21,Nov 2024 (Thu)
  
CH
உலக செய்தி

ஒரே பார்வையில் உலக நிலவரம்!

உலகளவில் கொரோனா தொற்றிற்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2,083,048 ஆக உயர்ந்துள்ளது. உலகம் கொரோனா நெருக்கடியால் திணறி வரும் நிலையில், வைரஸிற்கு எதிரான போரில் உலகம் ஒற்றுமையாக செயற்பட உலக சுகாதார நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.

அமெரிக்காவின் ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் தரவுகளின்படி, உலகெங்கும் 2,083,048 பேர் கொரோனா வைரஸ் தொற்றிற்கு இலக்காகியுள்ளனர். 134,603 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 510,187 பேர் குணமடைந்துள்ளனர்

ஜேர்மன் சான்ஸ்லர் அங்கெலா மேர்க்கெல் வரவிருக்கும் வாரங்களுக்கு லொக் டவுனை நீக்குவதற்கான முதல் நடவடிக்கைகளை அறிவித்துள்ளார். பாகிஸ்தானும் ஜோர்டானும் முக்கிய தொழில்துறைகள் மீதான கட்டுப்பாடுகளை நீக்கியுள்ளன.

உலக சுகாதார அமைப்பின் தலைவர், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இந்த அமைப்புக்கான நிதியை நிறுத்துவதற்கு எடுத்த முடிவுக்கு வருத்தம் தெரிவிப்பதாகக் கூறியுள்ளார். ஆனால் கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்த்துப் போராட உலக ஒற்றுமைக்கு அழைப்பு விடுத்தார்.

சர்வதேச நாணய நிதியம் (ஐ.எம்.எஃப்) இந்த ஆண்டு உலகப் பொருளாதாரம் மூன்று சதவிகிதம் சுருங்கும் என்று எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளது. 1930 களில் உலக பொருளாதாரத்தில் ஏற்பட்ட பெரும் மந்தநிலைக்குப் பின்னர் ஏற்பட்ட மிகப்பெரிய சுருக்கத்திற்கு பின்னர், தற்போது அப்படியான நிலைமை ஏற்படுமென எதிர்பார்த்துள்ளது. ஜி 20 நாடுகள் உலகின் ஏழ்மையான நாடுகளால் செலுத்த வேண்டிய கடன் தொகையை நிறுத்த ஒப்புக்கொண்டுள்ளன.

கடந்த 24 மணித்தியாலத்தில் உலகளவில் 7,960 பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்கா

மீண்டுமொரு கறுப்பு நாளாக கடந்த 24 மணி நேரம் அமெரி்க்காவிற்கு அமைந்துள்ளது. நேற்று 2,482 பேர் உயிரிழந்தனர். கொரோனா தொற்றினால் ஒரேநாளில் உயிரிழந்த கறுப்பு நாள் இதுவாகும். மொத்த உயிரிழப்பு 28,529 ஆக உயர்ந்துள்ளது.நேற்று 30,206 பேர் தொற்றிற்குள்ளாகியுள்ளனர். இதுவரை 644,089 பேர் தொற்றிற்குள்ளாகியுள்ளனர்.

இதேவேளை, நேற்றிரவு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்கா அபாயமான கட்டத்தை கடந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இனடிப்படையில், மாநில ஆளுனர்கள் லொக் டவுனை பகுதியளவில் நீக்குவதற்கான வழிகாட்டுதல்களை வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளார். இன்று வியாழக்கிழமை பிற்பகல் அந்த வழிகாட்டுதல் குறிப்புக்கள் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, 3 மில்லியனிற்கும் அதிகமானவர்களிற்கு அமெரிக்காவில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

பிரான்ஸ்

கடந்த சில தினங்களாக உயிரிழப்பு வீதம் குறைந்து வந்த நிலையில், நேற்று சடுதியாக உயிரிழப்பு அதிகரித்துள்ளது. கடந்த 24 மணித்தியாலத்தில் 1,438 பேர் உயிரிழந்தனர். மொத்த உயிரிழப்பு 17,167 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக 4,560 பேர் தொற்றிற்குள்ளாகினர். இதுவரை 147,863 பேர் தொற்றிற்குள்ளாகினர்.

எனினும், இந்த உயிரிழப்பு 24 மணிநேரத்தில் பதிவானவை அல்ல. 3 நாள் வார இறுதிநாட்களை தொடர்ந்து, ஏற்கனவே தவறவிடப்பட்ட சில எண்ணிக்கைகள் இணைத்ததால் ஏற்பட்டது என பிரான்ஸ் சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பிரிட்டன்

கடந்த 24 மணித்தியாலத்தில் 761 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 12,868 பேர் உயிரிழந்தனர். புதிதாக 4,603 பேர் பாதிக்கப்பட்டனர். இதுவரை 98,476 பேர் பாதிக்கப்பட்டுள்ளன.

இத்தாலி

கடந்த 24 மணித்தியாலத்தில் இத்தாலியில் 578 பேர் உயிரிழந்தனர். மொத்த உயரிழப்பு 21,645 ஆக உயர்ந்தது. புதிதாக 2,667 பேர் தொற்றிற்குள்ளாக, பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 165,155 ஆக உயர்ந்தது.

ஸ்பெயின்

ஸ்பெயினில் நேற்று 557 பேர் உயிரிழந்தனர். இதுவரை 18,812 பேர் உயிரிழந்தனர். நேற்று 6,599 பேர் உயிரிழந்தனர். இதுவரை 180,659 பேர் தொற்றிற்குள்ளாகினர்.

ஜேர்மனி

கடந்த 24 மணித்தியாலத்தில் அங்கு 309 பேர் உயிரிழந்தனர். மொத்த உயிரிழப்பு 3,804 ஆக உயர்ந்தது. புதிதாக 2,543 பேர் உயிரிழந்தனர். இதுவரை 134,753 பேர் பாதிக்கப்பட்டனர்.

இதேவேளை, ஜேர்மனியின் பல வர்த்தகத்துறைகள் மீள ஆரம்பிக்க அனுமதிக்கப்பட்டுள்ளன. ஆனால் பாடசாலைகள் மே 4ஆம் திகதி வரை பூட்டப்பட்டுள்ளது. 8,600 சதுர அடி பரப்பை கொண்ட வர்த்தக நிலையங்கள், சுகாதார நடைமுறைகள் குறித்த நிபந்தனைகளை பூர்த்தி செய்தால், மீள திறக்க அனுமதிக்கப்படும். ஆனால், பொது நிகழ்வுகளிற்கான தடை ஓகஸ்ட் 31ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

பெல்ஜியம்

பெல்ஜியத்தில் நேற்று 283 பேர் உயிரிழந்தனர். மொத்த உயிரிழப்பு 4,440 ஆக உயர்ந்தது.

கனடா

கனடாவில் நேற்று 107 உயிரிழப்புக்கள் பதிவாக, மொத்த உயிரிழப்பு 1,000 ஐ கடந்துள்ளது. 1,010 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

ஈரான்

ஈரானில் 94 பேர் உயிரிழக்க, மொத்த உயிரிழப்பு 4,777 ஆக உயர்ந்துள்ளது.

சுவிடன்

சுவீடன் 170, நெதர்லாந்து 189, துருக்கி 115 என உயிரிழப்புக்கள் பதிவாகின.

பிரேஸில்

கொரோனா வைரஸ் நெருக்கடியைக் கையாள்வது தொடர்பாக சுகாதார அமைச்சர் லூயிஸ் ஹென்ரிக் மாண்டெட்டா மற்றும் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ இடையே பதற்றம் அதிகரித்துள்ளதால், சுகாதார செயலாளர் வாண்டர்சன் டி ஒலிவேரா இராஜினாமா செய்துள்ளதாக பிரேசில் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பிரேஸிலில் 225 பேர் நேற்று உயிரிழக்க, மொத்த உயிரிழப்பு 1757 ஆக உயர்ந்தது.

60 ஆண்டுகளில் ஆசிய பொருளாதார வளர்ச்சி பூச்சியமாகும்

கொரோனா வைரஸ் தொற்றுநோய் ஆசியாவின் பொருளாதார வளர்ச்சியை 60 ஆண்டுகளில் முதல்முறையாக நிறுத்தும் அபாயமுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் எச்சரித்துள்ளது.

“இவை உலகப் பொருளாதாரத்திற்கு மிகவும் நிச்சயமற்ற மற்றும் சவாலான காலங்கள். ஆசிய-பசிபிக் பிராந்தியமும் இதற்கு விதிவிலக்கல்ல. இப்பகுதியில் கொரோனா வைரஸின் தாக்கம் கடுமையாகவும், முன்னோடியில்லாததாகவும் இருக்கும்” என்று சர்வதேச நாணய நிதியத்தின் ஆசியா மற்றும் பசிபிக் பிராந்திய இயக்குனர் சாங்யோங் ரீ தெரிவித்துள்ளார் .

கடுமையாக பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு அரசாங்கங்கள் ஆதரவை வழங்க வேண்டும். நெருக்கடியிலிருந்து மீள விரிவான மற்றும் ஒருங்கிணைந்த கொள்கை தேவை என்று அவர் தெரிவித்துள்ளார்.

கட்டுப்பாடுகளை தளர்த்தும் பாகிஸ்தான்

தொடர்ச்சியான லொக் டவுனினால் பொருளாதார வீழ்ச்சியை சந்திப்பதை தவிர்க்க, நாட்டில் பல தொழில்த்துறைகளுக்கான கட்டுப்பாடுகளை பாகிஸ்தான் அரசாங்கம் தளர்த்தியுள்ளது.

நேற்று புதன்கிழமை நடவடிக்கைகளை மீண்டும் திறக்க அனுமதிக்கப்பட்டது. சுமார் 12 வரையான தொழில்துறைகள் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளன. அதில் கட்டுமான துறையும் அடங்கும்.

பாகிஸ்தானில் இதுவரை 111 பேர் உயிரிழந்தனர். 6,383 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

லிபியாவில் ஊரடங்கு

லிபியாவில் 10 நாட்களுக்கு முழுமையான ஊரடங்கு உத்தரவு அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது. லிபியாவின் மேற்கில் சர்வதேச அங்கீகாரம் பெற்ற அரசாங்கம் ஏப்ரல் 17 வெள்ளிக்கிழமை முதல் 10 நாட்களுக்கு 24 மணி நேர ஊரடங்கு உத்தரவை விதிக்கும் என்று திரிப்போலியை தளமாகக் கொண்ட தேசிய உடன்படிக்கை அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லிபியாவில் 36 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டனர். ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கட்டார்

கட்டாரிலுள்ள வெளிநாட்டு தொழிலாளர்களிற்கு கொரோனா வைரஸ் பரிசோதனைக்கு என அழைத்து செல்லப்பட்டு, சில டசின் தொழிலாளர்கள் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டு, அவர்களின் நாடுகளிற்கு அனுப்பப்பட்டுள்ளதாக சர்வதேச மன்னிப்புச்சபை குற்றம்சாட்டியுள்ளது.

எனினும், இந்த குற்றச்சாட்டக்களை கட்டார் மறுத்துள்ளது. கொரோனா தடுப்பு ஆய்வின்போது, கண்டறிப்பட்ட சட்டவிரோத தொழிலாளர்களையே திருப்பி அனுப்பியதாக தெரிவித்துள்ளது.

கொலம்பியா

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் முயற்சியில் கொலம்பியா சுமார் 4,000 கைதிகளை தற்காலிகமாக விடுவித்து, வீட்டுக் காவலில் வைக்கவுள்ளதாக நீதித்துறை அமைச்சர் மார்கரிட்டா கபெல்லோ கூறினார். வரும் நாட்களில் கூடுதல் நபர்கள் விடுவிக்கப்படலாம் என்றும் கூறினார்.

மத்திய நகரமான வில்லாவிசென்சியோ சிறையில் இருந்து சமீபத்தில் விடுவிக்கப்பட்ட இரண்டு பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இறந்தனர். அதே சிறையின் பதின்மூன்று கைதிகள், இரண்டு காவலர்கள் மற்றும் ஒரு நிர்வாகியும் கொரோனா வைரஸ் தொற்றுகளை உறுதிப்படுத்தியுள்ளனர்.

சர்வதேச நாணய நிதியம்

கொரோனா வைரஸ் தொற்றுநோயைச் சமாளிக்க போராடும்போது, உலகின் மிக வறிய நாடுகளின் கடன் கொடுப்பனவுகளை தற்காலிகமாக நிறுத்துவதற்கு ஜி 20 நாடுகள் முடிவு செய்துள்ளன.

“காலஅவகாசத்தை கோரும் ஏழ்மையான நாடுகளுக்கான கடன் சேவை கொடுப்பனவுகளை மீளளிக்க கால இடைவெளி வழங்குவதை நாங்கள் ஆதரிக்கிறோம்” என்று ஜி 20 நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கியாளர்கள் ஒரு அறிக்கையில் தெரிவித்தனர்.




ஒரே பார்வையில் உலக நிலவரம்!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு