கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள சர்வதேச விளையாட்டரங்கை பொறுப்பேற்று சீரமைப்பதற்கான நடவடிக்கைகளை கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வேண்டுகோளுக்கமைய விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மேற்கொண்டுள்ளார்.
விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் பணிப்பின் பேரில், கிளிநொச்சி விளையாட்டரங்க புனரமைப்புப் பணிகளுக்கென நியமிக்கப்பட்ட இணைப்பாளர் பிரயந்த இலங்கசிங்க மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் கீழ் வரும் யுத்கோர்ப் வட மாகாணப் பணிப்பாளர் சந்தானாத் ஆகியோர் ஜனவரி 4ம் திகதி கிளிநொச்சி விளையாட்டரங்குக்கு நேரில் வருகை தந்து அரங்கின் நிலைமையை ஆராய்ந்தனர்.
இதன்போது, கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத்தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் இணைப்பாளர் வை.தவநாதன் சார்பில், மேலதிக இணைப்பாளர் கோ.றுஷாங்கன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் மாவட்ட இணைப்பாளர் அனுரகாந்தன் ஆகியோர் விளையாட்டரங்கின் தற்போதைய நிலை தொடர்பாகவும், மேற்கொள்ளப்படவேண்டிய திருத்தப் பணிகள் தொடர்பாகவும் அவர்களுக்கு விளக்கமளித்தனர்.
உள்ளக விளையாட்டரங்கு, பரந்த பார்வையாளர் கூடத்துடன் கூடிய திறந்தவெளி அரங்கு, சர்வதேச தரத்திலான நீச்சல் தடாகம் என்பவற்றைக் கொண்ட இந்த விளையாட்டரங்கில் உடனடியாக மேற்கொள்ளப்படவேண்டிய திருத்தப் பணிகள் தொடர்பாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் பிரதிநிதிகளுக்கு இதன்போது விரிவாக எடுத்துக்கூறப்பட்டது.
கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவராக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நியமிக்கப்பட்டவுடன் மாவட்டத்தில் உடனடியாக கவனம் செலுத்தப்படவேண்டிய விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டபோது, கிளிநொச்சி சர்வதேச விளையாட்டரங்கு பற்றியும் கவனம் செலுத்தப்பட்டு, அமைச்சரின் பணிப்பின் பேரில் அவரது இணைப்பாளரும், முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான வை.தவநாதன் சார்பில், மேலதிக இணைப்பாளர் கோ.றுஷாங்கன் ஒருங்கிணைப்புக்குழு அலுவலர்களுடன் நேரில் சென்று விளையாட்டரங்கைப் பார்வையிட்டு மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக அறிக்கை சமர்ப்பித்திருந்தார்.
அத்துடன், விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ கடந்த நொவம்பர் மாதம் 8ஆம் திகதி யாழ்ப்பாணம் வந்திருந்தபோது அவரை நேரில் சந்தித்து சர்வதேச விளையாட்டரங்கை அவசரமாகப் புனரமைக்கவேண்டியதன் அவசியம் பற்றி கவனத்துக்குக் கொண்டு வந்திருந்தார்.
2015ஆம் ஆண்டுக்கு முன்னர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் வழிகாட்டலின்கீழ் அப்போது பாரம்பரிய கைத்தொழில் அமைச்சராக இருந்த டக்ளஸ் தேவானந்தாவுடன் இணைந்து முன்னெடுக்கப்பட்ட கிளிநொச்சி சர்வதேச விளையாட்டரங்குக்கான நிர்மானப் பணிகள் முழுமையடைய முன்னரே 2015ம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால், விளையாட்டரங்கப் பணிகள் இடையில் தடைப்பட்டிருந்தன.
பின்னர், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் காலத்தில் அப்போதைய அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோவின் தலைமையில் அவசர அவசரமாக விளையாட்டரங்கப் பணிகள் அரைகுறையாக மேற்கொள்ளப்பட்ட நிலையில் பொதுமக்கள் பாவனைக்காக திறந்துவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 Comments
No Comments Here ..