20,May 2024 (Mon)
  
CH
சினிமா

ஏலே-திரை விமர்சனம்

”அட, இப்படி ஒரு கதையா, கதாபாத்திரங்களா” என படம் ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலேயே ஆச்சரியப்பட வைக்கிறது இந்த ஏலே. தமிழ் சினிமாவில் இன்னும் சொல்லப்படாத கதைகளும், கதாபாத்திரங்களும் இருக்கின்றன என்பதற்கு இந்தப் படம் பெரும் சாட்சி.

மக்கள் வந்து பார்க்கக் கூடிய, வசூலைத் தரக் கூடிய ஒரு படத்தை தியேட்டர்காரர்கள் இழந்துவிட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும். இந்தப் படம் தியேட்டர்களில் வெளியாகியிருந்தால் நிச்சயம் வசூலைத் தந்திருக்கும். ஒரு கடிதத்தைக் கேட்டு நல்ல படத்தை இழந்துவிட்டார்கள் தியேட்டர்காரர்கள்.

படத்தின் ஆரம்பமே ஒரு சாவு வீட்டிலிருந்து என்பது பல சென்டிமென்ட்டுகளை உடைத்திருக்கிறது. அப்பா இறந்து கிடக்க, சென்னையிலிருந்து வரும் மகன் அப்பாவிற்காகக் கண்ணீர் கூட விடாமல் பசிக்கிறது என சொல்லி பஸ் ஏறிச் சென்று பரோட்டா சாப்பிட்டு வருகிறார். என்ன இப்படி ஆரம்பிக்கிறது படம் எனப் பார்த்தால் போகப் போக நம்மை படத்திற்குள் இழுத்துவிடுகிறார் இயக்குனர் ஹலிதா ஷமீம்.

அந்த கணக்கன்பட்டி கிராமத்திற்குள் நாமும் ஒருவராக உள்ளே சென்றுவிட்டோமோ என்ற உணர்வே ஏற்படுகிறது. அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற த்ரில்லர் படத்தைப் பார்க்கும் உணர்வு இந்தப் படத்தில் இருப்பது ஆச்சரியம் தான். இப்படியெல்லாம் கூட கதையை எழுத முடியுமா, திரைக்கதையை நகர்த்த முடியுமா, கதாபாத்திரங்களை உருவாக்க முடியுமா என பல ஆச்சரியங்களைக் கொடுத்திருக்கிறார் ஹலிதா.

2019ல் சில்லுக்கருப்பட்டி கொடுத்து ஆச்சரியப்படுத்தியவர் அடுத்த படத்தையும் இத்தனை ஆச்சரியங்களுடன் கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார். பெண் இயக்குனர் எனச் சொல்லி வித்தியாசப்படுத்தாமல் இன்றைய ஆண் இயக்குனர்களுக்கும் சரியான சவால் விடுத்திருக்கிறார் ஹலிதா.

கிராமத்துப் பகுதிகளில் ஐஸ் விற்கும் தொழில் செய்பவர் சமுத்திரக்கனி. மனைவி இல்லாத சூழ்நிலையிலும் மகள், மகனை பாசமாகத்தான் வளர்க்கிறார். ஆனால், சரியான ஏமாற்றுக்காரர். அடுத்தவர்களை ஏமாற்றி பணம் பறிப்பதில் கெட்டிக்காரர். சிறு வயதிலிருந்தே அப்பா மீது கோபத்திலேயே இருப்பவர் மகன் மணிகண்டன். அதற்குப் பல காரணங்கள் உண்டு. இவையெல்லாம் பிளாஷ்பேக்கில் வருபவை.

அப்பா சமுத்திரக்கனி இறந்து அவருடைய உடல் வீட்டில் இறுதி அஞ்சலிக்காக வைத்திருக்கும் போது அப்பாவைப் பற்றிய நினைவுகளில் மகன் மணிகண்டன் செல்லும் போது காட்டப்படுபவை. அனைவரும் வீட்டு வெளியில் இறுதி அஞ்சலிக்காக மும்முரமாக இருக்கும் போது, உள்ளே சமுத்திரக்கனியின் உடல் காணாமல் போய்விடுகிறது. தனது நண்பர்களுடன் அப்பாவின் உடலைத் தேடிக் கண்டுபிடிக்க இறங்கும் மணிகண்டனுக்கு பேரதிர்ச்சி காத்திருக்கிறது அது என்ன என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

சமுத்திரக்கனி படமென்றாலே அட்வைஸ் மழை பொழிவார், வசனங்களை பேசித் தள்ளுவார் என்ற விமர்சனங்கள்தான் அதிகம் வரும். அவை எதுவும் இல்லாமல் வேறு ஒரு சமுத்திரக்கனியைக் காட்டியிருக்கும் படம் இது. அப்படி ஒரு கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனியை நடிக்க வைத்ததற்காக ஹலிதாவுக்கு தனி பாராட்டுக்கள். அப்படி ஒரு கதாபாத்திரத்தை உள்வாங்கி நடிப்பது சாதாரண விஷயமல்ல. தான் ஒரு இயக்குனர் என்பதாலும் கூட சமுத்திரக்கனிக்கு அந்தக் கதாபாத்திரத்தில் நடிப்பது சாதாரணமாக வந்திருக்கக் கூடும். அவரது நடிப்பிற்காக வண்டி நிறைய ஐஸ் வைத்து பரிசளிக்கலாம்.

மணிகண்டன், தமிழ் சினிமாவில் விரைவில் ஒரு முக்கிய இடத்தைப் பிடிக்கக் கூடும். காலா படத்தில் கவனிக்கப்பட்டவர், சில்லுக்கருப்பட்டி படத்தில் சிலாகிக்க வைத்தார். இந்தப் படத்தில் ஏலே, அசத்திட்டலே என சொல்ல வைத்திருக்கிறார். இயல்பான நடிப்பு அவருக்கு இயல்பாகவே இருக்கிறதோ என எண்ண வைக்கிறது. விரைவில் அவருக்கு மணி மணியான படங்களும், கதாபாத்திரங்களும் கிடைக்க வாழ்த்துகள்.

தமிழ் சினிமாவில் பக்கத்து வீட்டுப் பெண் கதாபாத்திரங்களில் நடிக்க மற்றுமொரு இயல்பான நடிகை மதுமதி. பண்ணையார் வீட்டு மகளாக இருந்தாலும் சிறு வயதிலிருந்தே ஐஸ் விற்கும் சமுத்திரக்கனியை ஐஸ் மாமா என அன்பாக அழைக்கிறார். ஐஸ் மாமா மகன் மணிகண்டனை காதலிக்கிறார். இருவருக்குமான காதல் காட்சிகளில் அவ்வளவு யதார்த்தம்.

மணிகண்டனின் நண்பர்களாக நடித்திருப்பவர்கள், ஊர் பெரியவர்கள், பாட்டிகள், ஊர் மக்கள், சிறு வயது குட்டி நடிகர்கள் என பலரும் இது ஒரு படம் என்பதை மறக்க வைக்கிறார்கள்.

கேபர் வாசுகி, அருள்தேவ் இசையில் பின்னணி இசையும், பாடல்களும் கதையோட்டத்திற்குப் பொருத்தமாக உள்ளன. உள்ளதை உள்ளபடி காட்டியிருக்கிறது தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு.

எளிமையான புரிதலுடன், யதார்த்தமாய் நகரும் திரைக்கதை, இடைவேளைக்குப் பின் கொஞ்சம் சினிமாத்தனமாய் நகர்வது எதிர்பாராதது. இன்னொரு சமுத்திரக்கனி (டபுள் ஆக்ஷன்) வருவது, அதன்பின் நடக்கும் சம்பவங்கள் சுவாரசியமாய் இருந்தாலும் சில பல கேள்விகளை எழுப்புகின்றன. நீளமாகப் போகும் அந்த சினிமாத்தனனமான காட்சிகளைத் தவிர்த்து, வேறு சில காரணங்களை யதார்த்தமாய் யோசித்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.




ஏலே-திரை விமர்சனம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு