அரசாங்கக் கணக்குகள் பற்றிய நாடாளுமன்றக் குழு மற்றும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய நாடாளுமன்றக் குழு, ஆகியவற்றின் கூட்டங்களில், சட்டமா அதிபரின் அல்லது உயர்நீதிமன்றத்தின் சட்ட அதிகாரிகளை பங்கெடுக்கச் செய்ய வேண்டுமெனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் தலைவரும் மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான சுனில் ஹந்துன்நெத்தியே இந்தக் கோரிக்கையை முன் வைத்துள்ளார்.
எட்டாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடரின் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவினுடைய முதலாவது அறிக்கையை, நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றிய போதே, அவர் அந்தக் கோரிக்கையை சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் தெரிவித்தார்.
அரசாங்கக் கணக்குகள் பற்றிய நாடாளுமன்றக் குழு மற்றும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய நாடாளுமன்றக் குழு, ஆகியவற்றின் செயற்பாடுகளில் புலனாகும் விடயங்கள் தொடர்பில் பொறுப்புக் கூற வேண்டிய நபர்களை, நீதிமன்றத்தின் முன்நிலையில் கொண்டுவருவதற்காகவே, சட்டமா அதிபரின் அல்லது உயர்நீதிமன்றத்தின் சட்ட அதிகாரிகளை பங்கெடுக்கச் செய்ய வேண்டுமென சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.
அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் அந்த அறிக்கையானது, மக்கள் வங்கி, இலங்கை மின்சாரசபை, அரசாங்க ஈட்டு முதலீட்டு வங்கி, மத்திய வங்கி, சமூக பாதுகாப்பு நிதியம் உள்ளிட்ட அரசாங்க நிறுவனங்கள் பற்றி முன்னெடுத்த விசாரணைகள் தொடர்பான விடயங்களை உள்ளடக்கியுள்ளதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.
சபாநாயகர் தலைமையில் சகலரினதும் இணக்கப்பாட்டுடன் அரசாங்கக் கணக்குகள் பற்றிய நாடாளுமன்றக் குழு மற்றும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய நாடாளுமன்றக் குழு, ஆகியவற்றின் கூட்டங்களுக்கு ஊடகங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதன் ஊடாக, நாடாளுமன்றம் தொடர்பில் மக்கள் மத்தியில் மதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் சுனில் ஹந்துன்நெத்தி தனது நேற்றைய உரையில் கூறியுள்ளார்.
எனினும், இந்தக் குழுக்களில் புலப்படும் விடயங்களுக்கு அமைய தவறிழைத்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதன் ஊடாகவே இதன் பலனை முழுமையாக அடைய முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கக் கணக்குகள் பற்றிய நாடாளுமன்றக் குழு மற்றும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய நாடாளுமன்றக் குழு, ஆகிய இந்தக் குழுக்களுக்கு சட்டரீதியான அதிகாரம் இல்லாவிட்டாலும் சட்ட அதிகாரிகளின் கண்காணிப்பு ஏற்படுத்தப் படுவதன் ஊடாக, இந்த விடயங்களை கண்ணால் கண்ட சாட்சியாக மாற்ற முடியும் எனவும், சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.
அதன்படி, குறித்த நாடாளுமன்றக் குழுக்களின் கூட்டங்களில் சட்ட அதிகாரிகளைப் பங்கெடுக்கச் செய்வதன் ஊடாக, சட்ட நடவடிக்கை எடுப்பது இலகுவாக அமையுமென, அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
0 Comments
No Comments Here ..