உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் குறித்து விசாரணை செய்யும் சி.ஐ.டி.யின் பிரதான விசாரணைக் குழு, சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ், முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் இளைய சகோதரர் ரியாஜ் பதியுதீன், சுங்க அதிகாரி ஒருவர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டது தொடர்பான தகவல்களை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.
முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் சகோதரர் ரியாஜ் பதியுதீன், தற்கொலை குண்டுதாரி ஒருவருடன் மிக நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளமையும், தாக்குதலை அண்மித்த நாளொன்றில் பிரபல ஹோட்டல் ஒன்றில் தற்கொலைதாரியை தனியே சந்தித்து கலந்துரையாடியுள்ளமை தொடர்பிலான தகவல்களும் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் குண்டுத் தாக்குதல்களை நடாத்த திட்டமிட்டதன் பின்னணியில் இருந்தமை தொடர்பில் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் சி.ஐ.டி.யின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நுவன் வெதிசிங்கவுடன் விஷேட செய்தியாளர் சந்திப்பை நடாத்தியே அவர் இந்த தகவல்களை வெளிப்படுத்தினார்.
இந்நிலையில் இந்த 6 பேரும் தற்போது சி.ஐ.டி.யின் பொறுப்பில், நான்காம் மாடியில் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், மற்றொரு சட்டத்தரணி உட்பட பலர் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
சிரேஸ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ், மாவனெல்லை புத்தர் சிலை உடைப்பு விவகாரம் உள்ளிட்ட பல்வேறு ஆதாரங்களை மைப்படுத்தியே கைது செய்யப்பட்டுள்ளதாகவும், தற்கொலை குண்டுதாரிகள் இருவருடன் அவருக்கு நெருங்கிய தொடர்புகள் இருந்துள்ளதாகவும், குண்டுதாரிகளுடன் இணைந்து செயற்பட்டுள்ளமைக்கான சான்றுகள் கிடைத்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக இந்த சட்டத்தரணியின் அமைப்புக்கு கிங்ஸ்பரி ஹோட்டல் தற்கொலை குண்டுதாரியான மொஹம்மட் இப்ரஹீம் இன்சாப் அஹமட், ஒரு இடத்தையே பெற்றுக்கொடுத்துள்ளார்.
கைது செய்யப்பட்டவர்களில் சுங்க அதிகாரி ஒருவர் உள்ளார். மேலும் மூவரும் உள்ளனர்.
ரியாஜ் பதியுதீன் எனும் சந்தேக நபர் ஒரு தற்கொலை குண்டுதாரியுடன் நேரடியாக தொடர்புகளைப் பேணியுள்ளார். அதேபோல், குண்டுதாக்குதலுக்கு மிக நெருங்கிய காலப்பகுதியில் ரியாஜ் பதியுதீன், குறித்த குண்டுதாரியுடன் கொழும்பின் பிரபல ஹோட்டல் ஒன்றில்& தனியாக சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
தற்போது கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள், நலன்புரி அமைப்புக்கள் நிறுவனங்களை உருவாக்கி, குண்டுதாரிகளுடன் ஒன்றாக பதவிகளை வகித்து செயற்பட்டுள்ளனர். அந்த நிறுவனங்களில் குண்டுதாரிகள்& பணம் முதலீடு செய்துள்ளமை தொடர்பிலும் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. அந்த நிறுவனங்களுக்காக காணிகளை தானமாக குண்டுதாரிகள் வழங்கியுள்ளானர். இவ்வாறான பல தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டே இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
0 Comments
No Comments Here ..