09,May 2024 (Thu)
  
CH
ஆன்மிகம்

Friday, 14 May 2021 அட்சய திருதியை அள்ளிக் கொடுப்பார் அட்சய வரதர்!

அட்சய திருதியை நாம் செய்யும் புண்ணியங்களுக்கு பன்மடங்கு பலனை அள்ளித் தரும் அற்புதத் திருநாள். குசேலன் குபேர சம்பத்து பெற்றது, ஆதிசங்கரர் அருளிய கனகதாரா ஸ்தோத்திரத்தால் மகிழ்ந்து திருமகள் பொன்மழை பொழிந்தது என பல அற்புதங்கள் நிகழ்ந்தது அட்சய திருதியை அன்றுதான்.


அன்று நாம் செய்யும் தான-தர்மங்கள் போன்ற அறக்காரியங்கள், பொன், நகை ஆபரணங்கள் என நாம் வாங்கும் பொருள்கள் அனைத் தும் பல்கிப் பெருகும் என்கின்றன ஞானநூல்கள். அற்புதமான இந்த நாளில் நாம் செய்யும் வழிபாடுகளுக்கும் பன்மடங்கு பலன் கிடைக்கும். அவ்வகையில் அட்சயதிருதியை அன்று சக்தி விகடன் மற்றும் ஜி.ஆர்.டி ஜுவல்லர்ஸ் இணைந்து வழங்கும் லட்சுமி குபேர பூஜை திண்டிவனம் அருகிலுள்ள ஆட்சிப்பாக்கம் அருள்மிகு அட்சய வரதர் திருக்கோயிலில் நடைபெறவுள்ளது.


வழிபாட்டு விவரங்களை அறியுமுன் இந்தத் தலத்தின் மகிமையைத் தெரிந்துகொள்வோம்.

ஆட்சிப்பாக்கம் அட்சயவரதர்ஆட்சிப்பாக்கம் அட்சயவரதர்

மும்மூர்த்திகளில் யார் பொறுமை மிக்கவர் என்று சோதிக்கப் புறப்பட்ட பிருகு மாமுனிவர் கயிலைக்கும், சத்யலோகத்துக்கும் சென்றுவிட்டு நிறைவாக வைகுந்தம் வந்தார். திருமாலின் திருமார்பில் உதைத்தார். திருமாலோ புன்னகையோடு, தன் மார்பை உதைத்த பாதங்கள் நோகுமே என்று முனிவரின் பாதங்களைப் பிடித்துவிட்டார்.


இந்தத் திருக்கதை நம்மில் பெரும்பாலானோருக்குத் தெரிந்திருக்கும். அவ்வாறு முனிவர் மாலவனின் மார்பில் உதைத்ததைக் கண்டு, வெகுண்டெழுந்தாள் திருமகள். தான் உறையும் திருமார்பில் முனிவர் உதைத்ததைத் திருமால் கண்டிக்காததால், வைகுந்தத்தைவிட்டு வெளியேறினாள். பூலோகம் வந்தவள் தென்பரதக் கண்டத்தில் பல திருத்தலங்களில் தங்கி தவமியற்றினாள் என்கின்றன புராணங்கள்.


அவ்வாறு அலைமகள் தங்கியிருந்து தவம்புரிந்த தலங்களில் ஒன்றுதான் ஆட்சிப்பாக்கம். இந்தத் தலத்தில்தான், குபேரன் தான் இழந்த நவநிதிகளையும் திரும்பப் பெற்றாராம்.


ஆம்! குபேரனுக்கு அருள்பாலித்ததால் அளகாபுரி; திருமகள் விஜயம் செய்ததால் விஜயபட்டினம் ஆகிய சிறப்புப் பெயர்களைப் பெற்றுத் திகழ்கிறது ஆட்சிப்பாக்கம். அட்சயபுரி என்றும் ஒரு திருப்பெயர் உண்டு இந்தத் தலத்துக்கு.

ஏன் தெரியுமா?

ஆட்சிப்பாக்கம் கோயில்ஆட்சிப்பாக்கம் கோயில்

நெடுங்காலம் தவம் புரிந்த திருமகள், இவ்வூரில் தங்கியிருந்த போதுதான் ஶ்ரீநிவாஸப் பெருமாள் தன்னைத் தேடி பூலோகம் வந்து விட்டார் என்ற தகவலை அறிந்தாளாம். விரைவில் திருமாலை அடையப்போகிறோம் என்று எண்ணி மகிழந்தாளாம். அப்போது தன்னைச் சேவிக்க வந்த தேவர்களுக்கு வேண்டிய வரங்களை வாரி வழங்கினாளாம். அதனால் அட்சயபுரி என்றும் அழைக்கப்படுகிறது ஆட்சிப்பாக்கம்.


தொடர்ந்து திருமால் திருமலை திருப்பதியில் இருப்பதை அறிந்து அங்கு சென்ற திருமகள், அவர் பத்மாவதித் தாயாரை மணம் புரிந்து கொண்ட விஷயத்தை அறிந்து கோபித்துக்கொண்டு கொல்லாபுரம் சென்ற திருக்கதையை நாமறிவோம்.


இங்ஙனம் திருவேங்கடவன் திருமலையில் எழுந்தருளிய பிறகு, திருமகளை மகிழ்விக்கும் விதமாக அவள் பூலோகத்தில் தங்கி தவம் செய்த தலங்களிலும் ஶ்ரீதேவி-பூதேவி சமேதராக எழுந்தருளி, அங்குள்ள அன்பர்களுக்குக் காட்சியளித்தாராம்.


அவ்வண்ணம் ஆட்சிபாக்கத்திலும் தேவியர் சமேதராக அருள்மிகு அட்சயவரதராக கலியுக வள்ளலாக எழுந்தருளினாராம். திருமகளும் கொடையில் சிறந்த பெருந்தேவித் தாயாராக இங்கு அருள்பாலிக்கிறார். பெருமாளின் திவ்ய கோலத்தை தரிசித்த தேவர்கள், இங்கேயே அவருக்கு அழகிய ஆலயம் எழுப்பி, பிரமோற்சவ விழா எடுத்துக் கொண்டாடினார்கள் என்கிறது தலபுராணம்.


திண்டிவனத்திலிருந்து ஆவணிப்பூர் செல்லும் வழியில் சுமார் 22 கி.மீ தொலைவில் உள்ளது, ஆட்சிப்பாக்கம். புராணப் பெருமை மிக்க இந்தத் தலத்தின் அருமைபெருமைகள் காலப்போக்கில் மெள்ள மறைந்துபோயின. கலியுகத்தில் பக்தன் ஒருவனின் கைங்கர்யத்தால் இந்தத் தலத்தையும் ஆலயத்தையும் மீண்டும் சிறப்பிக்க சித்தம் கொண்டார் பெருமாள்.

ஶ்ரீஅனுமன்ஶ்ரீஅனுமன்

வடதேசத்தில் சீரும் சிறப்புமாய் ஆட்சி செய்து கொண்டிருந்த மன்னன் ப்ருவரன். இவனது வளர்ச்சியைப் பொறுக்காத உறவுகள் சதிச் செயல்களால் அவனின் படைகளைப் பயன்படுத்தி அவனையே நாட்டைவிட்டுத் துரத்தினார்கள்.


நாட்டை இழந்த ப்ருவரன் வெகுதூரம் பயணித்து இந்த அட்சய புரியை (ஆட்சிப்பாக்கம்) வந்தடைந்தான். சிதைந்துகிடந்த பெருமாளின் ஆலயத்திலேயே தங்கி வழிபாடு செய்துவந்தான். இந்த நிலையில் அந்த ஊருக்கு முனிவர் ஒருவர் வந்தார். அவரிடம் தன் நிலையை விளக்கி நல்லாட்சி புரிந்த தனக்கு ஏன் இப்படியான நிலை என்று கேட்டான். அவர் அவனுடைய முன்வினையை எடுத்துச் சொன்னார்.


`‘மகனே! முற்பிறப்பில் நீ பெரும் திருடனாக இருந்து கொடுஞ்செயல்கள் செய்ததால் ஏற்பட்ட வினை இது’’ என்றார்.


``திருடனாக இருந்தேன் என்றால்... இப்பிறப்பில் நான் மன்னனாகப் பிறப்பெடுக்கும் பாக்கியம் கிடைத்தது எப்படி, இப்போது பெருமாளுக்குச் சேவகம் செய்யும் பேறு கிடைத்தது எங்ஙனம்?’’ என்று கேட்டான் மன்னன்.


முனிவரும் ஞானதிருஷ்டியால் காரணத்தைக் கண்டு சொன்னார். `‘மகனே! திருடனாக இருந்தாலும் ஒருமுறை நீ களவாடச் செல்லும் வழியில், யோகி ஒருவருக்கு உதவினாய். தாகமும் பசியும் கொண்ட அவருக்கு நீரும் சோறும் கொடுத்து, அவர் உயிரைக் காப்பற்றினாய். அது பெரிய காரியம்; அந்த நாள் அட்சய திருதியை நன்னாள். ஆகவே, அன்று நீ செய்த தர்மத்தின் புண்ணியம் ஆல் போல் வளர்ந்து மறுபிறப்பில் மன்னனாகும் வாய்ப்பைத் தந்தது. முற்பிறவியில் நீ யோகியைக் காப்பாற்றிய இடம் இந்த அட்சயபுரிதான்.


இங்கு வைத்து உனக்கு அருள்பாலிக்கவே பெருமாள் உன்னை இங்கு வரச் செய்திருக்கிறார். கேட்டதைக் கேட்டபடி அருளும் இந்த அட்சய வரதரை விடாமல் பிடித்துக்கொள். நீ இழந்தவற்றை மட்டுமல்ல அந்த இந்திரலோகத்தையே அவரிடம் வரமாகப் பெற்று மகிழலாம்’’ என்று கூறிய முனிவர் அவனிடம் விடைபெற்றார்.


அவர் சொன்னபடியே மன்னன் அட்சயவரதரைச் சிக்கென பிடித்துக்கொண்டான். அனுதினமும் அவரை வழிபட்டு மகிழ்ந்தான். வரதரின் அருளால், இழந்த நாட்டையும் செல்வத்தையும் விரைவில் பெற்றான். இந்தத் தலத்தில் அட்சய வரதருக்குச் சிறப்பாகக் கோயில் எழுப்பி, நிவந்தங்களும் எழுதிவைத்தான். ஆண்டுக்கு 13 திருவிழாக்கள் நடத்தவும் ஏற்பாடுகள் செய்தான் என்கிறது தலபுராணம்.


இத்தகு புராண - புராதனப் பெருமைகள் கொண்ட திருத்தலத்தில், நடுநாயகமாக அமைந்திருக்கிறது அருள்மிகு அட்சயவரதர் ஆலயம். ஒற்றைப் பிராகாரம் கொண்ட இந்தக் கோயிலில் ஶ்ரீஅட்சய வரதரும் ஶ்ரீபெருந்தேவி தாயாரும் எழில் கோலத்தில் அருள்கிறார்கள்.


நின்ற திருக்கோலத்தில் அருளும் அட்சயவரதர் மேலிரு கரங்களில் சங்கு-சக்கரம் ஏந்தி, கீழ் வலக் கரத்தால் அபயம் காட்டி, கீழ் இடக் கரத்தை இடுப்பில் தாங்கியபடி, தேவியருடன் காட்சி தருகிறார். தனிச் சந்நிதியில், அழகிய பெருந்தேவி தாயார் புன்னகை ததும்பும் எழில் வடிவில் வரப்பிரசாதியாக எழுந்தருளியுள்ளார். கருடாழ்வார், அனுமன் ஆகியோரையும் கோயிலில் தரிசிக்கலாம்.

அள்ளிக் கொடுப்பார் 
அட்சய வரதர்!

பொங்கல் பாரி வேட்டை, வைகுண்ட ஏகாதசி என ஆண்டுக்கு 13 திருவிழாக்கள் இங்கு நடைபெறுகின்றன. பிரம்மனால் கொண்டாடப் பட்ட வைகாசி பிரமோற்சவ விழா இங்கு பன்னெடுங்காலமாக நடைபெற்று வருகிறது. சோழர்களும், பிற்காலப் பாண்டியர்களும், நாயக்க மன்னர்களும் திருப்பணிகள் செய்து கொண்டாடிய ஆலயம் இது என்பதற்கு சான்றாக கல்வெட்டுகள் உண்டு. ஆனாலும் அவை காலப்போக்கில் சிதைந்து, இப்போது தெளிவில்லாமல் காணக்கிடைக்கின்றன.

ஆட்சிப்பாக்கம் 
ஶ்ரீபெருந்தேவித் தாயார்ஆட்சிப்பாக்கம் ஶ்ரீபெருந்தேவித் தாயார்

ஆட்சிப்பாக்கத்துக்கு ஒருமுறையேனும் சென்று அட்சய வரதராஜரை தரிசித்தால் போதும்; அவர் அருளால் நாம் வேண்டியது கிடைக்கும், இழந்த பதவி, தொலைத்த செல்வம், உதறிய உறவுகள் யாவற்றையும் மீண்டும் பெறலாம் என்று சத்திய சாட்சி சொல்கிறார்கள் இங்குள்ள பெரியோர்கள்.


அற்புதமான இந்தத் தலத்தில்தான், அட்சயதிருதியை (14.5.2021 - வெள்ளிக்கிழமை) அன்று ஶ்ரீலட்சுமி குபேர பூஜை சிறப்பாக நடைபெற வுள்ளது. குபேரனுக்கு இழந்த செல்வங்களை மீண்டும் அருளிய தலம், சாம்ராஜ்ய லட்சுமியின் சாந்நித்தியம் பொங்கிப் பெருகும் க்ஷேத்திரம், அட்சய வரதர் எனும் திருப்பெயரிலேயே பெருமாள் அருளும் ஆலயம் இது. ஆகவே, அட்சய திருதியை வழிபாட்டுக்கு மிகப் பொருத்தமானதும் விசேஷமானதும் அல்லவா?


அட்சய திருதியை நன்னாளில் இங்கு லட்சுமி குபேர பூஜையும் வாசகர்களுக்குச் சகல நன்மைகளும் செல்வ வளமும் பெருகும் பொருட்டு வில்வம் முதலான தளங்கள் மற்றும் பூக்களால் அட்சய அர்ச்சனையும் நடைபெறவுள்ளன. செல்வத்துக்கான சக்தி வாய்ந்த ஆறு ராஜ யோகங்கள் அமைந்த நாள் அட்சயதிருதியை என்கின்றன ஜோதிட நூல்கள். அற்புதமான இந்த நாளில், மிக உன்னதமான திருத்தலத்தில் நடைபெறும் சிறப்பு வைபவங்கள் பூஜைகளில் நீங்களும் சங்கல்பித்து திருவருள் பெறலாம்.

ஶ்ரீஅட்சய வரதர்ஶ்ரீஅட்சய வரதர்

மூன்று வரதர்கள்!

காஞ்சிபுரம், பழைய சீவரம், ஆட்சிப்பாக்கம் ஆகிய மூன்று தலங் களிலும் ஒரே நாளில் கருடசேவை நடைபெறுமாம். மூவருமே வரதர் என்பதால் இப்படியான ஏற்பாடாக இருக்கலாம் போலும். காஞ்சியில் ஶ்ரீஅத்தி வரதர், பழைய சீவரத்தில் ஶ்ரீஆதிவரதர், இங்கே ஶ்ரீஅட்சய வரதர் இவர்கள் மூவரையும் ஒரே நாளில் தரிசித்தால், பூலோக வாழ்வுக்குத் தேவையான சகல சம்பத்துகளும் பொங்கிப் பெருகும். நிறைவில் முக்தியும், வைகுந்த பதவியும் வாய்க்கும் என்கிறார்கள்.

பிள்ளை வரம் அருளும் கலசத் தீர்த்தம்

வைகாசி பிரமோற்சவத்தின்போது இவ்வூரில் நிகழும் கலசப் பூஜை மிகவும் சிறப்பானது. 10 நாள்களும் யாக குண்டத்தில் வைத்து வேத மந்திரங்களால் பூஜிக்கப்படும் கலச நீரை, பெருமாளுக்கு அபிஷேகம் செய்து அதை பக்தர்கள் மீதும் தெளிக்கிறார்கள். இந்தப் புனித நீரில் நனைந்தால் பிள்ளை வரம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிகை.

எனவே மழலை வரம் வேண்டி இங்கு வருபவர்கள் ஏராளம், பலன் பெற்றவர்களும் ஏராளம். அட்சய வரதராகவும் பெருந்தேவி தாயாகவும் இங்கே திருமாலும் திருமகளும் வீற்றிருப்பதால், திருமண வரம் வேண்டியும் செல்வவளம் வேண்டியும் வருபவர்களும் அநேகம் என்கிறார்கள்.

அள்ளிக் கொடுப்பார் 
அட்சய வரதர்!

வாசகர்கள் கவனத்துக்கு...

ஆட்சிப்பாக்கம் அருள்மிகு அட்சய வரதராஜர் திருக்கோயிலில், அட்சயதிருதியை அன்று நிகழவுள்ள லட்சுமிகுபேர பூஜை மற்றும் அட்சய அர்ச்சனை வழிபாடுகளுக்கு வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், சங்கல்பக் கட்டணமாக `₹.500 மட்டும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், அவர்களின் பெயர் - நட்சத்திரம் கூறி உரிய சங்கல்பத்துடன் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்குக் குங்குமம், லட்சுமிப் பிரசாதமாக வில்வம், குபேர ரட்சை ஆகியவை (30.5.2021 தேதிக்குள்) அனுப்பிவைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்).

தற்போதைய சூழலில், கொரொனா பெருந்தொற்று பாதிப்புக் கட்டுப்பாடு விதிமுறைகளுடன் அரசு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி இந்தத் திருக்கல்யாண வைபவம் நிகழவுள்ளது. ஆகவே, வாசகர்கள் நேரில் தரிசிக்கவோ பங்கேற்கவோ இயலாத நிலையில், இந்த வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் முகநூல் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம்.

சங்கல்ப முன்பதிவு விவரங்களுக்கு: 97909 90404


உடனுக்குடன் தேர்தல்களம், சினிமா கிசுகிசு, செய்திகள் விளையாட்டு, நிகழ்வுகள்... Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்




Friday, 14 May 2021 அட்சய திருதியை அள்ளிக் கொடுப்பார் அட்சய வரதர்!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு