அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கடந்த ஜூலை 4 ஆம் திகதி ஏற்பட்ட பெரும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 120 ஆக உயர்ந்துள்ளது. காணாமல் போன 170 பேரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த வாரத்தில் டெக்சாஸில் பெய்த கனமழையே இந்த பேரழிவுக்குக் காரணம். ஜூலை 4 ஆம் திகதி சில மணிநேரங்களில் 280 மி.மீட்டர் மழை பதிவானது. இதனால் குவாடலூப் நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, சுமார் 2 மணி நேரத்தில் நதியின் நீர்மட்டம் 30 அடி வரை உயர்ந்தது. இதன் விளைவாக, ஹில் கன்ட்ரி பகுதியில் குவாடலூப் நதிக் கரைகளில் இருந்த பல வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
கெர் கவுன்டியில் ஆற்றங்கரையோரத்தில் அமைந்திருந்த கிறிஸ்தவ மாணவிகள் முகாம் இந்த வெள்ளத்தில் கடுமையாக மூழ்கியது. இந்த முகாமில் இருந்து மட்டும் 28 மாணவிகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. கெர் கவுன்டி முழுவதும் இதுவரை 95 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் சுமார் 40 பேர் குழந்தைகள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்த வெள்ளத்தால் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள டிராவிஸ், பர்னெட், கெண்டல், டாம் கிரீன் மற்றும் வில்லியம்சன் போன்ற பகுதிகளிலும் பலர் உயிரிழந்துள்ளனர். செவ்வாய்க்கிழமை மாலை நிலவரப்படி, உயிரிழந்தோர் எண்ணிக்கை 120 ஆக உயர்ந்துள்ளதாகவும், 170-க்கும் மேற்பட்டோர் காணவில்லை எனவும் டெக்சாஸ் ஆளுநர் கிரெக் அபோட் தெரிவித்துள்ளார். இதனால் இறப்பு எண்ணிக்கை இன்னும் கணிசமாக உயரக்கூடும் என அரசு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 Comments
No Comments Here ..