ஆயிரம் பிரதோஷம் வழிபட்ட பலனை தரும் மஹாசனிப்பிரதோஷம். 24/04/2021 Today
சனிப்பிரதோஷத்தில் நந்தியை வணங்கி, வழிபட்டால் சனி பகவானால் உண்டாகும் சகல துன்பங்களும் விலகிப் போகும். சனிப் பிரதோஷ நாளில் ஈசனை வழிபாடு செய்தால், ஐந்து வருடத்துக்கு ஈசனை வழிபாடு செய்த பலன் கிடைக்கும். இந்நாளில் வசதி உள்ளவர்களும், அடியார்களும் இறைவனுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்தால் நல்லது. நோய் பரவல் காலமாக இருப்பதால் ஆலயத்திற்கு செல்லாமல் வீட்டிலேயே ஈசனை நினைத்து வணங்கினால் கோடி புண்ணியம் தேடி வரும் சனிக்கிழமை பிரதோஷ காலங்களில் ஈசனை தரிசிப்பதால், சகல பாவங்களும் விலகி, புண்ணியம் சேரும் சகல செளபாக்கியங்களும் உண்டாகும், இந்திரனுக்கு சமமான புகழும் செல்வாக்கும் கிடைக்கும். இன்றைய தினம் செய்யப்படும் எந்த தானமும் அளவற்ற பலனைக் கொடுக்கும். பிறப்பே இல்லாத முக்தியை கொடுக்கும் என்றெல்லாம் புராணங்கள் தெரிவிக்கின்றன.
ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை நாட்களில் வரும் திரயோதசி நாட்களில் மாலை 4.30 மணி முதல் 6 மணி வரையில் உள்ள காலத்தை பிரதோஷ காலம் என்று முன்னோர்கள் கணித்துள்ளனர். ஏகாதசி தினத்தன்று ஆலகாலம் உண்ட எம்பெருமான் ஈசன், மறுநாளான துவாதசி தினம் முழுவதும் மயக்க நிலையில் இருந்தார். பின்னர் மூன்றாம் நாளான திரயோதசி நாளில் பகலும் இரவும் சந்திக்கும் சந்தியா வேளையில் மயக்க நிலையில் இருந்து விழித்தெழுந்து, சூலத்தை சுழற்றி டமருகத்தை ஒலித்து சந்தியா நிருத்தம் எனும் நாட்டியம் ஆடினார். பிரளய தாண்டவம் எனப்படும் இந்த நாட்டியம் ஆக்கல், அழித்தல், காத்தல், மறைத்தல், அருளல் எனும் ஐவகை தொழிலையும் ஊக்கப்படுத்தும் விதமாக ஈசனால் ஆடப்பட்டது என்கிறார்கள். இதைக் கண்ட தேவர்கள், முனிவர்கள் உள்பட அனைவரும் எம்பெருமானின் திருத்தாண்டவத்தை தரிசித்தார்கள்.
இப்படி எம்பெருமான் அனைவருக்கும் அருள் புரிந்த காலமே பிரதோஷ காலம் என்று கூறப்படுகிறது. நந்தியெம்பெருமானின் கொம்புகளுக்கிடையே சிவன் ஆடும் நேரமே பிரதோஷம் என்பதால் அன்று நந்தியின் கொம்புகளுக்கிடையே சிவனை தரிசிப்பது சிறப்பு தரும். எம்பெருமான் உருவாக்கிய நான்மறைகளையும் முதன்முதலில் நந்தியம் பெருமானுக்கு தான் உபதேசித்தார் என்றும் புராணங்கள் கூறகின்றன. இதனால் தான் பிரதோஷ காலத்தில் முதல் மரியாதையும் பூஜையும் நந்தியம் பெருமானுக்கு செய்யப்படுகிறது. பிரதோஷ நாளில் நமசிவாய மந்திரம் ஜபிப்பதால், நமது முன்னோர்கள், ஏழு தலைமுறையினர் செய்த பஞ்சமாபாதகங்கள் யாவும் அழிந்துவிடும் எனப்படுகிறது. கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் கோவில்களில் சாமி தரிசனத்துக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து இன்று நடைபெறும் பிரதோஷ விழாவுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட உள்ளன.
சில சிவன் கோவில்களில் இன்று பிரதோஷ விழாவுக்கு பக்தர்களை அனுமதிக்கிறார்கள். அதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மேற்கொண்டு வருகிறார்கள். பாடி சிவன் கோவிலில் இன்று மாலை 4 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. 5.30 மணி அளவில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட உள்ளது. கோயம்பேட்டில் உள்ள குருங்காலீஸ்வரர் கோவில், தண்டையார் பேட்டையில் உள்ள அருணாசலேஸ்வரர் ஆலயம் ஆகியவற்றிலும் சமூக இடைவெளியை கடைப்பிடித்து பக்தர்கள் வழிபடும் வகையில் பிரதோஷ விழாவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் இன்று நடைபெறும் பிரதோஷ விழாவுக்கு கொரோனா பரவலை கருத்தில் கொண்டு பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதேபோன்று திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில் வளாகத்தில் உள்ள தியாகராஜ சுவாமிகள் கோவிலிலும் பிரதோஷ விழாவுக்கு பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. திருவொற்றியூர் தியாராஜ சுவாமிகள் கோவில் இன்று மாலை 4 மணியில் இருந்து 5.12 மணி வரை நந்திக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் நடைபெறுகிறது. இந்த பிரதோஷ நிகழ்ச்சி யுடுயூப் மூலம் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. சனிப்பிரதோஷ நாளில் ஆலயம் செல்ல முடியவில்லையே என்ற வருத்தம் வேண்டாம் வீட்டில் இருந்தே பிரதோஷ நேரத்தில் சிவன், நந்தியை வணங்குங்கள் கோடி புண்ணியம் வீடு தேடி வரும்.
0 Comments
No Comments Here ..