தமிழகம் முழுவதும், உரிமம் இல்லாமல் செயல்பட்ட சுமார் 400 குடிநீர் ஆலைகளுக்கு அதிகாரிகள் அதிரடியாக 'சீல்' வைத்து உள்ளனர். கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் போராட்டம் ஐந்தாவது நாளை எட்டியுள்ளதால் கேன் குடிநீர் விலை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது.
தமிழகம் முழுவதும் 1,689 கேன் குடிநீர் உற்பத்தி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில், முறையாக அனுமதி பெற்று இயங்கி வரும் 568 நிறுவனங்களை தவிர சட்டவிரோதமாக நிலத்தடி நீரை உறிஞ்சி விற்பனை செய்து வரும் நிறுவனங்களை இன்றைக்குள் மூடி சீல் வைக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கெடு விதித்திருந்தது.
இதனடிப்படையில் சட்டவிரோதமாக செயல்படும் குடிநீர் உற்பத்தி ஆலைகளில் திடீர் சோதனை நடத்திய அதிகாரிகள் சுமார் 400 ஆலைகளுக்கு சீல் வைத்துள்ளனர். தஞ்சாவூரில் 39 நிறுவனங்கள், தரங்கம்பாடியில் 5, சேலத்தில் 30, திருப்பத்தூரில் 13 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனால், நிலத்தடி நீர் எடுப்பதற்கான உரிமத்தை எளிய முறையில் பெறுவதற்காக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் கடந்த வியாழக்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் எதிரொலியாக சென்னை உட்பட தமிழகம் முழுவதும் பரவலாக கேன் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 30 ரூபாய்க்கு விற்கப்பட்ட 20 லிட்டர் குடிநீர் கேன் தற்போது 50 முதல் 70 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக ஹோட்டல் உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
மேலும், சாதாரண தண்ணீர் கேன்கள் தட்டுப்பாட்டால், 60 மற்றும் 80 ரூபாய்க்கு விற்கப்படும் பிஸ்லரி, கிங்ஃபிஷர் போன்ற பிராண்டுகளின் கேன் தண்ணீர் விற்பனை சூடு பிடித்துள்ளது.கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தத்தால் சென்னையில் குடிநீர் தங்குதடையின்றி கிடைக்க குடிநீர் வாரியம் மூலம் மாற்று வழிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் நாளை மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது
0 Comments
No Comments Here ..