“எதிர்வரும் வாரம் முதல் 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் கடற்றொழிலுக்கு செல்வதாயின் தடுப்பூசி பெற்றிருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவர்” இது கடந்த கிழமை மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் விநோதன் தர்மராஜன் தனது முகநூல் பக்கத்தில் எழுதிய குறிப்பு.
அதன்படி தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்கள் மட்டுமே கடலில் இறங்க அனுமதிக்கப்படுவர் என்று மன்னாரில் கடற்படையினர் அறிவுறுத்தியதாக தெரியவருகிறது. எனினும் பின்னர் அக்கட்டுப்பாட்டை அவர்கள் கைவிட்டதாகவும் தெரியவருகிறது.
மன்னார் மாவட்டத்தில் இதுவரை முதல் டோஸ் தடுப்பூசியே ஏற்றப்பட்டுள்ளது. இரண்டாவது டோஸ் ஏற்றப்பட்டபின் சில சமயம் மேற்படி கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படக்கூடும். ஏனெனில் மன்னார் மாவட்ட மீனவர்கள் கடலில் தமிழக மீனவர்களோடு நெருங்கிப் பழகுவதற்கான அதிகரித்த வாய்ப்புகளை கொண்டிருப்பதனால் அவர்கள் இந்திய டெல்டா திரிபு வைரஸ் தொற்றுக்கு ஆளாகக்கூடிய அதிகரித்த வாய்ப்புகளை கொண்டிருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.
அந்த அடிப்படையிலேயே மேற்கண்டவாறு அறிவுறுத்தப்பட்டிருக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது. எதுவாயினும் எதிர்வரும் காலங்களில் தடுப்பூசிக் கார்ட் அதாவது ஊசிக் கார்ட்டைக் காட்டினால்தான் கடலில் இறங்கலாம், சில காரியங்களைச் செய்யலாம், விமான நிலையங்களை கடக்கலாம் போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் வாய்ப்புகள் அதிகமாக தெரிகின்றன.
தமிழ் மக்களின் கடந்த பல தசாப்த கால வாழ்வில் அவர்கள் ஏதோ ஒரு ஆவணத்தைக் காவ வேண்டி இருந்தது. இதில் மருத்துவ மாதுக்களால் குடும்பப் பெண்களுக்கு வழங்கப்படும் அம்மா கார்ட் மட்டும் விதிவிலக்கு. அதற்கு பாதுகாப்பு தொடர்பான பரிமாணம் கிடையாது.
அதைத் தவிர போர்க் காலம் முழுவதிலும் தொடக்கத்திலிருந்து முடிவு வரை அடையாள அட்டையை காவ வேண்டியிருந்தது. தான் பிறந்து வளர்ந்த தனது சொந்த ஊரிலேயே தனது சொந்த தெருவிலேயே ஒரு தமிழ் ஆள் ஒரு சிப்பாய்க்கு அல்லது காவல்துறை ஆளுக்கு தன்னுடைய அடையாளத்தை நிரூபிக்க வேண்டி இருந்தது.
தனது சொந்தக் கடலில் இறங்கும் ஒவ்வொரு மீனவரும் ஒரு டோக்கன் இலக்கத்தை வைத்திருக்க வேண்டி இருந்தது. அதற்கும் ஒரு பாஸ் நடைமுறை இருந்தது. அது யுத்த காலம். ஆனால் இப்பொழுதும் கூட ஆங்காங்கே அடையாள அட்டையை கேட்கும் நடைமுறை உண்டு.
வைரஸ் தொற்றைச் சாட்டாக வைத்து சந்திகளில் நிற்கும் படைத்தரப்பு இடைக்கிடை ஆவணங்களைக் கேட்டு சோதிக்கிறது. தமிழர்களுக்கு எப்பொழுதுமே சோதிக்கப்படும் ஒரு வாழ்க்கைதான். அவ்வாறு சோதிக்கப்படும் பொழுது உரிய ஆவணங்களைக் காட்டவேண்டும். இந்த ஆவணங்கள் தொடக்கத்தில் அடையாள அட்டைகளாக இருந்தன.
அடையாள அட்டைகளும் பலவிதம்.தேசிய அடையாள அட்டை,மாவட்ட அடையாள அட்டை, ராணுவ அடையாள அட்டை என்றெல்லாம் அடையாள அட்டைகள் இருந்தன. சில சமயங்களில் குடும்பமாக படமெடுத்து அதை படைத்தரப்பு உறுதிப்படுத்திய பின் வீட்டில் குடும்ப அடையாள அட்டை போல அதை வைத்திருக்க வேண்டும்.
அந்த படத்தில் இல்லாத யாராவது வீட்டில் இருந்தால் கைது செய்யப்படுவார்கள். இவைதவிர குடும்ப அட்டைகளை வைத்திருக்க வேண்டும். போரில் ஈடுபட்ட இரண்டு தரப்புமே குடும்ப அட்டை வைத்திருக்குமாறு கேட்டன.
0 Comments
No Comments Here ..