23,Nov 2024 (Sat)
  
CH
ஆன்மிகம்

நவக்கிரகங்களுக்கென தனித்தனி கோவில்கள் அமைந்த ஒரே தலம்

தென்னகத்தில் சூரியனுக்கான தனிக்கோவில் அமைந்துள்ளதும், ஒரே கோவிலுக்குள் நவகிரகங்களுக்கு என தனித்தனி கோவில்கள் அமைந்த ஒரே தலம் என்பதும் சிறப்பு.

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த ஆடுதுறை அருகே அமைந்து உள்ளது சூரியனார் கோவில். திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமானது இந்த கோவில். சூரியனார்கோவில் என்ற இந்த கோவிலின் பெயரே ஊரின் பெயராகவும் அமைந்து உள்ளது சிறப்பாகும்.

தென்னகத்தில் சூரியனுக்கான தனிக்கோவில் அமைந்துள்ளதும், ஒரே கோவிலுக்குள் நவகிரகங்களுக்கு என தனித்தனி கோவில்கள் அமைந்த ஒரே தலம் என்பதும் சிறப்பு. சூரியன் சன்னதியில் நின்று தரிசிக்கும்போது குரு பகவானின் அருட்பார்வை ஒருசேர கிடைக்கும் ஒரே தலம். நவகிரகங்கள் ஒவ்வொருவருமே தனித்தனி கோவில்களில் மூலவராக இருந்து அருள் வழங்கும் தலம்.

நவ நாயகர்களையும் முதலில் இடமாக சுற்றி வந்து பின்னர் ஒன்பது முறை வலம் வரும் அமைப்புள்ள தலம். ஒரே கோவிலில் ஒன்பது கிரகங்களுக்கும் தோஷ பரிகாரங்கள் செய்யும்படி உள்ள தலம். இரண்டு அசுப கிரகங்களுக்கு இடையில் ஒரு சுப கிரகம் என்ற வரிசை முறையில் அமைந்து அருள்பாலிக்கும் தலம். நவகிரகங்களும் ஒரு சேர்ந்து விநாயகரை பிரதிஷ்டை செய்து அவர் அருளால் தங்கள் தோஷங்களை நிவர்த்தி செய்து கொண்ட தலம்.

இனி இக்கோவில் அமைந்த வரலாற்றை பார்ப்போம்.

முன்னொரு காலத்தில் காலவ முனிவர் என்பவர் இருந்தார். அவர் முக்காலத்தையும் அறியும் மூதறிவு உடையவராக திகழ்ந்தார். சில முனிவர்கள் இவரிடம் வந்து தங்கள் வருங்காலம் பற்றி கேட்டு அறிந்து கொள்வது வழக்கம். ஒருநாள் இளம் துறவி ஒருவர், காலவ முனிவரிடம் வந்து தனது வருங்காலம் குறித்து அறிவிக்கும்படி கேட்டார்.

காலவ முனிவர் தமது ஞான திருஷ்டியால் இளம் துறவியின் வருங்காலம் பற்றி ஆராய்ந்து உமது வருங்காலம் பற்றி கூறுவதற்கு ஒன்றுமில்லை என்றார். உடனே அந்த துறவி, காலவ முனிவரிடம், மற்றவரின் வருங்காலம் பற்றி கூறும் நீர், உம்முடைய வருங்காலம் பற்றி அறிந்ததுண்டா? எனக்கேட்டு நகைத்தார்.

உடனே காலவ முனிவர் அந்த துறவியைப் பார்த்து இவ்வளவு துணிச்சலாக இதுவரை என்னிடம் யாரும் கேட்டதே இல்லை. நீ யார்? என்று கேட்டார். அதற்கு அந்த துறவி நான்தான் காலதேவன் என்று சொல்லி விட்டு அங்கிருந்து மறைந்தார்.

காலவ முனிவர் தன்னுடைய வருங்காலத்தை எண்ணிப் பார்த்தார். தன்னுடைய முன் வினைப்பயனால் கூடிய விரைவில் தமக்கு தொழுநோய் வரும் என்பதை உணர்ந்தார். மிகவும் மனம் நொந்து வாட்டம் அடைந்தார். காலவ முனிவரின் சோகம் படிந்த முகத்தை பார்த்த மற்ற முனிவர்கள் அவரிடம் சோகத்துக்கான காரணம் என்ன? என்று கேட்டனர். அதற்கு அவர், தமது வருங்கால நிலையை அவர்களிடம் எடுத்துரைத்தார்.

அதனைக் கேட்ட மற்ற முனிவர்கள் காலவ முனிவரே! முன்வினை பயனை யூட்டுகிறவர்கள் நவகிரகங்கள். அவர்களை நோக்கி தவம் செய்து வினைப்பயனில் இருந்து விடுதலை பெற முயற்சி செய்யுங்கள் என்று ஆறுதல் கூறினர். இதனையடுத்து ஒரு நல்ல நாள் பார்த்து பஞ்சாக்கினி வளர்த்து அதன் நடுவில் நின்று நவக்கிரகங்களை தியானித்து கடுந்தவம் புரிந்தார்.

தம்மை நோக்கி தவம் புரியும் காலவ முனிவரின் முன்பு நவநாயகர்கள் ஒருசேர வந்து காட்சி கொடுத்தார்கள். காலவ முனிவரின் பரவச நிலையை கண்டு மகிழ்ந்த நவ நாயகர்கள், முனிவரே உங்களுக்கு என்ன வரம் வேண்டும்? என கேட்டனர்.


காலவ முனிவர், நவநாயகர்களை நோக்கி தன்னை தொழுநோய் அணுகாதபடி வரம் தரவேண்டும் என்று வேண்டினார். அதற்கு நவ நாயகர்களும் அவ்வண்ணமே ஆகுக என்று வரம் தந்து மறைந்தனர்.

இந்த செய்தி பிரம்ம தேவருக்கு தெரிய வந்தது அதனால் பிரம்மதேவர் சினம் கொண்டு நவக்கிரகங்களை நோக்கி, நவக்கிரகங்களில் நீங்கள் தேவர்களாக இருந்தாலும் என் கட்டளைப்படி நடக்க வேண்டியவர்கள் ஆவீர்கள். தனித்து இயங்கும் சுதந்திரம் உங்களுக்கு இல்லை.

ஆனால் நீங்கள் எமது உத்தரவுக்கு கீழ்படியாமல் மீறி நடக்கத் தொடங்கினீர்கள். நீங்கள் சுதந்திரமானவர்களாகி காலவ முனிவருக்கு தொழுநோய் அணுகாமல் இருக்க வரம் கொடுத்துள்ளீர்கள். ஆகவே நீங்கள் 9 பேரும் பூலோகத்தில் பிறந்து காலவ முனிவர் தொழுநோயால் துன்பப்பட வேண்டிய கால அளவு வரை நீங்களும் அந்த தொழுநோய் துயர் அடைவீர்கள் என்று சாபமிட்டார்.

சாபம் பெற்ற நவக்கிரகங்கள் பிரம்மதேவரின் திருவடிகளில் விழுந்து வணங்கினர். தங்களை மன்னிக்க வேண்டும். காலவ முனிவரின் தவத்தினை அறிந்து அவர் கேட்ட வரத்தை தந்து விட்டோம். அறியாமல் செய்த பிழையை பொறுத்து தங்களின் சாபத்துக்கு விமோசனம் கூற வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். அதைகேட்டு மனம் இரங்கிய பிரம்மதேவர், நவக்கிரக நாயகர்களாகிய நீங்கள் எனது கட்டளையை மீறி நடந்ததால் இந்த சாபம் பெற்றீர்கள். ஆயினும் சாபவிமோசனம் கேட்டு நிற்பதால் ஒரு வழி கூறுகிறோம்.

நீங்கள் பூலோகத்திற்கு சென்று காவிரி ஆற்றின் வடகரையில் தங்கியிருந்து தவம் புரியுங்கள். 12 ஞாயிற்றுக்கிழமைகள் தொடர்ந்து தவம் புரிய வேண்டும் என்று கூறினார். அதன்படி நவக்கிரகங்கள் 78 நாட்கள் தவம் புரிந்து 79-ம் நாள் திங்கட்கிழமை விடியலில் காவிரியில் நீராடி எழுந்தனர். அப்போது தங்கள் உடம்பில் இருந்த தொழுநோய் பாதிக்குமேல் குணமாகி இருப்பது கண்டு வியந்தனர்.

பின்னர் பிராணநாதரை அணுகி வழிபட்டனர். வழிபாட்டின் முடிவில் பிராணநாதர், மங்களநாயகியுடன் நவநாயகர்களுக்கு காட்சி கொடுத்தார். பின்னர் பிராணநாதர், நவநாயகர்களை நோக்கி நீங்கள் தங்கி தவம் செய்த இடத்தில் உங்களுக்கு என தனி ஆலயம் உண்டாக்கி அது உங்களுக்கு உரிய தலமாக விளங்கும். அங்கே வந்து உங்களை வழிபடுவோருக்கு நீங்கள் சுதந்திரமாக அனுக்கிரகம் செய்ய வரம் தந்தோம் என்று கூறி மறைந்தருளியதாக தல வரலாறு தெரிவிக்கிறது.


இவ்வாலயத்தின் ராஜகோபுரம் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. ஆலயத்தின் உள்ளே மத்தியில் சூரியபகவான் கர்ப்பக்கிரகமும் அதைச் சுற்றி ஒரு பிரகாரமும், நாற்புறமும் உயரமான மதில்களும் உள்ளன. பிரகாரத்தில் தென்மேற்கு மூலையில் கோல் வினைதீர்த்த விநாயகர் கோவிலும், வடக்கு பிரகாரத்தில் தீர்த்தக்கிணறும் உள்ளன. சூரிய பகவானின் கர்ப்பக்கிரகத்தை ஒட்டி நவநாயகர்களில் சனி, புதன், செவ்வாய், சந்திரன், கேது, சுக்கிரன், ராகு என்று 7 பேருக்கும் தனித்தனி சிறு கோவில்கள் உள்ளன. சூரியனார்கோவில் தலத்தை அடைந்து மன்னர்களும், முனிவர்களும் வழிபட்டு பலன் பெற்றுள்ளதாக புராண வரலாறுகள் தெரிவிக்கிறது.

சூரியனார் கோவிலின் பிரதானமான கருவறையில் மேற்கு முகமாக நின்ற திருக்கோலத்தில் சூரிய பகவான் காட்சி அருள்கிறார். இவருக்கு இடப்புறம் உஷா தேவியும், வலப்புறம் சாயா தேவியும் நின்ற வண்ணம் காட்சி அளிக்கின்றனர். சூரியபகவான் தமது இரு கரங்களிலும் செந்தாமரை மலர்களை ஏந்தி புன்முறுவலுடன் அருள்பாலிக்கிறார்.

சூரிய பகவானின் கருவறைக்கு முன்பு மகா மண்டபத்தில் குருபகவான் எழுந்தருளி இருப்பதுபோல கருவறைக்கு வெளியே தென்மேற்கில் சனீஸ் வரனும், தெற்கில் புதனும், தென்கிழக்கில் அங்காரகனும், கிழக்கில் சந்திரனும், வடகிழக்கில் கேதுவும், வடக்கில் சுக்கிரனும், வடமேற்கில் ராகுவும் தனித்தனி கோவில்களில் எழுந்தருளி உள்ளனர். அதாவது சூரியனைச் சுற்றியுள்ள எட்டு திசைகளிலும் ஏனைய எட்டு கிரக நாயகர்களும் எழுந்தருளி உள்ளனர் என்பது சிறப்பாகும்.


கோவிலில் வழிபடும் முறை

இந்த கோவிலில், கோல் வினை தீர்த்த விநாயகரை வணங்கிய பின்னர் முதலில் சூரிய பகவானையும், அடுத்து குரு பகவானையும் வழிபடவேண்டும். மூன்றாவதாக சனி பகவானையும் தொடர்ந்து புதன், சந்திரன், கேது, சுக்கிரன், ராகு என்ற வரிசை முறையில் வழிபாடுகள் ஆற்றி நிறைவாக தேஜஸ் சண்டேஸ்வரரை வணங்க வேண்டும்.


கோள்வினைதீர்த்த விநாயகர்

பிரம்மனால் சாபம் பெற்ற நவக்கிரக நாயகர்கள் இத்தலத்திற்கு வந்து தவம் செய்ய தொடங்கும்போது தங்களுக்கு ஏற்பட்ட சாபப்பிணி எனும் வினை நீங்கும் பொருட்டு விநாயகரை பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். கோள்களின் வினையை விநாயகர் தீர்த்து வைத்தால் இவருக்கு கோள்வினைதீர்த்த விநாயகர் என்ற திருப்பெயர் உண்டாயிற்று. இவ் விநாயகர் கோவில், பிரகாரத்தின் தென்மேற்கு மூலையில் அமைந்துள்ளது. ஏகதள விமானத்துடன் கூடிய கர்ப்பக்கிரகத்தில் விநாயகர் கிழக்கு முகமாக எழுந்தருளியுள்ளார்.


கோவிலின் அமைவிடம்

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து கிழக்கே 15 கிலோ மீட்டர் தொலைவிலும், ஆடுதுறையில் இருந்து வடக்கே இரண்டு கிலோ மீட்டர் தொலைவிலும், திருப்பனந்தாளில் இருந்து தெற்கே பத்து கிலோ மீட்டர் தொலைவிலும், மயிலாடுதுறையில் இருந்து மேற்கே 21 கிலோமீட்டர் தொலைவிலும் இத்தலம் அமைந்துள்ளது.




நவக்கிரகங்களுக்கென தனித்தனி கோவில்கள் அமைந்த ஒரே தலம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு