18,Apr 2024 (Thu)
  
CH
சுவிஸ்

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இரண்டாவது மரணம்

சுவிட்சர்லாந்தின் பாஸல் மண்டலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு சிகிச்சை மேற்கொண்டுவந்த 76 வயது நபர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

பாஸல் மண்டலத்தில் Liestal பகுதி மருத்துவமனையிலேயே இவர் சிகிச்சையில் இருந்துள்ளார். கடந்த வாரம் இவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், ஞாயிறு காலை சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

குறித்த 76 வயதான நபர் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவதற்கு முன்பு ஏற்கனவே பல நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டார் என பாஸல் மண்டல முதன்மை மருத்துவர் தெரிவித்துள்ளார்.

மிகவும் மோசமான நிலையிலேயே அவர் மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டார் எனவும், தங்களால் இயன்ற சிகிச்சை அவருக்கு அளிக்கப்பட்டது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நீரிழிவு நோயாலும் அவர் அவதிப்பட்டு வந்துள்ளார். அவருக்கு இருதயம் தொடர்பான நோயும் இருந்துள்ளது.

சம்பவத்தன்று மாரடைப்பால் அவர் மரணமடைந்ததாக மருத்துவ வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

இருப்பினும் தம்மை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்க வேண்டாம் எனவும், தேவையானவர்களுக்கு அந்த வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதை அவர் கோரிக்கையாக வைத்திருந்ததை முதன்மை மருத்துவர் நிகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்துள்ளார்.

குறித்த 76 வயது நபருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு எங்கிருந்து தொற்றியது என்பதை கண்டறிவது சாத்தியமல்ல என கூறும் அவர், தொடர்புடைய நபரின் உறவினர்கள் உடனடியாக மருத்துவமனை நிர்வாகத்தை தொடர்பு கொள்ளவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

சுவிட்சர்லாந்தில் இதுவரை 233 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் ஞாயிறு மரணமடைந்த 76 வயது நபருடன் மொத்தம் இருவர் மரணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இரண்டாவது மரணம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு