13,May 2024 (Mon)
  
CH
ஆன்மிகம்

கிழமையும் குணநலன்களும்

பிறந்த தேதி, பிறந்த நட்சத்திரம் போன்று ஒருவர் பிறக்கும் கிழமையும் அதிமுக்கியமானது. கிழமைகள், ஒருவரது பண்பு நலன்களுக்கும் அதன் விளைவாக அவர்களுடைய செயல்பாடுகளின் பலன்களுக்கும் காரணமாக அமைவது உண்டு. ஒருவரின் கிழமையின் மூலமாக அவர்களின் குண நலன்கள், அவர்களின் சிறப்பு பற்றி கூற முடியும்.


வாரத்தின் ஒவ்வொரு கிழமையும் ஒவ்வொரு குணத்துடன் திகழ்கின்றது. ஆனால், ஜோதிட ரீதியாக ஒவ்வொரு கிழமையில் பிறந்தவர்களுக்கும் ஒவ்வொருவிதமான குணம் இருக்கும்.


 ஞாயிற்றுக்கிழமை 


ஞாயிற்றுக்கிழமை பிறந்தவர்கள், எந்த ஒரு செயலில் ஈடுபட்டாலும், அதில் வென்று முடிக்கும்வரை ஓயமாட்டார்கள். 


எதிலும் ஒளிவு மறைவின்றி வெளிப்படையான குணமுள்ளவர்களாக இருப்பார்கள். ''இங்கே என்ன தோணுதோ அத பேசறேன், இங்க என்ன தோணுதோ அதைச் செய்றேன்'' என்கிற டைப். இவர்கள்,சொல்வதைத்தான் செய்வார்கள் செய்வதைதான் சொல்வார்கள்.

 

மற்றவர்கள் கடினமாகச் செய்யும் செயல்களைக்கூட இவர்கள் போகிறபோக்கில் செய்துவிடுவார்கள். ஆளுமைத் திறன் மிக்கவர்கள். 


திங்கள்கிழமை


திங்கள்கிழமை பிறந்தவர்கள், வசீகரமான தோற்றத்தாலும், நகைச்சுவைமிக்க பேச்சாலும் மற்றவர் மனதில் எளிதில் இடம்பிடித்து விடுவார்கள். இவர்களுக்கு நண்பர்கள் அதிகமாக இருப்பார்கள். 


வீட்டில் இருக்கும் நேரத்தைவிட நண்பர்களுடன் பொழுதுபோக்குவதில்தான் இவர்களுக்கு ஆர்வம் அதிகம். எங்கு இருந்தாலும், இவர்கள் அந்தச் சூழ்நிலையைத் தனதாக்கிக்கொள்வார்கள். உதவி என்று யார் வந்து கேட்டாலும், உடனே செய்துவிடுவார்கள். பிறகு தங்களின் கைச் செலவுக்கு இல்லாமல் அவதிப்படுவதும் உண்டு. 


செவ்வாய்க்கிழமை 


செவ்வாய்க்கிழமையில் பிறந்தவர்கள், வம்புசண்டைக்குப் போக மாட்டார்கள். வந்த சண்டையை விடவும் மாட்டார்கள். இவர்களுடன் பேசும்போது மற்றவர்கள் கவனமாக இருக்கவேண்டும். 

மற்றவர்களுடன் பேசும்போது இவரும் கவனமாக இருக்க வேண்டும். சூடம் காண்பித்துக் கொண்டே மணி அடிப்பது போல் விவாதம் செய்யும்போது மிகச் சரியாக எதிராளியை உரிய ஆதாரங்களுடன் வீழ்த்திவிடுவார்கள். 


முணுக் முணுக்கென இவர்களுக்குக் கோபம் வருவது வாடிக்கை. ஆனால் கோபம் உள்ள இடத்தில்தான் குணம் இருக்கும் என்பது போல் இவர்களாகவே வலிய வந்து ஸ்நேகமாகி விடுவார்கள். 


புதன்கிழமை 


புதன்கிழமை பிறந்தவர்கள், எதையாவது எழுதிக்கொண்டும் படித்துக்கொண்டும் இருப்பார்கள். தங்களுக்குத் தேவை இல்லையென்றாலும்கூட, அதை அறிந்து வைத்துக்கொள்வதில் அதிகம் ஆர்வமுள்ளவர்கள். இயல்பிலேயே கொஞ்சம் ரிசர்வ் டைப்பான இவர்கள், கொஞ்சம் கூச்ச சுபாவமுள்ளவர்களாகவும் இருப்பார்கள். 


நண்பர்களைத் தேர்ந்தெடுத்துத்தான் பழகுவார்கள். பழகிவிட்டால் நட்புக்காக உயிரையும் கொடுப்பார்கள். திடுக்கெனப் பறந்து சென்று மீனைக் கவ்விடும் மீன்கொத்திப் பறவையைப்போல் தங்களுக்கான இடத்தை எந்தச் சபையிலும் பெற்று விடுவார்கள். 


வியாழக்கிழமை 


வியாழக்கிழமையில் பிறந்தவர்கள், நன்நெறிகளுக்கு இருப்பிடமாகத் திகழ்வார்கள். அதனால், இவர்கள் பெரும்பாலும் தேவையில்லாத பிரச்னைகளில் அத்தனை எளிதாகச் சிக்கமாட்டார்கள். 


தன்னடக்கம் மிக்கவர்களாக இருப்பார்கள். இருந்த இடத்திலிருந்துகொண்டே எல்லா விஷயமும் அறிந்தவர்களாக இருப்பார்கள். இதனால் சிலர் இவரைக் கர்வம் பிடித்தவர் என்றுகூட எண்ணுவார்கள். 


தெய்வ வழிபாட்டிலும், ஆன்மிகச் சொற்பொழிவுகளைக் கேட்பதிலும் அதிகம் ஆர்வம் இருக்கும். வாழ்க்கை குறித்த தெளிவான திட்டமிடலும் முறையான அணுகுமுறையும் இவரை வெற்றிப்பாதையில் அழைத்துச் செல்லும். 


வெள்ளிக்கிழமை 


வெள்ளிக்கிழமையில் பிறந்தவர்கள் வாழ்க்கையின் சகல சுகங்களையும் அனுபவிக்கப் பிறந்தவர்கள். வாழ்க்கை வாழ்வதற்கே என்று வாழ்பவர்கள். அதனால், தங்கள் மனதுக்கு எது பிடிக்கின்றதோ அதை எந்தச் சூழ்நிலையிலும் அடைந்தே தீருவார்கள். 


சுற்றுலா பிரியர்களான இவர்கள், காலில் சக்கரம் கட்டாத குறையாக அலைந்துகொண்டிருப்பார்கள். ஆனால், இவரது உழைப்பு முழுவதும் மற்றவர்களுக்கே சென்று சேரும். புகழ்ச்சியை விரும்பும் இவர்கள் எதையும் எல்லோரையும் எளிதாக நம்பி விடுவார்கள்.


எல்லா மதநம்பிக்கையாளர்களும் புனிதமான நாளாக நினைப்பது வெள்ளிக்கிழமையைத்தான். 


சனிக்கிழமை 


சனிக்கிழமை பிறந்தவர்கள், தூங்கினால் கும்பகர்ணன், எழுந்து நின்றால் இந்திரஜித் போன்றவர்கள். சோம்பலும், தள்ளிப்போடுவதும் இவர்களது பிறவிக்குணம். 


நண்பர்களுக்காக எதையும் செய்யும் குணம் உள்ளவர்கள். எதிலும் ஒரு அலட்சியப் போக்கு எதைப் பற்றியும் கவலைப்படாத கடைசி பெஞ்ச் மனோபாவம். 


'எப்ப வருவேன், எப்படி வருவேன்னு தெரியாது. ஆனா, வரவேண்டிய நேரத்துல கரெக்டா வருவேன் 'என்கிற டைப். எதிலும் ஷார்ட் கட் ரூட்டை ஃபாலோ பண்ணுவார்கள். மேற்கிலிருந்து கிழக்கைப் பார்ப்பார்கள். 


மற்றவர்களிடமிருந்து மிகவும் வேறுபட்டு இருப்பார்கள். ஆனால், எல்லோரிடமும் ஒரு 'பர்சனல் டச்' வைத்திருப்பார்கள். அதனாலேயே இவரைப் பலரும் விரும்புவார்கள்.





கிழமையும் குணநலன்களும்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு