சென்னையில் உள்ள முக்கிய மீன் சந்தையில், மீன்களில் ஃபார்மலின் கலப்படம் உள்ளதா என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
மதுரை மீன் சந்தையில் இரு தினங்களுக்கு முன்பு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ஃபார்மலின் ரசாயனம் தடவப்பட்ட மீன்கள் டன் கணக்கில் பறிமுதல் செய்யப்பட்டன. இது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மீன்களில் ஃபார்மலின் தடவப்படுவது தொடர்பாக விரிவாகவும், அதனால் ஏற்படும் விளைவுகள் உட்பட பல கோணங்களிலும் நியூஸ் 7 தமிழ் செய்திகளை வெளியிட்டிருந்தது.
அதன் எதிரொலியாக சென்னையில் காசிமேடு, சிந்தாதிரிப்பேட்டை, சைதாப்பேட்டை மற்றும் பட்டினப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மீன் சந்தைகளில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். உணவு பாதுகாப்பு துறை மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் தலைமையில் இந்த சோதனை நடைபெற்றது. சிந்தாதிரிபேட்டையில் மீன்களில் கலப்படம் எதுவும் கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. சோதனை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும் சோதனை நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
0 Comments
No Comments Here ..