04,Dec 2024 (Wed)
  
CH
இலங்கை செய்தி

நாட்டு மக்களுக்கு சாதகமான முடிவுகளை எடுக்க அரசாங்கம் தயங்காது

கொவிட்-19 தொற்று நிலைமை காரணமாக வீழ்ச்சியடைந்துள்ள இந்நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு 2021 வரவு செலவுத் திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதாக பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

நாட்டின் பாதையை தீர்மானிக்கும் இம்முறை வரவு செலவுத் திட்டத்தினூடாக உள்நாட்டு பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு ஒரு மாதத்திற்கு 100 கோடி ரூபாய் வீதம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் பசில் ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார்.

பதுளை ஊவா பல்கலைக்கழகத்தின் கேட்போர் கூடத்தில் இன்று (2020.12.18) இடம்பெற்ற ´கிராமத்துடன் கலந்துரையாடல் ஊடாக வேலைத்திட்டத்துடன் மீண்டும் கிராமத்திற்கு´ தேசிய வேலைத்திட்டத்தின் ஊவா மாகாணத்திற்கான கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

உள்நாட்டு பொருளாதாரத்தை மேம்படுத்தக்கூடிய திட்டங்களுக்காக இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளதுடன் ஒரு கிராமத்திற்கு அவ்வாறான ஒரு திட்டத்தையேனும் செயற்படுத்துவது அனைவரதும் பொறுப்பாகும் என்றும் தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த பசில் ராஜபக்ஷ,

கிராமப்புற தேவைகளுக்காக இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தை பொறுப்பேற்கும் போது இருந்த பொருளாதார நிலை போன்றே, கொவிட் தொற்று நிலை காரணமாக முகங்கொடுக்க நேரிட்ட நிதி நெருக்கடிகள் தொடர்பிலும் நீங்கள் அறிவீர்கள்.

இன்று சுற்றுலாத்துறை வர்த்தகம் வீழ்ச்சியடைந்துள்ளது. வெளிநாட்டில் தொழில் புரிபவர்களிடமிருந்து மாத்திரமே வெளிநாட்டு பணம் எமக்கு கிடைத்தது. நவம்பர் மாதமளவில் அதில் 34 வீத வளர்ச்சி ஏற்பட்டது.

எதிர்காலத்தில் புதிய சந்தை வாய்ப்புகளை இணங்காண்பது போன்றே திறமையான தொழிலாளர்களுக்கு அந்த வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் அந்நிய செலாவணியை அதிகரிக்க நடவடிக்கை எடுப்போம்.

வெளிநாட்டு நன்கொடைகள் மற்றும் கடன்களை வழங்கும் பல நாடுகள் இன்று கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளமையால் வெளிநாட்டு நன்கொடைகளும் கிடைப்பதில்லை. அதேவேளை அரசாங்கத்தின் கடன் பெறும் நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நாட்டிற்கு வருகைத்தரும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு 14 நாட்கள் தனிமைப்படுத்தல் செயற்பாட்டிற்கு உள்ளாக வேண்டி ஏற்படுகிறது. அவ்வாறான சூழலிலும் கூட கடந்த மாதம் எமது நாட்டில் புதிய தொழிற்சாலையொன்றை ஆரம்பிப்பதற்கு முடியுமானதாயிற்று. செப்டம்பர் மாதத்தில் பில்லியன் டொலர் பெறுமதிக்கும் அதிகமான ஏற்றுமதி வருவாயை ஈட்ட முடிந்தது. இதனால் நம் நாட்டிற்கான எரிபொருள் மற்றும் ஒளடத இறக்குமதிக்கு தடை ஏற்படவில்லை. இவ்வாறான சூழ்நிலையிலேயே 2021 வரவு செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்டது.

வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக கிராமப்புற அபிவிருத்தி அடையாளம் காணப்பட்டுள்ளன. அனைத்து கிராம சேவகர் பிரிவுகளுக்கும் முன்பள்ளி, மகப்பேறு சிகிச்சை நிலையம் என்பவற்றை பெற்றுக் கொடுப்போம். நவீன உலகிற்கு பொருந்தும் வகையில் கல்வி முறையில் மாற்றம் ஏற்படுத்தி கிராமப்புற பாடசாலைகளின் அடிப்படை வசதிகளின் மேம்பாட்டிற்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பாடசாலைகளில் நீர் மற்றும் சுகாதார வசதிகளை ஏற்படுத்துவோம். டிஜிட்டல் இலங்கையாக நாட்டை மாற்றுவதற்கு ஜனாதிபதி முயற்சித்து வருகிறார். எதிர்வரும் 12 மாதங்களில் இலங்கையிலுள்ள அனைத்து வீடுகளுக்கும் தேவையான தகவல் தொடர்பு வலையமைப்பை ஏற்படுத்தவதற்கு ஏற்கனவே நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கடந்த மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் ஆட்சிக் காலத்தை போன்றே இம்முறையும் ஒரு இலட்சம் கிலோமீற்றர் வீதிகளின் அபிவிருத்திகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதேபோன்று அனைவருக்கும் குடிநீரை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விளையாட்டுத்துறையை மேம்படுத்துவதற்கு, கிராமப்புற விளையாட்டு வீரர்கள் முன்வருவதற்கு வாய்ப்பளித்தல் போன்றவற்றுக்காக 8400 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சுற்றாடல் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டு குளங்கள் புனரமைக்கப்படுகின்றன. நகர்ப்புற சுற்றாடலில் ஒரு நகர்ப்புற வனத்தையேனும் உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வாழ்வாதார வழிகளுக்காக 10 ஆயிரம் மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

கிராமத்தின் முன்மொழிவுகளுக்கு அமைய திட்டங்களை முன்வைக்க பிரதேச ஒருங்கிணைப்பு குழுக்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். கிராமங்களிலிருந்து கருத்துக்களை பெறுவதற்கு 14021 கிராம சேவகர் பிரிவுகளிலும் கூட்டங்கள் நடத்தப்படும். கிராம முன்மொழிவுகளை செயற்படுத்தும் போது பெரும்பாலானோருக்கு பயனளிக்கும் திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம். பிரதேச ஒருங்கிணைப்பு குழுவுக்கு, மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவிற்கு, சம்பந்தப்பட்ட அடையாளம் காணப்பட்ட அமைச்சிற்கு அல்லது ஜனாதிபதி செயலணிக்கு இந்த திட்டங்களை முன்வைக்க வேண்டும். கிராமத்தின் அபிவிருத்திக்கு முன்னுரிமை வழங்கும் வகையிலான வேலைத்திட்டங்களை பல கிராம சேவகர் பிரிவுகளை இணைத்து மேற்கொள்ளுங்கள். வித்தியாசமாக சிந்திக்க அஞ்ச வேண்டாம்.

இந்த வரவு செலவுத் திட்டம் நாடு செல்லும் பாதையை தீர்மானிக்கும் வரவு செலவுத் திட்டமாகும். நீங்கள், நாம் அனைவரும் ஒன்றிணைந்து சரியான தீர்மானங்களை மேற்கொள்வதன் மூலம் சுபீட்சமான நாட்டை உருவாக்க முடியும். நாட்டினதும், நாட்டு மக்களதும் நன்மைக்கான தீர்மானங்களை மேற்கொள்வதிலிருந்து ஒருபோதும் பின்வாங்க போவதில்லை. சுற்றூலாத்துறை வர்த்தகத்தை மீண்டும் ஆரம்பிப்பதற்கு நாம் முயற்சித்து வருகிறோம். சுகாதார வழிகாட்டல்களுக்கமைய சுற்றுலா வர்த்தகத்தை முன்னோக்கி கொண்டு செல்வோம். அதற்கமைய முதலாவது குழு எதிர்வரும் 26ஆம் திகதி நாட்டிற்கு வருகிறது.

இந்த வருடம் எதிர்பார்த்த அளவு மழைவீழ்ச்சி காணப்படவில்லை. அதனால் பயிர்ச் செய்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. சேனா புழுக்களின் தாக்கமும் ஏற்பட்டது. வறட்சி நிலை மேலும் மோசமடைந்தால் விவசாயிகளுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கான தேவை ஏற்படும்.

கழிவு முகாமைத்துவத்திற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் எமது அரசாங்கம் தயார். கழிவின் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான திட்டம் வத்தளையில் செயற்படுத்தப்பட்டுள்ளது. அந்த திட்டம் வெற்றியளித்தால் நாடு முழுவதும் அவ்வாறான திட்டங்களை செயற்படுத்துவோம்.

உள்நாட்டு உற்பத்திக்காக சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்துவதுடன் உயர் தரத்திலான உள்நாட்டு உற்பத்திகளுக்காக எமது உற்பத்தியாளர்களை ஊக்குவிப்போம்.




நாட்டு மக்களுக்கு சாதகமான முடிவுகளை எடுக்க அரசாங்கம் தயங்காது

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு