பருவ மாற்றங்களினால் ஏற்படும் சருமப் பிரச்னைகளிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள பெண்கள் பலரும் சன்ஸ்கிரீன் என்றும் சூரியக் கதிரிலிருந்து சருமத்தை பாதுகாத்துக்கொள்ளும் திரவத்தை பயன்படுத்துகின்றனர்.
குறிப்பாக தோல் புற்றுநோயிலிருந்து பாதுகாத்துக்கொள்ள சன்ஸ்கிரீனைப் பயன்படுத்த வேண்டும் என்று தோல் மருத்துவர்களே பரிந்துரைக்கின்றனர்.
சூரிய ஒளியிடமிருந்து வெளிப்படும் புறஊதாக் கதிர்களால் தோல் புற்றுநோய்கள் ஏற்படுகின்றன . டைட்டானியம் டை ஆக்சைடு மற்றும் துத்தநாக ஆக்ஸைடு கொண்ட சன்ஸ்கிரீன்கள் புறஊதாக் கதிர்களிலிருந்து நம்மைக் காக்கின்றன. இவை சருமம் வழியே உடலுக்குள் நுழையும் சூரியக் கதிர்வீச்சைத் தடுப்பதன் மூலம் தோல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறைகிறது.
மெலனோமா மற்றும் மெலனோமா அல்லாத தோல் புற்றுநோய் என இரண்டும் உருவாகும் வாய்ப்பைக் குறைக்கிறது. மேலும் சருமம் முதிர்வடைவதைத் தடுக்கிறது.
அதேநேரத்தில் சன்ஸ்கிரீன்கள் பயன்படுத்துவதில் சற்று கவனமாக இருக்க வேண்டும். எஸ்பிஎஃப் எனும் சூரிய பாதுகாப்பு காரணி அளவு 30 அல்லது அதற்கு மேற்பட்டதைக் கொண்ட சன்ஸ்கிரீன்கள் பரிந்துரைக்கப்படுகின்றன. இது கிரீம் அல்லது சற்று திரவ நிலையில் இருக்க வேண்டும். ஸ்ப்ரே-ஆன் சன்ஸ்கிரீன்கள் பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம்.
அதேபோன்று அனைவரும் சன்ஸ்கிரீன் பயன்படுத்தலாமா என்றால் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று பயன்படுத்துவது நல்லது அல்லது தோலில் ஒரு இடத்தில் லேசாகத் தடவிவிட்டு தோல் அரிப்பு, எரிச்சல் உள்ளிட்ட எதிர்வினைகள் ஏதேனும் இருக்கிறதா எனப் பார்த்து பின்னர் பயன்படுத்துவது நல்லது. உங்கள் சருமத்துக்கு ஏற்ற சன்ஸ்கிரீனை பயன்படுத்தினால் மட்டுமே முழுப்பலனை பெற முடியும்.
பொதுவாக நாம் வெளியில் செல்வதற்கு 20 நிமிடங்களுக்கு முன்னதாக சன்ஸ்கிரீனை பயன்படுத்தலாம். முந்தைய மேக்கப்பை முழுவதுமாக கலைத்துவிட்டு சன்ஸ்கிரீன் தடவ வேண்டும். சன்ஸ்கிரீன் தடவி 10 நிமிடங்கள் கழித்து வழக்கமான மேக் அப்பை போட்டுக்கொள்ளலாம்.
எஸ்பிஎப் அளவு மிதமாக உள்ள வேதியியல் கலவை அதிகம் இல்லாத சன்ஸ்கிரீன் லோஷன்களை பயன்படுத்த வேண்டும்.
சன்ஸ்கிரீன் தோல் பராமரிப்புக்கும் தோல் புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கவும் பயன்படுகிறது என்பதும் கனடா தோல் மருத்துவர்கள் மேற்கொண்ட ஆய்விலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
0 Comments
No Comments Here ..