09,May 2024 (Thu)
  
CH
ஆன்மிகம்

வேண்டுதல்களை நிறைவேற்றும் ஔவையார் அருளிய விநாயகர் அகவல்

ஔவையார் சீதக்களப செந்தாமரைப்பூம் என்று துவங்கும் விநாயகர் அகவல் என்னும் பாமாலையை எழுதியவர். இதை சதுர்த்தியன்று பாடினால், நீங்கள் பிள்ளையாரிடம் ஏதாவது வேண்டினால், அவர் இரட்டிப்பாகத் தருவார்.


வேண்டுதல்களை நிறைவேற்றும் ஔவையார் அருளிய விநாயகர் அகவல்

விநாயகர் அகவல்

மற்ற கிழமைகளில் மறந்து விட்டாலும் விநாயகரை வெள்ளிக்கிழமை மற்றும் சதுர்த்தி திதிகளில் மறக்காமல் வணங்க வேண்டும். அவ்வாறு, விநாயகரை வணங்கும்போது உங்கள் நினைவிற்கு வரவேண்டிய இன்னொருவர் அவ்வையார். அவர் சீதக்களப செந்தாமரைப்பூம் என்று துவங்கும் விநாயகர் அகவல் என்னும் பாமாலையை எழுதியவர். இதை சதுர்த்தியன்று பாடினால், நீங்கள் பிள்ளையாரிடம் ஏதாவது வேண்டினால், அவர் இரட்டிப்பாகத் தருவார். விநாயகர் அகவல் படிப்பது வீட்டுக்கும், நாட்டுக்கு மட்டுமல்ல, உலகுக்கே நல்லது. காஞ்சிப்பெரியவர் இது பற்றி கூறும்போது, நமக்கும், நாட்டுக்கும், உலகத்துக்கும் நன்மை உண்டாவதற்கு அவ்வையார் மூலம் பிள்ளையாரைப் பிடிப்பதே வழி, என்கிறார்.


சீதக் களபச் செந்தா மரைப்பூம்


 பாதச் சிலம்பு பலவிசை பாடப்

பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்

வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்

பேழை வயிறும் பெரும்பாரக் கோடும் (05)


வேழ முகமும் விளங்குசிந் தூரமும்

அஞ்சு கரமும் அங்குச பாசமும்

நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்

நான்ற வாயும் நாலிரு புயமும்

மூன்று கண்ணும் மும்மதச் சுவடும் (10)


இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்

திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்

சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான

அற்புதம் நின்ற கற்பகக் களிறே!

முப்பழ நுகரும் மூஷிக வாகன! (15)


இப்பொழு தென்னை ஆட்கொள வேண்டித்

தாயா யெனக்குத் தானெழுந் தருளி

மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத்

திருந்திய முதலைந் தெழுத்தும் தெளிவாய்ப்

பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து (20)


குருவடி வாகிக் குவலயந் தன்னில்

திருவடி வைத்துத் திறமிது பொருளென

வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்

கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே

உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில் (25)


தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி

ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்

இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக்

கருவிக ளொடுங்கும் கருத்தினை யறிவித்(து)

இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து (30)


தலமொரு நான்கும் தந்தெனக் கருளி

மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே

ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்

ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி

ஆறா தாரத்(து) அங்குச நிலையும் (35)


பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே

இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்

கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி

மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்

நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக் (40)


குண்டலி யதனிற் கூடிய அசபை

விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து

மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்

காலால் எழுப்பும் கருத்தறி வித்தே

அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும் (45)


குமுத சகாயன் குணத்தையும் கூறி

இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்

உடல்சக் கரத்தின் உறுப்பையும் காட்டிச்

சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும்

எண் முகமாக இனிதெனக் கருளிப் (50)


புரியட்ட காயம் புலப்பட எனக்குத்

தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக்

கருத்தினில் கபால வாயில் காட்டி

இருத்தி முத்தி யினிதெனக் கருளி

என்னை யறிவித்(து) எனக்கருள் செய்து (55)


முன்னை வினையின் முதலைக் களைந்து

வாக்கும் மனமும் இல்லா மனோலயம்

தேக்கியே யென்றன் சிந்தை தெளிவித்(து)

இருள்வெளி யிரண்டுக்(கு) ஒன்றிடம் என்ன

அருள்தரும் ஆனந்தத்(து) அழுத்தியென் செவியில் (60)


எல்லை யில்லா ஆனந் தம்அளித்(து)

அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்

சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்

சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி

அணுவிற்(கு) அணுவாய் அப்பாலுக்(கு) அப்பாலாய்க் (65)


கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி

வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்

கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி

அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை

நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத் (70)


தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட

வித்தக விநாயக விரைகழல் சரணே! (72)


ஓம் விக்ன விநாயகா போற்றி!

உடனுக்குடன் தேர்தல்களம், சினிமா கிசுகிசு, செய்திகள் விளையாட்டு, நிகழ்வுகள்... Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்




வேண்டுதல்களை நிறைவேற்றும் ஔவையார் அருளிய விநாயகர் அகவல்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு