இலங்கையில் அண்மைக் காலங்களில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தால் உயிர் மற்றும் சொத்துக்களை இழந்தோருக்கு இழப்பீடு பெறுவதில் ஏதேனும் சிக்கல் இருப்பின் 117 என்ற இலக்கத்திற்கு அல்லது குறித்த மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவுக்கு அழைப்பு விடுக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி பொதுமக்களை கேட்டுக் கொண்டார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
குறித்த மாவட்டத்தின் மாவட்ட செயலாளரினால் இழப்பீட்டுத் தொகை தீர்மானிக்கப்படும்.
அந்த இழப்பீட்டுத் தொகையை வழங்குவதற்கு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
கடந்த 3 ஆம் திகதியிலிருந்து இலங்கையில் ஏற்பட்ட அனர்த்த நிலை காரணமாக 21 மரணங்கள் பதிவாகியுள்ளன. மேலும், 10 மாவட்டங்களில் 43,890 குடும்பங்களில், 172,132 பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, அனர்த்தத்திற்குள்ளாகிய மக்களுக்கு இழப்பீட்டுத் தொகையை வழங்குவதில் எந்த பிரச்சினையும் இல்லை என்றும், அனர்த்தத்தினால் மரணித்த ஒருவருக்கு 250,000 இழப்பீட்டுத் தொகையும், சேதமடைந்த வீடுகளுக்கு ரூபாய் 10 ஆயிரம் முதல் 25 லட்சம் வரையிலான இழப்பீட்டுத் தொகை மதிப்பீட்டு அறிக்கைக்கு அமைய வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி மேலும் தெரிவித்தார்.
0 Comments
No Comments Here ..