இந்தியாவின் மிகப் பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி, கொரோனா ஊரடங்கில் கடுமையான வருவாய் இழப்பைச் சந்தித்திருந்தது. இதன் சுமையை வாடிக்கையாளர்கள் மீது சுமத்தும் வகையில் இந்த ஆண்டின் ஜனவரி மாதம் முதல் கார்களின் விலையை உயர்த்துவதாக அறிவித்தது.
தற்போது கொரோனா பாதிப்புகள் குறைந்து இயல்புநிலை திரும்பியுள்ளதால் வாகன உற்பத்தியிலும் விற்பனையிலும் குறிப்பிடத்தகுந்த வளர்ச்சியை இந்நிறுவனம் பெற்றுள்ளது. மறுபுறம் ஏற்றுமதியிலும் சாதனை படைத்துள்ளது.
ஏற்றுமதியில் 20 லட்சம் கார்கள் என்ற சாதனையை குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்திலிருந்து தென்னாப்பிரிக்காவுக்கு கார்களை ஏற்றுமதி செய்ததன் மூலமாக நிகழ்த்தியுள்ளது மாருதி சுஸுகி. எஸ்-பிரெஸ்ஸோ, விடெரா பிரெஸ்ஸா போன்ற மாடல் கார்கள் தென்னாப்பிரிக்காவுக்கு அதிகமான அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. சர்வதேச அளவில் ஆட்டோமொபைல் துறையில் இந்தியா தனக்கென ஒரு இடத்தைப் பிடித்த பிறகு ஏற்றுமதியில் கணிசமான வளர்ச்சியைப் பதிவுசெய்துள்ளதாக மாருதி சுஸுகி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான கெனிச்சி ஆயுகவா கூறியுள்ளார்.
கடந்த 34 ஆண்டுகளாக மாருதி சுஸுகி நிறுவனம் இந்தியாவிலிருந்து மற்ற நாடுகளுக்கு கார்களை ஏற்றுமதி செய்து வருகிறது. இந்நிறுவனம் தற்போது 14 மாடல் கார்களை 150 வேரியண்ட் பிரிவுகளாக உலகின் 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மாருதி கார்கள் உலக நாட்டவர்களால் அதிகளவு விரும்பப்படுவதாகவும், சர்வதேசத் தரத்துக்கு இருப்பதால் ஏற்றுமதியும் வளர்ச்சி கண்டு வருவதாகவும் மாருதி சுஸுகி நிறுவனம் தெரிவித்துள்ளது..
0 Comments
No Comments Here ..