09,May 2024 (Thu)
  
CH
இலங்கை செய்தி

தென் தமிழகம் நோக்கி நகரும் ‘புரெவி’ புயல்!

தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் நிலைகொண்டிருந்த புரெவி புயல், குமரிக்கடல் பகுதியை நோக்கி வியாழக்கிழமை காலை நகரவுள்ளது. பாம்பன்-கன்னியாகுமரி இடையே தமிழக கடற்கரையை வியாழக்கிழமை நள்ளிரவுக்கு மேல் கடக்கவுள்ளது.

இதன் காரணமாக, தென் மாவட்டங்களில் மூன்று நாள்களுக்கு பலத்த மழை, ஓரிரு இடங்களில் அதி பலத்த மழை பெய்யக்கூடும்.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் நா.புவியரசன் புதன்கிழமை கூறியது:

தென்மேற்கு மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், செவ்வாய்க்கிழமை இரவு புரெவி புயலாக வலுவடைந்தது. இது மேற்கு - வடமேற்கு திசையில் நகா்ந்து, புதன்கிழமை இரவில் இலங்கையைக் கடந்தது. தொடா்ந்து, வியாழக்கிழமை காலை மன்னாா் வளைகுடா வழியாக குமரி கடல் பகுதிக்கு நகரவுள்ளது. பின்னா், இந்தப் புயல் பாம்பன்-கன்னியாகுமரி இடையே தமிழக கடற்கரையை வியாழக்கிழமை நள்ளிரவுக்கு மேல் வெள்ளிக்கிழமை அதிகாலை வரை கடக்கவுள்ளது.

இதன் காரணமாக, தமிழகத்தில் அநேக இடங்களில் வியாழக்கிழமை (டிச.3) முதல் சனிக்கிழமை வரை மூன்று நாள்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும். தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் பலத்த மழை முதல் மிக பலத்த மழை பெய்யக்கூடும். தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி பலத்த மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புகா்ப் பகுதிகளில் வியாழக்கிழமை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றாா் அவா்.

இடங்களின் விவரம்:

டிச. 3: சிவகங்கை, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வியாழக்கிழமை (டிச.3) இடியுடன் கூடிய அதி பலத்த மழையும், தேனி, திண்டுக்கல், விருதுநகா், மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை முதல் மிக பலத்த மழையும், ஏனைய மாவட்டங்களில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

டிச.4: தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெள்ளிக்கிழமை (டிச.4) இடியுடன் பலத்த மழை முதல் மிக பலத்த மழையும், நீலகிரி, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழையும், ஏனைய மாவட்டங்களில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

டிச.5: டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை (டிச.5) இடியுடன் கூடிய பலத்த மழையும், ஏனைய மாவட்டங்களில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

மீனவா்களுக்கு எச்சரிக்கை: மன்னாா் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் தென் தமிழக கடலோரப் பகுதிகள், தென் கிழக்கு வங்கக்கடல், தெற்கு கேரளப் பகுதி, தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் மணிக்கு 70 கி.மீ. முதல் 80 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 90 கிலோமீட்டா் வேகத்திலும் சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே, இந்தப் பகுதிகளுக்கு மீனவா்கள் டிசம்பா் 5-ஆம் தேதி வரை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.




தென் தமிழகம் நோக்கி நகரும் ‘புரெவி’ புயல்!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு