கச் சொல்வது உசிதம்.

சோழர்களின் கோவில்கள் கல்விக்கூடங்களாகவும், முகாமைத்துவ நிலையங்களாகவும், அறப்பணி செய்யும் தலங்களாகவும், கலை வளர்க்கும் சாலைகளாகவும் பயன்படுத்தப்பட்டு வந்தமையையும், அவ்வாறு எமது முன்னோர்கள் வகுத்தளித்த வாழ்க்கை முறையை நாம் அறிந்து பின்பற்றும் பொருட்டு அவற்றை கலைவடிவங்களாக ஆவணப்படுத்திச் சென்றிருக்கின்றமையும் தமிழனின் பெருமையை வாய் வார்த்தையாகச் சொல்லி மார்தட்டிவிட்டு, மேலைத்தேய கலாச்சாரத்தை மோகக்கண்கொண்டு பார்க்கும் இன்றைய தமிழ்ச் சமுதாயத்தின் வேடிக்கை நிலையைக் கேள்வி கேட்பதாகவே உள்ளது.

கலாசாரப் பெறுமதிவாய்ந்த நமது முன்னோர்கள் வாழ்வியலின் பெருமையுணர்ந்து, கற்றுத் தேர்ந்து, அந்நிய சக்திகளின் ஆக்கிரமிப்புக்களால் நசுக்கப்பட்டு வாழும் அவலத்திலிருந்து தமிழ்ச் சமூகம் தலைமிர்ந்து வாழும் நாளில்தான், தாராசுரம் போன்ற முதுசங்களை எமக்காய் விட்டுச்சென்ற எமது மூதாதையர் ஆன்மாக்கள் தங்கள் உழைப்பின் பேறை உண்மையாக உணர்ந்து வாழ்த்தும்.






வரலாறு கூறும் தாராசுரம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு