தனது ஐந்து வருட பதவிக் காலத்தில் ஒரு சதத்தையேனும் தாம், நாட்டின் மத்திய அரசுக்குத் திருப்பி அனுப்பவில்லை என, வட மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இந்திய விஜயத்தின்போது, அவர் அளித்த நேர்காணல் ஒன்றில், வடக்கு மற்றும் கிழக்குக்கு தாம் அளித்த நிதி பயன்படுத்தப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டதாகவும் அபிவிருத்திகளை நாட்டின் மத்திய அரசாங்கமே முன்னெடுத்ததாகவும் தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில், நேற்றைய தினம் வெளியிட்ட தனது வாராந்த கேள்வி - பதில் பகுதியில், வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் இவ்வாறு கூறியுள்ளார்.
அத்துடன், 2014இல் தன்னால் கோரப்பட்ட 12 ஆயிரம் மில்லியன் ரூபாயில், ஆயிரத்து 650 மில்லியன் ரூபா மட்டுமே தரப்பட்டது எனவும் மிகுதி தொகையும் முறையாக வழங்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக தம்மால் முன்னெடுக்கப்பட்ட செயற்றிட்டங்கள் பாதிக்கப்பட்டதுடன், அவை தாமதமடைந்ததாகவும் சி.வி. விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், மத்திய அரசாங்கத்தின் அமைச்சர்கள் ஊடாக அரசாங்க அதிபர்களுக்கு அனுப்பப்படும் நிதி, அந்த அரசாங்க அதிபர்களால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தாம் அறிந்துள்ளதாகவும் சி.வி. விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இலங்கையில் உள்ள 850க்கும் மேற்பட்ட திணைக்களங்கள், அமைச்சுக்கள் ஆகியவற்றுக்குள், சிறந்த நிதி நிர்வாகத்துக்கான முதற்பரிசை 2016ஆம் ஆண்டில் தனது முதலமைச்சர் அமைச்சே பெற்றிருந்ததாகவும் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments
No Comments Here ..