சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் எந்தத் திசையில் தேமுதிக பயணிக்கும் என்ற கேள்வி அரசியல் அரங்கில் எழுந்துள்ளது.
வெற்றி-தோல்வியை நிர்ணயிக்கும் அளவுக்கு… முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய இரு பெரும் அரசியல் ஆளுமைகள் இருந்தபோது, 2006 சட்டப் பேரவைத் தேர்தலில் துணிச்சலாக களமிறங்கிய விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக, 8.5 சதவீத வாக்குகளைப் பெற்றது.
விஜயகாந்தின் அரசியல் பிரவேசம் 142 தொகுதிகளில் அதிமுக – திமுகவின் வெற்றி – தோல்வியை நிர்ணயிக்கும் அளவுக்கு இருந்தது. இதனால், திமுக 96 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்று ஜெயலலிதாவால் கடைசி வரை மைனாரிட்டி அரசு என அழைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது.
திடீர் விசுவரூபம்: திரைப்பட நடிகர் எனும் புகழ் வெளிச்சம், ரசிகர் மன்ற பலம் தவிர, அரசியல் பாரம்பரியமிக்க குடும்பத்தில் பிறந்திருந்தாலும்கூட எவ்வித அரசியல் கட்சிகளின் பின்புலமும் இல்லாமல் வந்த விஜயகாந்தின் இந்த திடீர் விசுவரூபம் பிற அரசியல் கட்சிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
2009 மக்களவைத் தேர்தலிலும்…தொடர்ந்து மக்களுடனும், கடவுளுடனுமே கூட்டணி என்ற முழக்கத்துடன் 2009 மக்களவைத் தேர்தலில் துணிந்து தனித்து களமிறங்கிய தேமுதிக, 10.3 சதவீத வாக்குகளைப் பெற்றது. 2006 முதல் 2011 வரை திமுக ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற மதுரை மத்தி, மதுரை மேற்கு முதல் பென்னாகரம் வரையிலான அனைத்து இடைத் தேர்தல்களிலும் அதிமுகவுக்கு கடும் போட்டியைக் கொடுக்கும் அளவுக்கு தேமுதிக பலமான சக்தியாகவே விளங்கியது.
எதிர்க்கட்சித் தலைவரானார்: 2004, 2006, 2009 மக்களவை, சட்டப் பேரவைத் தேர்தல்களில் தொடர் தோல்வியில் இருந்த அதிமுகவுக்கு, வெற்றிபெற தேமுதிக மிகவும் அவசியமானது. 2011 சட்டப் பேரவைத் தேர்தலில் எம்ஜிஆர் சக்திகள் இணைகிறோம் என்ற கோஷத்துடன் அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்தார் விஜயகாந்த். இதன் காரணமாக பெரும்பான்மை பலத்துடன் அதிமுக ஆட்சி அமைத்ததுடன், எதிர்க்கட்சித் தலைவராகவும் விஜயகாந்த் பதவி வகித்தார்.
செல்வாக்கு சரிவு ஏன்?: தேர்தலில் அதிமுக – தேமுதிக கூட்டணி காரணமாக, வட தமிழகத்தில் அடர்த்தியாக வாக்கு வங்கி வைத்திருந்த திமுக-பாமக-விசிக கூட்டணி வெறும் 8 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற முடிந்தது. எதிர்க்கட்சித் தலைவராக உருவெடுத்த விஜயகாந்தின் சில தவறான அரசியல் அணுகுமுறைகளால் தேமுதிகவில் இருந்த இரண்டாம் கட்டத் தலைவர்களான பண்ருட்டி ராமச்சந்திரன், ஆஸ்டின், சுந்தர்ராஜன் (விஜயகாந்தின் நெருங்கிய நண்பர்),
மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்டோர் முரண்பட்டு கட்சியிலிருந்து வெளியேறினர். இதனால் தேமுதிகவின் செல்வாக்கு படிப்படியாக குறையத் தொடங்கியது.
2014 மக்களவைத் தேர்தலில்…: இருந்தாலும், 2014 மக்களவைத் தேர்தலில் பாமக இடம்பெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் அந்தஸ்து தேமுதிகவுக்கு கிடைத்தது. பாமக 8 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில், தேமுதிக 14 தொகுதிகளில் போட்டியிட்டது. ஆனால், கூட்டணிக் கட்சிகளின் வாக்குகள் சரியாக பரிமாற்றமாகாததால், தேமுதிகவின் வாக்கு வங்கிக்கு பலத்த சேதாரம் ஏற்பட்டது. அந்த நிலையிலும் தேமுதிகவின் பேர வலிமை குறையாமல் இருந்தது.
2016 பேரவைத் தேர்தலில்…தேமுதிகவின் அரசியல் வீழ்ச்சிக்கு 2016 சட்டப் பேரவைத் தேர்தலில் விஜயகாந்த் மற்றும் அவரின் குடும்பத்தினர் எடுத்த முடிவு முக்கியக் காரணமாக அமைந்துவிட்டதாகவே அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். திமுக – காங்கிரஸ் கூட்டணியில் 55 தொகுதிகள் வரை தேமுதிவுக்கு கிடைக்கும் வாய்ப்பு இருந்ததை கைவிட்டது,தேமுதிகவின் எதிர்காலம் வீழ முக்கியப் புள்ளியாக அமைந்துவிட்டது.
முதல்வர் பதவி ஆசை காரணமாக… முதல்வர் வேட்பாளராக வேண்டும் என்ற அதீத ஆசையில் மக்கள் நலக் கூட்டணிக்கு தலைமை தாங்கி, திமுக அணியிலிருந்த பெரிய வாய்ப்பை தாமாகவே கோட்டைவிட்டது தேமுதிக. இதன் விளைவு தேமுதிகவின் வாக்கு வங்கி 2.5 சதவீதமாக சரிந்தது. 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் ஜெயலலிதாவுடன் இணைந்து கருணாநிதியை வீழ்த்திய விஜயகாந்த், 2016-இல் திமுகவுடன் இணைந்து போட்டியிட்டிருந்தால், மூப்பனார்போல தேர்தல் களத்தில் அரசியல் நிர்ணய சக்தியாகத் தொடர்ந்து இருந்திருப்பார்.
2019 மக்களவைத் தேர்தலில்… 2019 மக்களவைத் தேர்தலில் இருந்த அரசியல் சூழலால் ஒரே நேரத்தில் திமுக – அதிமுகவிடம் பேரம் பேசிய தேமுதிகவுக்கு அதிமுக அணியில் 4 இடங்கள் கிடைத்தன. ஆனால், 2014 மக்களவைத் தேர்தலில் தங்கள் தலைமையிலும், தங்களைவிடக் குறைந்த எண்ணிக்கையில் போட்டியிட்ட பாமகவைவிட குறைந்த எண்ணிக்கையில் போட்டியிட 2019 மக்களவைத் தேர்தலில் ஒத்துக்கொண்டதால், இயல்பாகவே பாமகவைவிட தேமுதிக சிறிய கட்சி என்ற பிம்பம் உருவாகிவிட்டது.
அதிமுகவுக்கு நிர்ப்பந்தம்: பாமகவைவிடக் குறைந்த சக்தி என ஒப்புக்கொண்டு நின்ற தேமுதிக, தற்போது பாமகவைவிட பெரிய சக்தியாகவும், அதையும் ஒருபடி தாண்டி 2011 சட்டப் பேரவைத் தேர்தல்போல 41 தொகுதிகள் தங்களுக்கு ஒதுக்க வேண்டும், பாமக இருக்கும் அணியில் இருக்க மாட்டோம் என்றும் எதிர்ப்புத் தெரிவித்து அதிமுகவுக்கு நிர்ப்பந்தம் தரும் வகையில் வீரமுகம் காட்டத் தொடங்கியுள்ளது.
கண்டுகொள்ளாத அதிமுக: தேர்தல் நெருங்கும்போது இதுபோன்று அரசியல் கட்சிகள் வீரமுகம் காட்டுவது இயல்பு என்றாலும், தேமுதிகவின் பேச்சை இதுவரை அதிமுக கண்டுகொள்ளவில்லை. பாமகவுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் தங்களுக்கு இல்லையே என்ற தேமுதிகவின் ஆதங்கம் பிரேமலதாவின் அண்மைக்கால பேட்டிகளில் தெரிகிறது.
உண்மை நிலவரம் என்ன?: ஆனால், 2011, 2016 சட்டப் பேரவைத் தேர்தல்களில் இருந்ததுபோல தேமுதிகவால் பேர வலிமையை உயர்த்த முடியாது என்பதுதான் மறுக்கவோ, மறைக்கவோ முடியாத உண்மை. அதிமுக கூட்டணியில் இருக்கும் பிற கட்சிகளைப்போல தேமுதிகவுக்கு எதிர்ப்பு வாக்குகள் இல்லை என்பது மட்டும்தான் தேமுதிகவின் தற்போதைய ஒரே பலம்.
30 தொகுதிகளில் மட்டுமே…: கடந்த காலம்போல அல்லாமல் தேமுதிகவுக்கு வட மாவட்டங்கள், கொங்கு மண்டலம், தென் மாவட்டங்கள் ஆகியவற்றில் சுமார் 30 தொகுதிகளில் மட்டுமே செல்வாக்கு இருக்கிறது. இதை மையமாக வைத்துத்தான் அதிமுக அணியில் தேமுதிகவுக்கு தொகுதிகள் ஒதுக்கப்படக்கூடும்.
அதிமுக-பாமக அரசியல் நகர்வுகளைப் பொருத்தே…: அதிமுக – பாமக இடையிலான அரசியல் நகர்வுகளைப் பொருத்துத்தான் தேமுதிக எந்த அணியில் நீடிக்கும் என்பது தெரியவரும். பாமக இருக்கும் அணியில் நீடிக்கமாட்டோம் என்பதும், பாமகவின் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு கொள்கைக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதும், சசிகலாவைப் புகழ்ந்து பேசுவதும் தேமுதிக மாற்று வாய்ப்புக்கான கதவுகளையும் திறந்து வைத்திருப்பதாகவே தெரிகிறது.
எதார்த்தம் என்ன?: ஆனால், அதிமுக, திமுக என எந்த அணியில் இடம்பெற்றாலும் முன்புபோல கணிசமான தொகுதிகளை தேமுதிகவால் பெற முடியாது என்பதே எதார்த்தம். அதிமுக – பாமக உறவு நீடித்தால், திமுக அல்லது அமமுகவுடன் தேமுதிக உறவு மலரக்கூடும். திமுக அணியில் வெற்றியைச் சுவைக்கும் ஒற்றை இலக்கத் தொகுதிகளையும், அமமுகவுடன் சென்றால், வாக்கு வங்கியை உயர்த்தும் இரட்டை இலக்கத் தொகுதிகளையும் மட்டுமே தேமுதிக பெற முடியும்.
கூட்டணி முடிவைப் பொருத்து… 2016 முதல் தொடர் தோல்வியில் இருக்கும் தேமுதிக, எந்தத் திசையில் பயணிக்கப்போகிறது என்பதைப் பொருத்தே அக்கட்சியின் எதிர்காலம் அமையக்கூடும் என்பது அரசியல் ஆய்வாளர்களின் கருத்து.
0 Comments
No Comments Here ..