சர்வதேச நாடுகளிடம் தீர்வைப் பெற்றுக் கொள்ள முயற்சித்தால் மக்கள் மத்தியில் மேலும் பிரிவினையே உருவாகும். இலங்கை மக்களுக்கு நாட்டுக்குள் ஏதேனும் பிரச்சினைகள் காணப்பட்டால் அதற்கான தீர்வை நாட்டில்தான் பெற்றுக் கொள்ள முடியும் என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். நீதி அமைச்சில் (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் கூறியதாவது , ஜெனீவா கூட்டத்தொடரின் அறிக்கை ஒரு பக்கச்சார்பாக முன்வைக்கப்பட்டுள்ளதாகவே நான் எண்ணுகின்றேன். இலங்கை இராணுவம் பயங்கரவாத அமைப்புக்கு எதிராகவே யுத்தம் செய்திருந்தது.
இந்நிலையில் அதனை மறந்து இராணுவத்தின் மீது குற்றம் சுமத்தும் வகையிலேயே இந்த அறிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இலங்கை மக்களாகிய நாம் எமக்கேதேனும் சிக்கல் நிலைமைகள் காணப்பட்டால், அதற்கான தீர்வை நாட்டுக்குள்தான் பெற்றுக் கொள்ள வேண்டும். அதனை விடுத்து நாம் சர்வதேச நாடுகளிடம் பெற்றுக் கொள்ள முயற்சித்தால் எம் மத்தியில் மேலும் இடைவெளியேற்படுவதை தவிர்க்க முடியாது என்றார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்திவந்த ஆணைக்குழு முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக வழக்கு விசாரணைகளை மேற்கொள்ளுமாறு தெரிவித்துள்ள விடயம் தொடர்பில் அமைச்சரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், முன்னாள் ஜனாதிபதி தொடர்பில் சட்டநடவடிக்கை எடுப்பதா? இல்லையா? என்பதை உயர்நீதிமன்றமே தீர்மானிக்கும். அது தொடர்பில் எனக்கு எதுவும் தெரியாது. இதேவேளை, ஜனாதிபதி ஆணைக்குழு திட்டமிட்டே முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக குற்றம் சுமத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது . அவரது ஆட்சிகாலத்திலேயே இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டிருந்தது என்றும் அவர் தெரிவித்தார்.
0 Comments
No Comments Here ..