12,May 2024 (Sun)
  
CH
இந்திய செய்தி

தமிழகத்தில் 62 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்

கொரோனா தடுப்புப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் இன்று தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் முதலமைச்சர் பேசினார்.

"கொரோனா தடுப்புப் பணி எப்படி நடைபெறுகிறது, அரசு அறிவித்த அனைத்தையும் மாவட்ட நிர்வாகம் எப்படி செயல்படுத்திக்கொண்டிருக்கிறது என்பது குறித்த ஆய்வுக்கூட்டம் இன்று நடைபெற்றது. அரசு அறிவித்த வழிகாட்டு நெறிமுறைகளின்படியே மாவட்ட நிர்வாகம் செயல்படுகிறது. நோயைத் தடுப்பதுதான் முக்கியம். அரசு அதற்குத்தான் முக்கியத்துவம் கொடுத்துக்கொண்டிருக்கிறது. பிரதமரும் இதே கருத்தைத்தான் வலியுறுத்தினார்கள். அனைத்து மாநில முதலமைச்சர்களும் தடுப்புப் பணியை மேற்கொள்ள வேண்டும், மத்திய - மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும் என தெரிவித்தார்கள்.

மத்திய சுகாதாரத் துறை, உலக சுகாதார அமைப்பு கூறுகின்ற வகையில் தமிழக அரசு இந்த நோய்த் தடுப்புப் பணியை செயல்படுத்திக்கொண்டிருக்கிறது. இந்த நடவடிக்கையின் காரணமாக நோயாளிகள் எண்ணிக்கை குறைந்துகொண்டிருக்கிறது" என முதலமைச்சர் அப்போது தெரிவித்தார்.

இந்நோய்க்கான மருந்துகள், மருத்துவ உபகரணங்களை இருப்பு வைப்பதில் தமிழ்நாடு நாட்டிலேயே முதலிடத்தில் இருப்பதாகவும் முதல்வர் தெரிவித்தார். "இந்நோயை எதிர்கொள்ள மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்கு பணி ஆணை வழங்கப்பட்ட நாள் ஜனவரி 31ஆம் தேதி. மருந்துகள் வழங்க பணி ஆணை வழங்கப்பட்ட நாள் பிப்ரவரி முதல் வாரம். இதற்காக ஒதுக்கப்பட்ட நிதி 146 கோடி ரூபாய்.

மேலும் விமான நிலையங்களில் ஜனவரி 23ஆம் தேதியே பயணிகளைச் சோதனை செய்யும் பணி துவங்கப்பட்டுவிட்டது. தமிழ்நாட்டில் முதன்முதலில் கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நாள் மார்ச் 7ஆம் தேதி. இதையடுத்து திருச்சி, மதுரை, கோயம்புத்தூர், பூந்தமல்லி ஆகிய இடங்களில் தனிமைப்படுத்தும் வசதிகள் மார்ச் 15ஆம் தேதி துவங்கப்பட்டன. பொது இடங்களில் கூடுவதற்குத் தடை, எல்லையோர மாவட்டங்களில் மால்கள், திரையரங்குகளை மூடுவதற்கான உத்தரவு ஆகியவை அன்றைய தினமே பிறப்பிக்கப்பட்டன. துவக்கப் பள்ளிக்கூடங்களும் அன்றே மூடப்பட்டன. மாநில எல்லைகளில் மார்ச் 16ஆம் தேதி சோதனைகள் துவங்கப்பட்டன.

தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு மார்ச் 23ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. ஆனால், மத்திய அரசு அறிவிப்பிற்கு முன்பாகவே இங்கே அறிவிக்கப்பட்டுவிட்டது. அதற்கு பிறகு மத்திய அரசு மார்ச் 24ஆம் தேதி முதல் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை நடைமுறைப்படுத்த உத்தரவிட்டது. அதை மாநில அரசு நடைமுறைப்படுத்தியது.

நோய்த் தடுப்புப் பணிகள் குறித்து இதுவரை 12 முறை ஆய்வுக் கூட்டங்கள் நடைபெற்றுள்ளன. மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் இதுவரை 3 முறை காணொளிக் காட்சி மூலம் நடைபெற்றது. பிரதமர் இதுவரை 2 முறை காணொளிக் காட்சி மூலம் முதல்வர்களுடன் பேசியிருக்கிறார். தடுப்பு பணிகளுக்காக 12 குழுக்கள் அமைக்கப்பட்டன. இவற்றுக்கென தனித் தனி பணிகள் ஒதுக்கப்பட்டன. ஒவ்வொரு குழுவிலும் 3 ஐஏஎஸ் அதிகாரிகள் இடம்பெற்றிருந்தனர். இந்தக் குழுக் கூட்டம் இரண்டு முறை நடைபெற்றது.

தலைமைச் செயலர் தலைமையில் உயர் மட்டக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. நோய்ப் பரவலைத் தடுக்க 11 மருத்துவர்களைக் கொண்டு குழு அமைக்கப்பட்டுள்ளது. தடுப்புப் பணிகளை மேற்கொள்ள மார்ச் மாத இறுதியில் 500 மருத்துவர்கள், 1000 செவிலியர்கள், 1500 தொழில்நுட்ப வல்லுனர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

3371 வென்டிலேட்டர்கள் தமிழகத்தில் உள்ளன. அரசிடம் 2501 வென்டிலேட்டர்கள் உள்ளன. 870 வென்டிலேட்டர்கள் தனியார் மருத்துவமனைகளில் உள்ளன. மும்மடிப்புக் கவசங்கள் 65 லட்சம் இருப்பில் உள்ளன. என் 95 முகக் கவசங்கள் 3 லட்சம் இருக்கிறது. பிபிஇ எனப்படும் முழு உடல் பாதுகாப்பு ஆடை 2 லட்சம் இருப்பில் உள்ளது.

டெஸ்ட் கிட்களைப் பொறுத்தவரை ஐசிஎம்ஆர் அளித்த 20 ஆயிரம் கிட்கள், டாடா நிறுவனம் வழங்கிய கிட்கள் 40,000, தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் 1,35,000 வாங்கியுள்ளது. மொத்தம் ஒரு லட்சத்து 95,000 கிட்கள் உள்ளன. 68,000 பிசிஆர் கிட்கள் மாவட்டங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதுவரை பொதுமக்களின் பொது நிவாரண நிதிக்கு 134.64 கோடி ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது. காய்கறிகளின் விலை கடந்த காலங்களோடு ஒப்பிட்டால் விலை குறைந்திருப்பதாகவும் முதலமைச்சர். கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் அரசே நேரடியாக விற்பனை செய்யப்பட்டுவருவதாகவும்

ரேபிட் டெஸ்ட் கிட்டுகள் நமக்கு வர வேண்டியது, வேறு நாட்டிற்குச் சென்றுவிட்டது. சீனாவிலிருந்து வாங்க முயற்சிக்கிறோம். மத்திய அரசும் அங்கிருந்துதான் வாங்க முயற்சிக்கிறது. அவர்களுக்கும் வரவில்லை. தொடர்ந்து இந்தக் கிட்களை வாங்க முயற்சிக்கிறோம் எனவும் முதலமைச்சர் தெரிவித்தார்.

தேசியப் பேரிடர் நிதியிலிருந்து 510 கோடி வழங்கப்பட்டுள்ளது. தேசிய சுகாதார இயக்கத்திலிருந்து 312.64 கோடி வழங்கப்பட்டுள்ளது. ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருப்பதால், கூடுதலாக உதவித் தொகை வழங்கப்படுமா எனக் கேட்டபோது, ஏப்ரல் 20ஆம் தேதி முதல் நூறு நாள் வேலைத் திட்டம் துவங்கப்படும் என்றும் கிராமப்புற பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகள் இயங்க ஆரம்பிக்கும் என்றும் இதன் மூலம் மக்கள் வேலைவாய்ப்புகளைப் பெறுவார்கள் என்றும் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சொல்லும் விமர்சனங்கள் குறித்துக் கேட்டபோது, குறைசொல்வதெற்கென்றே இருக்கக்கூடிய கட்சி தி.மு.க. எனக் குறிப்பிட்டார் முதலமைச்சர்.

செய்தி சேகரிக்கும் பத்திரிகையாளர்களுக்கு நோய்த் தாக்கினால் அவர்களைக் குணப்படுத்தும் செலவை அரசே ஏற்கும் என்றும் அங்கீகரிக்கப்பட்ட செய்தியாளர்கள் இறந்தால் அவர்களுக்கு 5 லட்ச ரூபாய் வழங்கப்படும் என்றும் முதல்வர் தெரிவித்தார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்கப்படுமா எனக் கேட்டபோது, "இது பணக்காரர்களுக்கு வந்த நோய். ஏழைகளுக்கு எங்கே இந்த நோய் வந்தது? இது வெளிநாட்டிலிருந்து, வெளி மாநிலங்களிலிருந்து வந்து இறக்கப்பட்ட நோய். ஏழைகளைப் பார்த்தால் பயமாக இல்லை. பணக்காரர்களைப் பார்த்தால்தான் பயமாக இருக்கிறது. இவர்கள் வெளிநாடுகளுக்குப் போய்வந்து நோயை இறக்குமதி செய்கிறார்கள். தமிழ்நாட்டில் இந்த நோய் உருவாகவில்லை" என்று தெரிவித்தார்.

ரமலான் பண்டிகைக்கு பொதுவாக மசூதிகளுக்கு நோன்புக் கஞ்சிக்காக அரிசி வழங்கப்படும். ஆனால், தற்போது ஊரடங்கு அமலில் இருப்பதால் என்ன செய்வது என இன்று மாலை அம்மதத் தலைவர்களுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் எனவும் முதல்வர் தெரிவித்தார்.

ஏப்ரல் 20ஆம் தேதிக்குப் பிறகு அனுமதிக்க வேண்டிய தொழில்துறைகள் என்னென்ன, அவற்றை எப்படி அமல்படுத்துவது என்பது குறித்தும் மே 3ஆம் தேதிக்குப் பிறகு எப்படி படிப்படியாக ஊரடங்கைத் தளர்த்துவது என்பது குறித்தும் ஆராய நிதித் துறைச் செயலரின் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.





தமிழகத்தில் 62 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு