அமெரிக்காவில் REGEN-COV எனவும் ஐக்கிய இராச்சியத்தில் Ronaprev எனவும் அழைக்கப்படுகின்ற மருந்தை காலம் கடந்தேனும் இலங்கைக்கு கொண்டுவர தீர்மானிக்கப்பட்டமை தொடர்பில் மகிழ்ச்சியடைவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இந்த மருந்தின் முக்கியத்துவம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 28 ஆம் திகதி ட்விட்டரில் வலியுறுத்தியிருந்தார்.
உலகம் முழுவதும் அதிக கேள்வி நிலவுகின்ற இந்த மருந்தை நாட்டிற்கு கொண்டு வருமாறு ஆகஸ்ட் 30 ஆம் திகதி எதிர்க்கட்சித் தலைவர் அரசாங்கத்தை கோரியிருந்தார்.
கொரோனா தொற்றின் ஆரம்பத்தில் தடுப்பூசியின் முக்கியத்துவம் மற்றும் முகக்கவசம் அணிதலின் முக்கியத்தும் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் அரசாங்கத்திற்கு தௌிவுபடுத்தும் போது, அரசாங்கம் அதனை நகைப்பிற்கு உட்படுத்தியது.
அதே பாணியில் மருந்து தொடர்பிலான வேண்டுகோளையும் செவிமடுக்காத அரசாங்கம், கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வதைப் போன்று தற்போது அனுமதி வழங்கியிருந்தாலும், மக்களின் வாழ்க்கை தொடர்பில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றினால் நாட்டில் பாரிய அழிவுகள் ஏற்பட்டபோது அரசாங்கம் மூட நம்பிக்கையின் பின்னால் சென்று விஞ்ஞானத்தை மறந்ததன் விளைவாக ஒன்பதாயிரத்திற்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்பட்டனவென எதிர்க்கட்சித் தலைவர் மேலும் கூறியுள்ளார்.
0 Comments
No Comments Here ..