இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 'கூலி' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. சத்யராஜ், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன், உபேந்திரா, ஆமிர் கான், சவுபின் சாஹிர் எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே இந்தப் படத்தில் இணைந்துள்ளது. வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகும் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள 'மோனிகா' பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
அனிருத்தின் இசையில் உருவாகியுள்ள 'மோனிகா' பாடல், துள்ளலும் இதமும் கலந்து பெரிய ஆர்ப்பாட்டமில்லாமல் சற்றே அடக்கி வாசிக்கப்பட்டுள்ளது. விஷ்ணுவின் எளிமையான வரிகள் பாடலுக்கு மேலும் வலு சேர்க்கின்றன. சுப்லாஷினி மற்றும் அனிருத்தின் குரல்களுடன், அசல் கோலாரின் ராப் பகுதியும் கச்சிதமாகப் பொருந்திப் போகிறது. குறிப்பாக, 'மோனிகா பெல்லூசி' பெயருக்கு நியாயம் சேர்க்கும் விதமாக, நடிகை பூஜா ஹெக்டே பாடல் முழுவதும் சிவப்பு உடையில் தனது நடன அசைவுகளால் ரசிகர்களின் மனதை வசீகரித்துள்ளார்.
இந்த பாடல் வீடியோவில் ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய முக்கிய அம்சம், மலையாள நடிகர் சவுபின் சாஹிரின் பங்களிப்புதான். உணர்வுபூர்வமான நடிப்பால் ரசிகர்களை வசீகரிக்கும் சவுபின், இந்தப் பாடலில் முழு எனர்ஜியுடன் அட்டகாசமாக குத்தாட்டம் போட்டுள்ளார். பூஜா ஹெக்டேவின் பிரசன்ஸையும் தாண்டி, சவுபின் தனது தனித்துவமான நடனத்தால் கவனத்தை ஈர்த்திருப்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
0 Comments
No Comments Here ..