23,Nov 2024 (Sat)
  
CH
இலங்கை செய்தி

ஐ.நா.மனித உரிமைப் பேரவையின் 43 ஆவது கூட்டத் தொடர் இன்று!

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையின் 43 ஆவது கூட்டத் தொடர் இன்று ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ளது.

இன்று ஆரம்பமாகும் கூட்டத் தொடர் எதிர்வரும் மார்ச் மாதம் 20 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

இந்த நிலையில், இலங்கை வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தன நாளை ஜெனீவாவுக்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது, மனித உரிமை ஆணையாளரினால் இலங்கை தொடர்பில் விசேட உரையொன்று நிகழ்த்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஜெனீவாவில் இலங்கை மீதான இரண்டு தீர்மானங்களுக்கும் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள இணை அனுசரனையை மீளப் பெற்றுக் கொள்வதற்கு, அரசாங்கம் தீர்மானித்துள்ளது

இந்த நிலையில், அரசாங்கத்தின் தீர்மானம் தொடர்பில் எதிர்வரும் 26 ஆம் திகதி அமைச்சர் திணேஷ் குணவர்தன உரையாற்ற உள்ளதுடன், 27ஆம் திகதி மனித உரிமை ஆணையாளருக்கு தனது முடிவை நேரடியாக தெரிவிக்க உள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

இலங்கையின் நல்லிணக்கப் பொறுப்புக் கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல் தொடர்பான யோசனைகளுக்கு, கடந்த நல்லாட்சி அரசாங்கத்தினால் இணை அனுசரனை வழங்கப்பட்டுள்ள நிலையில், அவற்றை மீளப் பெற்றுக் கொள்வதற்கு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம் குறித்து, வெளிவிவகார செயலாளர் ரவினாத ஆரியசிங்க, மனித உரிமைகள் பேரவைக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தீர்மானம் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டதாகவும், பின்னர் குறித்த யோசனை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டதாகவும், வெளிவிவகார செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இலங்கை மீதான 30 கீழ் 1 தீர்மானத்துக்கு 2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் முதலாம் ஆம் திகதி அப்போதைய வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவினால் இணை அனுசரனை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

ஐக்கிய நாடுகளால் இலங்கை மீது அமெரிக்காவின் அனுசரணையுடன் கொண்டுவரப்பட்ட தீர்மானம் 2014 ஆண்டு மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்டது.

இதற்கமைய, 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஐக்கிய நாடுகளின் பொது பேரவை தீர்மானம் தொடர்பான அறிக்கை வெளிவந்தது.

இந்த நிலையில், இலங்கையில் போரின் போது நடைபெற்ற அனைத்து மனித உரிமைகள் மீறலுக்கும் பொறுப்பு ஏற்கப்பட வேண்டும் எனவும், நல்லிணக்கம் கட்டி எழுப்பபடவேண்டும் என்பவற்றை இலங்கை அரசு கட்டாயம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதன்படி, குறித்த விடயங்களை தாம் மேற்கொள்வதாக கடந்த அரசாங்கம் இந்தத் தீர்மானத்தை ஏற்றுக் கொண்டது.

2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கு அமைய, இலங்கையின் மனித உரிமைகள் விடயங்களை நிறைவேற்றிக்கொள்வதற்காக மேலும் இரண்டு வருடங்கள் கால அவகாசம் கோரி சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை கடந்த வருடம் மார்ச் மாதம் 21 ஆம் திகதி நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது.

பிரித்தானியாவின் தலைமையில் இலங்கையின் இணை அனுசரணையுடன் வாக்கெடுப்பின்றி இந்த பிரேரணை நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது




ஐ.நா.மனித உரிமைப் பேரவையின் 43 ஆவது கூட்டத் தொடர் இன்று!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு