02,May 2024 (Thu)
  
CH
விளையாட்டு

தங்கப்பதக்கத்தோடு விடைபெற்ற விளையாட்டு வீராங்கனை

தனது 23 வருட மெய்வல்லுநர் விளையாட்டுத்துறை வாழ்க்கையின் கடைசி ஈட்டி எறிதல் நிகழ்ச்சியில் தங்கப் பதக்கம் வென்ற மகிழ்ச்சியுடன் மெய்வல்லுநர் விளையாட்டிலிருந்து நதீகா லக்மாலி விடைபெற்றார்.

விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் விளையாட்டுத்துறை அபிவிருத்தி திணைக்களம் ஆகியன இணைந்து நடத்தும் 47ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகளின் கடைசி அம்சமான மெய்வல்லுநர் போட்டிகள் தற்போது சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்றுவருகின்றன.

போட்டியின் இரண்டாம் நாளான வெள்ளிக்கிழமை (25) நடைபெற்ற பெண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் 51.84 மீற்றர் தூரத்துக்கு ஈட்டியை எறிந்த 42 வயதான நதீகா லக்மாலி தங்கப் பதக்கத்தை சுவீகரித்து மெய்வல்லுநர் விளையாட்டிலிருந்து விடைபெற்றார்.

2001ஆம் ஆண்டிலிருந்து ஈட்டி எறிதலில் பங்குபற்றிவந்த நதீகா லக்மாலி 2003இல் முதல் தடவையாக தேசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றதுடன், இந்த வருடம் வரை 12 தடவைகள் சம்பியனாகி இருந்தார்.

2013 ஆசிய சம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தையும் 2016 ஆசிய சம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கத்தையும் லக்மாலி வென்றிருந்தார்.

இது இவ்வாறிருக்க, ஆண்களுக்கான 110 மீற்றர் சட்டவேலி ஓட்டப் போட்டியின் 3ஆவது தகுதிகாண் சுற்றில் மேல் மாகாண வீரர் ஐ. லக்விஜய புதிய போட்டி சாதனையை நிலைநாட்டினார். அப்போட்டியை அவர் 14.18 செக்கன்களில் நிறைவுசெய்தே புதிய சாதனையை நிலைநாட்டினார்.

ஆண்களுக்கான 110 மீற்றர் சட்டவேலி ஓட்டத்தின் இறுதிப் போட்டி இன்று (26) நடைபெறவுள்ளது.

 

ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் வட மாகாண வீரர் ஏ. புவிதரன் (4.80 மீற்றர்) வெண்கலப் பதக்கத்துடன் திருப்தி அடைந்தார்.

அப்போட்டியில் மேல் மாகாண வீரர்களான இஷார சந்துருவன் (5.00 மீற்றர்), ஈ. ஜனித் (4.90 மீற்றர்) ஆகிய இருவரும் முறையே தங்கம், வெள்ளிப் பதக்கங்களை வென்றெடுத்தனர்.

ஆண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் ஊவா மாகாண வீரர் சி. அரவிந்தன் (1 நிமிடம், 54.94 செக்.) வெண்கலப் பதக்கத்தை வென்றெடுத்தார்.

அப்போட்டியில் தென் மாகாண வீரர்களான ஆர். சத்துரங்க (1:54.25), பி. புஷ்பகுமார (1:54.57) ஆகியோர் முறையே தங்கம், வெள்ளிப் பதக்கங்களை வென்றனர்.

பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் தென் மாகாணத்தின் கயன்திகா அபேரட்ன (2:04.13) தங்கப் பதக்கத்தையும் நிமாலி லியன ஆராச்சி (2:04.88) வெள்ளிப் பதக்கத்தையும் சுவீகரித்தனர்.

ஆண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் வட மேல் மாகாணத்தைச் சேர்ந்த இசுறு லக்ஷான் (21.19 செக்.), ஏ.எஸ்.எம். சபான் (21.54), தென் மாகாணத்தைச் சேர்ந்த பி. உடகெதர (21.58 செக்) ஆகியோர் முறையே தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை வென்றெடுத்தனர்.


பெண்களுக்கான நீளம் பாய்தலில் மேல் மாகாண வீராங்கனை லக்ஷானி சாரங்கி சில்வா 6.34 மீற்றர் தூரம் பாய்ந்து தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.

அவரது சக அணி வீராங்கனைகளான அஞ்சனி புலவன்ச (5.96 மீற்றர்) வெள்ளிப் பதக்கத்தையும் எல். சுகந்தி (5.75 மீற்றர்) வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.

பெண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் தென் மாகாணத்தைச் சேர்ந்த நடீஷா ராமநாயக்க (24.39 செக்.), 400 மீற்றர் சட்ட வேலி ஓட்டப் போட்டியில் இதே மாகாணத்தைச் சேர்ந்த என். லக்மாலி (1:0103 செக்.) ஆகியோர் தங்கப் பதக்கங்களை சுவீகரித்தனர்.47ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகள் இன்றுடன் நிறைவடைகிறது.

 

 





தங்கப்பதக்கத்தோடு விடைபெற்ற விளையாட்டு வீராங்கனை

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு