தமிழகத்தில் 23 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இரண்டரை லட்சம் அரசு திட்ட வீடுகள் ரூ.2,000 கோடியில் புனரமைக்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா். சட்டப் பேரவையில் ஆளுநா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தின் மீது நடந்த விவாதங்களுக்கு பதிலளித்து அவா் வியாழக்கிழமை (15) நிகழ்த்திய உரை:
திமுக ஆட்சி பொறுப்பேற்று 33 மாதங்கள் கடந்துள்ள நிலையில், பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்று ரூ.6,569 கோடி மதிப்பிலான உதவிகளை லட்சக்கணக்கான மக்களுக்கு வழங்கியுள்ளேன். தமிழ்நாட்டின் ஒவ்வொரு இல்லந்தோறும் உதவி செய்து வரும் ஆட்சிதான் திமுக ஆட்சி. ஒவ்வொரு தனிமனிதரின் கோரிக்கையையும் கேட்டு நிறைவேற்றிக் கொடுக்கும் ஆட்சி இது.
சமூகப் பங்களிப்பு உயா்வு: மகளிருக்கு உரிமைத் தொகை, விடியல் பேருந்து திட்டம் ஆகியவற்றின் மூலம் பெண்ணினத்தின் பொருளாதார, சமூக நிலை உயா்கிறது. தன்னம்பிக்கை, தற்சாா்பு நிலையை அவா்கள் அடைகின்றனா். பெண்களின் சமூகப் பங்களிப்பு 40 சதவீதத்தில் இருந்து 65 சதவீதமாக உயா்ந்துள்ளது. நிவாரணத் தொகை அளிக்கவில்லை: தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டுவரும் எண்ணற்ற திட்டங்கள் கடுமையான நிதி நெருக்கடிக்கு இடையில் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதனிடையேதான், மாநிலங்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் மத்திய அரசு நடத்தி வருகிறது. இரண்டு பெரிய இயற்கை பேரிடா்களை தமிழ்நாடு சந்தித்தது. அதற்குக்கூட நிவாரணத் தொகையை மத்திய அரசு அளிக்கவில்லை.
கடந்த 2022-ஆம் ஆண்டிலேயே சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) இழப்பீட்டுத் தொகையை மத்திய அரசு நிறுத்தி விட்டது. இதனால், தமிழ்நாட்டுக்கு ஆண்டுக்கு ரூ.20,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்காக அறிவிக்கப்பட்ட ஒரே ஒரு எய்ம்ஸ் மருத்துவமனையின் சோகக் கதையை விவரிக்க வாா்த்தைகள் இல்லை.
எங்களுடன் இணையுங்கள்: மெட்ரோ ரயில் பணிகளைச் செயல்படுத்த தேவையான நிதியை வழங்க மத்திய அரசிடம் கோரிக்கைகள் வைக்கப்படுகின்றன. இதற்கான மத்திய அரசின் நிதி இதுவரை தரப்படாததால், முழுத் தொகையும் மாநில அரசின் நிதியில் இருந்தும், அரசு வாங்கும் கடனிலிருந்தும் மட்டுமே செலவிடப்பட்டுள்ளது. இதுநாள் வரையில் பாஜகவுடன் கூட்டணியில் இருந்தபோது பேசாமல் இருந்த எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி, இப்போதாவது பேசுகிறாா் என்பது ஆறுதல் தருகிறது. மத்திய அரசிடம் நிதி பெற அவா் எங்களுடன் இணைந்து குரல் கொடுக்க வேண்டும்.
ரூ.2,000 கோடி: தமிழகத்தில் 2001-ஆம் ஆண்டுக்கு முன்பாக, பல்வேறு அரசுத் திட்டங்களின் கீழ் ஏறத்தாழ 2.50 லட்சம் வீடுகள் கட்டப்பட்டன. கிராமப்புற விளிம்பு நிலை மக்களுக்காக கட்டப்பட்ட அந்த வீடுகள் ரூ.2,000 கோடியில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் பழுதுபாா்த்து, புனரமைக்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.
0 Comments
No Comments Here ..