நாடளாவிய ரீதியில் தெரிவுசெய்யப்பட்ட க.பொ.த உயர்தர மாணவர்கள் 150 பேருக்கு இந்திய உயர்ஸ்தானிகரகத்தினால் மகாத்மா காந்தி புலமைப்பரிசில் வழங்கப்பட்டுள்ளது.
மேற்படி தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கான புலமைப்பரிசில் கல்வியமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ஆகியோரால் நேற்று வியாழக்கிழமை வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
இதன்போது உரையாற்றிய அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், தன்னால் போதிக்கப்பட்டவற்றின் அடிப்படையில் வாழ்ந்த மகாத்மா காந்தியின் கொள்கைகள் மற்றும் ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்திற்கு எதிராக அவரால் முன்னெடுக்கப்பட்ட அகிம்சைவழிப்போராட்டம் ஆகியவை தொடர்பில் சுட்டிக்காட்டினார்.
அதேவேளை அண்மையில் கிளிநொச்சிக்கு மேற்கொண்ட விஜயம் தொடர்பில் பகிர்ந்துகொண்ட அமைச்சர், அங்கு அனைத்து இனமக்களும் ஒற்றுமையுடன் வாழ்வதாகக் குறிப்பிட்டார்.
அத்தோடு பல்வேறு துறைகளின் அபிவிருத்திக்கும் இந்தியாவினால் வழங்கப்பட்டுவரும் உதவிகளுக்கு நன்றியையும் தெரிவித்தார்.
அதேவேளை இலங்கையைச் சேர்ந்த இளம் மாணவர்களுக்கு அவசியமான உதவிகளை வழங்குவதற்கு இந்தியா எப்போதும் தயாராக இருப்பதாகக் கூறிய இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, கௌதம புத்தர் மற்றும் மகாத்மா காந்தியின் கொள்கைகளுக்கு இடையிலான ஒற்றுமை தொடர்பாகவும் குறிப்பிட்டார்.
மேலும் கல்வித்துறை சார்ந்து இந்தியாவில் காணப்படும் வாய்ப்புக்களை நன்கு பயன்படுத்திக்கொள்ளுமாறும் அவர் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.
மகாத்மா காந்தி புலமைப்பரிசிலுக்கு மேலதிகமாக, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரகத்தினால் ஒவ்வொரு வருடமும் பொறியியல், தொழில்நுட்பம், கலை, விஞ்ஞானம் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் நாடளாவிய ரீதியில் சுமார் 750 பேருக்கு புலமைப்பரிசில் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 Comments
No Comments Here ..