தற்போதைய நிலையில், இலங்கையில் எந்தவொரு மாகாண சபையும் இயங்கும் நிலையில் இல்லை. 2019 ஒக்டோபர் எட்டாம் திகதி, ஊவா மாகாண சபையின் பதவிக்காலம் முடிவுக்கு வந்ததோடு, இலங்கையின் ஒன்பது மாகாண சபைகளும் இயங்கா நிலையை அடைந்தன.
2019ஆம் ஆண்டு காலப்பகுதியில், மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்று சில தரப்புகள், குறிப்பாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தரப்பு, கோரிக்கை வைத்திருந்தாலும், 2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர், அந்தக் குரலும் அடங்கிவிட்டது.
2020இல் ‘கொவிட்-19’ பெருந்தொற்றுப் பரவல், நாட்டை முடங்கு நிலைக்குக் கொண்டு வந்த பின்னர், மாகாண சபைத் தேர்தல்கள் பற்றி, எந்த அரசியல் கட்சியும் பெரிதாக அக்கறை காட்டவில்லை.
இந்த நிலையில், மாகாண சபைகள் இல்லாதொழிக்கப்பட வேண்டுமென்ற குரல், ஆளுந்தரப்பின் பெருந்தேசியவாதிகளால் அவ்வப்போது முன்வைக்கப்பட்டது.
இருந்தபோதிலும், இந்தியாவை மீறி மாகாண சபைகளை இல்லாதொழிக்கும் எண்ணம், இந்த அரசாங்கத்துக்கு இருப்பதாகத் தென்படவில்லை.
இந்த வருடம், மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்படலாம் என்ற ஊகங்கள், பரவலாக பேசப்பட்டு வருகின்றன.
எனினும், மீண்டும் உருவெடுத்துவரும் கொவிட்-19 பெருந்தொற்றின் மூன்றாம் அலை, மாகாண சபைத் தேர்தல்களை இன்னும் தாமதப்படுத்தும் என்றே தோன்றுகிறது.
மாகாண சபைத் தேர்தல்களின் நிலை, இப்படியாக ‘இழுபறி’யாக இருக்கும் கட்டத்தில் கூட, வட மாகாண சபையின் அடுத்த முதலமைச்சர் யார் என்ற கருத்து ‘அடிபிடிகள்’, அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்தி வருவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது.
இந்தப் பரபரப்பு அத்தியாயத்தின் தற்போதைய பகுதியை, வட மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும், இந்நாள் பாராளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தொடங்கி வைத்திருக்கிறார்.
“எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில், பொது முதலமைச்சர் வேட்பாளராக, வேலன் சுவாமிகளைக் களமிறக்கலாம்” என, தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன், அண்மையில் தெரிவித்திருந்தார். இந்தக் கருத்து, வாதப் பிரதிவாதங்களை அவரது கட்சிக்குள்ளும், வௌியிலும் ஏற்படுத்தி இருக்கிறது.
‘யார் இந்த வேலன் சுவாமிகள்’? என்ற கேள்வி, பலருக்குள்ளும் எழலாம். சுருக்கமாகச் சொன்னால், அவர் ஒரு சந்நியாசி; அண்மையில் நடத்தப்பட்ட ‘பொத்துவில் முதல் பொலிகண்டி வரை’யான போராட்டத்தில் கலந்துகொண்டிருந்தவர். இதைத்தாண்டி, அவரது அரசியல் செயற்பாடு என்று எதுவுமில்லை.
இத்தகையவரை, நீதியரசர் விக்னேஸ்வரன் ஏன் பரிந்துரைத்தார் என்ற கேள்வி ஒருபுறமிருக்க, நீதியரசர் விக்னேஸ்வரனின் இந்தப் பரிந்துரையை, வேலன் சுவாமிகள் நிராகரித்திருக்கிறார்.
இது பற்றி ஊடகங்களுக்குக் கருத்து வௌியிட்டிருந்த வேலன் சுவாமிகள், “பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சிப் போராட்டம், மாபெரும் வெற்றியைப் பெற்றதன் பின்னர், ‘பொத்துவில் முதல் பொலிகண்டி வரை மக்கள் பேரழுச்சி இயக்கம்’ ஆரம்பிக்கப்பட்டது. இதன் கொள்கைகளில் ஒன்றான, உறுப்பினர்கள் எவரும் கட்சி அரசியலிலோ தேர்தல் அரசியலிலோ ஈடுபடுவதில்லை என்பது, என்னையும் சாரும். அரசியல், சமூக மட்டங்களை இணைத்துக்கொண்டு, உரிமைகளுக்கான போராட்டங்களை ஒழுங்குபடுத்துவதிலேயே, நமது பணியை முன்னெடுப்போம்” என்று, வேலன் சுவாமிகள் தெரிவித்திருந்தார். நல்லது!
முதலாவது வடக்கு மாகாண சபையின் ‘தோல்வி’ பற்றி, பலரும் கட்டுக்கட்டாக பதிவுசெய்துவிட்டார்கள். முதலாவது வடக்கு மாகாண சபையின் தோல்வியிலிருந்து, தமிழ் மக்கள் ஏதாவது பாடத்தைக் கற்றுக்கொள்ள விரும்பினால், அதில் முதன்மையாக அமைய வேண்டியது, கொள்கை உருவாக்க அரசியலுக்கும், அரசியல் நிர்வாகத்துக்கும் இடையிலான வேறுபாட்டை, தமிழ் மக்கள் உணர்ந்து கொள்ளுதலாகும்.
அரசியல் கொள்கைகளை முன்வைத்தல், கொள்கைகள் அடிப்படையிலான வாதப்பிரதிவாதங்களில் ஈடுபடுதல், கொள்கை முடிவுகளை எடுத்தல், கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட திட்டமிடல்களை முன்வைத்தல், கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட சட்டவாக்கத்தில் ஈடுபடுதல் என்பனவெல்லாம், கொள்கை வகுப்பு அரசியல் பாற்பட்டது.
அந்தக் கொள்கை உருவாகத்ததை அமுல்படுத்துதல், அதை நிர்வகித்தல், கொள்கை வகுப்பு அடைய எத்தனிக்கும் அடைவுகளை அடைந்துகொள்ளுதல் ஆகியன, நிர்வாக அரசியலின் பாற்பட்டது.
முதலாவது வடக்கு மாகாண சபையில் கொள்கை வகுப்பு ஓரளவுக்கேனும், தீவிர தமிழ்த் தேசிய அடிப்படைகளில் இடம்பெற்றது. ஆனால், நிர்வாகத்தில்தான் அது கோட்டைவிட்டது.
ஆகவே, நிர்வாகத்தின் தோல்விதான், உண்மையில் முதலாவது வடமாகாண சபையின் தோல்வி.
மாகாண சபையின் நிர்வாகம் என்பது, முதலமைச்சர் தலைமையிலான ஐவரைக் கொண்டமைந்த அமைச்சரவையினதும் ஆளுநரினதும் பாற்பட்டது. இங்கு ஆளுநர் என்பவர், ஜனாதிபதியின் முகவராக, ஜனாதிபதியால் நியமிக்கப்படுபவர் ஆவார்.
“ஆளுநர் எங்களை வேலை செய்ய விடுகிறார் இல்லை” என்ற ஒற்றை மந்திரத்தை, திரும்பத் திரும்ப உச்சரித்துவிட்டு, எந்தவொரு காரியத்தையும் சாதிக்காது இருப்பதற்குப் பெயர், நிர்வாகமும் அல்ல; அரசிலும் அல்ல.
ஆனால், வடக்கு மாகாணத்துக்கென்று ஒரு மாகாண சபை உருவானது, அதுதான் முதல் முறை. அன்று அமைச்சரவையில் இருந்தவர்கள், அரசியலுக்கே புதியவர்கள். ஆகவே, அவர்கள் அரசியல் நிர்வாகத்தில் தோல்வியடைந்தமை ஆச்சரியத்துக்கு உரியதொன்றல்ல.
மிகச் சிறந்த அனுபவம்மிக்க கொள்கை வகுப்பு அரசியல்வாதிகள் கூட, அரசியல் நிர்வாகத்தில் தோல்வி கண்ட பல அனுபவங்களை, உள்ளூர் அரசியலிலும் உலக அரசியலிலும் காணலாம். ஆகவேதான், தமிழ் மக்களும் தமிழ் அரசியல் கட்சிகளும் ‘கொள்கை வகுப்பு அரசியல்’க்கும் ‘நிர்வாக அரசியல்’க்கும் இடையிலான வேறுபாட்டைப் புரிந்துகொள்வதும், அதன் அடிப்படையில் தமது அரசியல் முடிவுகளை எடுப்பதும் அவசியமாகிறது.
‘முதலமைச்சர்’ என்பது, அடிப்படையில் அரசியல் நிர்வாகப் பதவி. ஆகவே, கொள்கை வகுப்பு என்பதைத் தாண்டி, அரசியல் நிர்வாக (அரச நிர்வாகம் அல்ல) ஆற்றல் உடைய தலைமைத்துவப் பண்பு மிக்கவர்களே, அந்த இடத்துக்கு மிகத் தகுதியானவர்கள்.
இந்த இடத்தில், இன்னொன்றைக் குறிப்பிடுதல் அவசியமாகிறது. அரசியல் நிர்வாகம் என்பது, ஒரு தனித்திறன். அது ஒருவரின் கல்வித் தகைமையிலோ, தொழில் அனுபவத்தையோ சார்ந்ததொன்றல்ல என்பதற்கு, உலகம் முழுவதும் பல உதாரணங்கள் இருக்கின்றன.
பாலர் வகுப்புக் கல்வியை மட்டுமே பெற்றுக்கொண்ட அரசியல் தலைவர்கள் கூட, ஆகச் சிறந்த அரசியல் நிர்வாகிகளாகப் பரிணமித்திருக்கிறார்கள். அதேவேளை, பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்களாக இருந்தவர்கள், அரசியல் நிர்வாகத்தைக் கொண்டு நடத்த முடியாது திணறியிருக்கிறார்கள்.
ஏனெனில், அரசியல் நிர்வாகம் என்பது, வெறுமனே மக்களைக் கவரப் பேசுவதும், கட்சியினரைச் சமாளிப்பதும், அறிக்கைகள் வௌியிடுவதும் அல்ல!
மாறாகப் பொது நிர்வாகம், அரச சேவையாளர்கள், ஆளுநர், மத்திய அரசு உள்ளிட்ட பல்வேறு தரப்புகளையும் முறையாகக் கையாண்டு, தமது காரியங்களைச் சாதித்துக்கொள்ள வேண்டிய அதியுயர் பொறுப்புகளும் அழுத்தங்களும் நிறைந்ததொரு பதவியாகும்.
ஹூப்ரு வேதாகமத்தில் ஒரு வாசகமுண்டு. ‘சரியான நிலைமைகளுக்காக நீங்கள் காத்திருந்தால், நீங்கள் ஒருபோதும் எதையும் செய்ய மாட்டீர்கள்’ என்கிறது அந்த வாசகம்.
ஆகவே, எமக்கேற்றாற் போல நிலைமைகள் அமைந்திருந்தால், நாம் நினைத்ததை நடத்தியிருப்போம் என்று சொல்பவர்கள், சிறந்த நிர்வாகிகள் அல்ல. மாறாக, இருக்கும் நிலைமைகளைச் சமாளித்து, எப்படியேனும் தமது காரியத்தை, அடிப்படைக் கொள்கைகளில் பிசிறுகள் இன்றிச் சாதித்துக்கொள்பவர்களே மிகச் சிறந்த நிர்வாகிகள்.
அத்தகைய நிர்வாகத்திறன் மிக்கவர்களை அடையாளங்கண்டு, தமிழ்க் கட்சிகள் தமது முதலமைச்சர், அமைச்சர் வேட்பாளர்களாக நிறுத்தும்போது, அவர்களுக்கு வட மாகாணத் தமிழ் மக்கள், தமது அங்கிகாரத்தைத் தேர்தலில் வழங்குவார்கள்.
அப்போது, அடுத்த வடக்கு மாகாண சபை, வட மாகாண மக்களுக்கு நிறைய விடயங்களைச் சாதித்துத் தரக்கூடியதொன்றாக அமையும்.
மாறாக, பழுத்த அரசியல்வாதி, சமூகத்தில் மதிப்பு நிறைந்த ஆளுமை, கட்சித் தலைவர், முக்கியஸ்தர், அவர்களது வாரிசுகள், சொந்த பந்தங்கள், பிரபல வணிகர், முதலாளி, பிரதேசத்தில் சாதி, மத ரீதியில் முக்கியத்துவமானவர் உள்ளிட்ட அடிப்படைகளில், தமது முதலமைச்சர், அமைச்சர் வேட்பாளர்களைத் தமிழ்க் கட்சிகள் மீண்டும் தெரிவுசெய்யுமானால், முதலாவது வடமாகாண சபை போன்றே, அடுத்த வடக்கு மாகாண சபையும் அமைந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.
இந்த இடத்தில், தமிழ்க் கட்சிகளும் தமிழ் மக்களும் ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டிய குறள், ‘இதனை இதனால் இவன் முடிக்கும் என்று ஆய்ந்து அதனை அவன்கண் விடல்’ என்பதாகும்.
என்.கே. அஷோக்பரன்
0 Comments
No Comments Here ..