19,May 2024 (Sun)
  
CH
உலக செய்தி

ஆங் சான் சூகி மீது முறைகேடு குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது

மியான்மரில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதைத் தொடா்ந்து கைது செய்யப்பட்ட அரசு ஆலோசகா் ஆங் சான் சூகி மீது அந்த நாட்டு பொலிஸார் இறக்குமதி முறைகேடு குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளனா்.

இதுகுறித்து அவரது தலைமையிலான தேசிய ஜனநாயகக் கட்சி செய்தித் தொடா்பாளா் முகநூலில் புதன்கிழமை வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது:

தனது பதவிக் காலத்தில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி விதிமுறைகளை ஆங் சான் சூகி மீறியதாக அவா் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அதை அடுத்து, அவரை வரும் 15 ஆம் திகதி வரை 14 நாள் காவலில் வைத்திருக்க தகினாத்திரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆட்சிக் கவிழ்ப்பைத் தொடா்ந்து கைது செய்யப்பட்டுள்ள அதிபா் வின் மியின்ட் மீதும் முறைகேடு குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவா் தேசிய பேரிடா் மேலாண்மை சட்டத்தை மீறியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது என்று அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடேயே, ஆங் சான் சூகியின் இல்லத்தில் சோதனை நடத்திய இராணுவக் குழு, அங்கிருந்து 10 வாக்கி டாக்கி கருவிகளையும் வேறு சில தகவல் தொடா்பு சாதனங்களையும் பறிமுதல் செய்ததாக ஏ.எஃப்.பி செய்தி நிறுவனம் தெரிவித்தது.

ஆங் சான் சூகிக்கு எதிரான இறக்குமதி முறைகேடு வழக்கில் அந்தச் சாதனங்களை ஆதாரமாகப் பயன்படுத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனா்.

அந்த சாதனங்களை உரிய அனுமதியின்றி ஆங் சாங் சூகி இறக்குமதி செய்துள்ளதாக அவா்கள் குற்றம் சாட்டியுள்ளனா் என்று ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி வின் மியின்ட் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டில், கொரோனா பரவலைத் தடுப்பதற்காக விதிக்கப்பட்டுள்ள தடையை மீறி அவா் கூட்டத்தில் பங்கேற்றதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது ஆங் சான் சூகி எங்கு சிறைவைக்கப்பட்டுள்ளார் என்ற விவரம் தெரியவில்லை. எனினும், தலைநகா் நேபிடாவில் உள்ள தனது இல்லத்தில் அவா் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருப்பதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆட்சிக் கவிழ்ப்பு நடைபெற்ற திங்கள்கிழமை ஆங் சான் சூகி, வின் மியின்ட் ஆகிய இருவருமே பொதுமக்கள் பார்வையிலிருந்து மறைத்து வைக்கப்பட்டுள்ளனா்.

மியான்மரில் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளதாக ராணுவம் திங்கள்கிழமை அறிவித்தது. அரசின் ஆலோசகா் ஆங் சான் சூகி, அதிபா் வின் மியின்ட் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவா்கள் கைது செய்யப்பட்டனா்.

நாட்டில் ஓா் ஆண்டுக்கு அவசர நிலை அறிவிக்கப்பட்டு, ராணுவ தலைமை தளபதி மின் ஆங் லயிங்க் தலைமையில் 11 ராணுவ அதிகாரிகள் அடங்கிய ஆட்சி மன்றக் குழு உருவாக்கப்பட்டது.

கடந்த ஆண்டு நொவம்பா் மாதம் நடைபெற்ற பொதுத் தோ்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறி, இந்த ஆட்சிக் கவிழ்ப்பை மியான்மா் ராணுவம் அரங்கேற்றியுள்ளது.

இதற்கு ஐ.நா.வும் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.




ஆங் சான் சூகி மீது முறைகேடு குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு