கொரோனா வைரஸ் தொற்று மீதான அச்சம் இன்னமும் முழுவதுமாக நீங்காத நிலையில், ஈஸிஜெட் (EasyJet) விமான நிறுவனம் தனது சேவையை மீண்டும் தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
இதன்படி, மட்டுப்படுத்தப்பட்ட விமான சேவைகளை உரிய பாதுகாப்புடன் எதிர்வரும் ஜூன் 15ஆம் திகதி மீண்டும் தொடங்கவுள்ளதாக ஈஸிஜெட் தெரிவித்துள்ளது.
ஆரம்ப சேவை அட்டவணையில் ஈஸிஜெட் நிறுவனம், பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் முழுவதும் உள்நாட்டு சேவைகளை தொடங்கவுள்ளது.
இதுகுறித்து ஈஸிஜெட் தலைமை நிர்வாகி ஜோஹன் லண்ட்கிரென் கூறுகையில், ‘இவை சிறிய மற்றும் கவனமாக திட்டமிடப்பட்ட நகர்வுகள். எதிர்வரும் வாரங்களில் ஐரோப்பா முழுவதும் முடக்கநிலை கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும். அப்போது வாடிக்கையாளர் தேவை அதிகரிக்கும்.
இதனை கருத்திற் கொண்டு மேலும் புதிய பயண சேவைகள் நடைமுறைப்படுத்தப்படும். மேம்பட்ட சுத்தம் மற்றும் கிருமி நீக்கம் போன்ற பணிகளை ஈஸிஜெட் மேற்கொள்ளும்.
கொரோனா வைரஸ் தொற்றுநோயின் தாக்கத்திலிருந்து உலக நாடுகள் தொடர்ந்து மீண்டு வருவதால் வாடிக்கையாளர்கள் மற்றும் விமான ஊழியர்கள் பாதுகாப்பாக பறக்க முடியும் என்பதை உறுதிப்படுத்தும் வரைஇந்த நடவடிக்கைகள் நடைமுறையில் இருக்கும்’ என கூறினார்.
இதேவேளை, தற்போது விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் போது எந்தவொரு உணவும் விமானத்தில் வழங்கப்படாது. அதேநேரத்தில் வாடிக்கையாளர்களுக்கு கை சுத்திகரிப்பு மற்றும் கிருமிநாசினி துடைப்பான்கள் வழங்கப்படும்.
0 Comments
No Comments Here ..