பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணிக்கு தடைவிதிக்க மல்லாகம் நீதிமன்றம் மறுத்து விட்டது. சுகாதார விதிமுறைகளை பின்பற்றி, பொதுச்சொத்துக்களிற்கு பாதிப்பில்லாத விதத்தில் ஜனநாயகரீதியில் மக்கள் நடத்தும் போராட்டங்களை தடுக்க முடியாதென்றும் பொலிசாருக்கு குட்டு வைத்தார் மல்லாகம் நீதவான் ஆனந்தராசா.
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான போராட்டத்தில் ஈடுபட தடைவிதிக்க கோரி முன்னாள் எம்.பிக்கள் மாவை சேனாதிராசா, ஈ.சவணபவன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், க.சுகாஷ் உள்ளிட்டவர்களிற்கு தடைவிதிக்க கோரி, வட்டுக்கோட்டை, சுன்னாகம், அச்செழு பொலிசார் தாக்கல் செய்த மனுவே தள்ளுபடி செய்யப்பட்டது.
மூத்த சட்டத்தரணி என்.சிறிகாந்தா உள்ளிட்ட சட்டத்தரணிகள் பிரதிவாதிகள் தரப்பில் முன்னிலையாகினர்.
சமர்ப்பணத்தை செய்த என்.சிறிகாந்தா, ஒரே நாடு ஒரே சட்டம் என அரசு சொல்கிறது. ஆனால் கொழும்பில் போராட்டங்கள், சுதந்திர கொண்டாட்டங்கள் நடக்கிறது. இங்கே போராடுபவர்களிற்கு மட்டும் ஏன் தடை? யாழ்ப்பாணத்தில் நேற்று சிறிலங்கா சுதந்திரக்கட்சியினர் நூற்றுக்கணக்கானவர்கள் கூடி பேரணி செய்தார்கள். பொலிசார் அதை தடுக்கவில்லை. இந்த போராட்டத்திற்கு மட்டும் ஏன் தடைவிதிக்க முனைகிறார்கள் என கேள்வியெழுப்பினார்.
இதையடுத்து, உடுவில் சுகாதார வைத்திய அதிகாரியிடம், நாடு முழுவதும் பின்பற்றப்படும் சுகாதார நடைமுறை பற்றி நீதிபதி வினவினார். சுகாதார வைத்திய அதிகாரி விளக்கமளித்தார்.
இதையடுத்து, பொலிசாரின் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.
மல்லாகம் நீதிமன்றத்தின் நியாயாதிக்க எல்லைக்குள் பேரணி செல்வதை தடுக்க முடியாதென்றும், சுகாதார விதிமுறைகளை பின்பற்றி, பொதுச்சொத்துக்களிற்கு பாதிப்பில்லாத விதத்தில் ஜனநாயகரீதியில் மக்கள் நடத்தும் போராட்டங்களை தடுக்க முடியாதென்றும், இந்த தீர்ப்பை யாரும் பிழையாக அர்த்தப்படுத்தக் கூடாது, இந்த வழக்கில் பொலிசாரின் சமர்ப்பணங்களின் அடிப்படையில் இந்த தீர்ப்பு வழங்கப்படுகிறது என தெரிவித்தார்.
0 Comments
No Comments Here ..