பிரியாணி என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். அதிலும் சீரக சம்பா பிரியாணி, பாஸ்மதி அரிசி பிரியாணிகளை தான் நாம் சுவைத்திருப்போம். ஆனால் கொஞ்சம் வித்தியாசமாக சேமியாவை பயன்படுத்தி பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம். சேமியா குலையாமல் தனித்தனியாக பொல பொல வென்று எப்படி வரும் என்பதை பற்றியும் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்,
சேமியா -1 பாக்கெட்
சிக்கன்- 150 கிராம்
பெரிய வெங்காயம் -2
தக்காளி -2
பச்சை மிளகாய் -3
இஞ்சி பூண்டு பேஸ்ட் - கால் ஸ்பூன்
பட்டை -1 இன்ச்
பிரியாணி இலை -1
கிராம்பு - 2
ஏலக்காய் 2
மஞ்சள் தூள் -கால் ஸ்பூன்
மிளகாய் தூள் - அரை ஸ்பூன்
கரம் மசாலா - கால் ஸ்பூன்
கொத்தமல்லி புதினா -சிறிதளவு
தயிர் -50 மில்லி
நெய் -2 ஸ்பூன்
எண்ணெய் -4 ஸ்பூன்
உப்பு- தேவையான அளவு
புதினா, கொத்தமல்லி - ஒரு கைப்பிடி
செய்முறை
முதலில் தண்ணீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும். அதில் சேமியாவை சேர்த்து அதிலே ஒரு ஸ்பூன் எண்ணெய் மற்றும் உப்பு சேர்த்து 70 சதவீதம் வேகவிட வேண்டும். பின்னர் அதை தனியாக எடுத்து ஆற வைக்கவும், இப்படி வேக வைத்து ஆற வைத்தால்தான் சேமியா குலையாமலும் உதிரி உதிரியாகவும் வரும்.
பின்னர் மீண்டும் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை இவைகளையும் சேர்த்து தாளிக்கவும். பிறகு பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். வதங்கிய பிறகு புதினாவும் கொத்தமல்லியும் சேர்த்து நன்கு கிளறவும். அதன் பிறகு தக்காளியை சேர்த்து அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து ஒரு முறை கிளறிவிட்டு தயிரையும் சேர்க்க வேண்டும்.
அதன்பிறகு எலும்பு இல்லாத சிக்கன் துண்டுகளையும் சேர்த்து வேக வைக்க வேண்டும். சிக்கன் வெந்த பிறகு சேமியாவை சேர்த்து பட்டும் படாமல் கிளறி விட்டு, நெய் சேர்த்து ஐந்து நிமிடம் மூடி போட்டு வைக்க வேண்டும். 5 நிமிடம் கழித்து எடுத்து கிளறி இறக்கினால் சுவையான கம கம வென சேமியா பிரியாணி ரெடி.
சேமியா உப்புமா என்றாலே ஒரு சிலருக்கு பிடிக்கவே பிடிக்காது. ஆகவே சேமியாவை வைத்து இந்த முறையில் பிரியாணி செய்து கொடுத்தால் யாரும் வேண்டாம் என்று சொல்ல மாட்டார்கள். நீங்களும் செய்து பார்த்து சுவைத்து பாருங்கள்.
0 Comments
No Comments Here ..