18,Apr 2024 (Thu)
  
CH
குழந்தைகள்

கர்ப்பகாலத்து தவறுகள்

கர்ப்பிணி பெண்களுக்கு உறவினர்களும், நண்பர்களும் ஏராளமான ஆலோசனைகளை வழங்குவார்கள். அவற்றுள் சில ஆலோசனைகள் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்திவிடும். தவறான பழக்கவழக்கங்களுக்கும் வழிவகுத்துவிடும். கர்ப்பகாலத்தில் பெண்கள் தவிர்க்க வேண்டியதும், பின்பற்ற வேண்டியதுமான விஷயங்கள் சிலவற்றை பார்ப்போம்.


வயிற்றில் வளரும் குழந்தைக்கும் சேர்த்து சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் பலரிடம் உள்ளது. அதனால் பெரும்பாலான கர்ப்பிணி பெண்கள் அதிகமாகவே சாப்பிடுகிறார்கள். ‘‘கர்ப்ப காலத்தில் 60 சதவீத பெண்கள் பரிந்துரைக்கப்பட்ட கலோரிகளை விட அதிகமாக உட்கொள்கிறார்கள். அவர்கள் தேவையான அளவு மட்டுமே சாப்பிட வேண்டும்’’ என்கிறார், மகப்பேறு மருத்துவர் சுடோபா பானர்ஜி. தானியங்கள், பழங்கள், பச்சை காய்கறிகள், பாலாடை கட்டி, தயிர், இறைச்சி போன்றவற்றை பரிந்துரைக்கப்பட்ட அளவில் சாப்பிட்டால் போதுமானது.

நடைப்பயிற்சி, யோகா, தியானம் போன்றவற்றை தொடர்ந்தால் பிரசவம் சிக்கல் இன்றி சுமுகமாக நடைபெறும் என்ற கருத்தும் நிலவுகிறது. அவைகளை செய்தால் பிரசவத்திற்கு பிறகு விரைவாக இயல்பு நிலைக்கு திரும்பிவிடலாம் என்பதும் பலரின் நம்பிக்கையாக உள்ளது. ஆனால் அவைகளை டாக்டரின் ஆலோசனைபடியே செய்ய வேண்டும். அதற்காக உடலை வருத்திக்கொள்ளக்கூடாது. முறையாக செய்ய வேண்டும். யோகா, தியானம் போன்றவை கர்ப்பிணிகளை உற்சாகமாகவும், சுறுசுறுப்பாகவும் இயங்கவைக்கும். அது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் நலம் சேர்க்கும்.


கர்ப்பகாலத்தில் வாகனம் ஓட்டக்கூடாது, சீட் பெல்ட் அணிந்து பயணிக்கக்கூடாது என்ற எண்ணமும் சிலரிடம் இருக்கிறது. கர்ப்பத்தை வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே கருத வேண்டும். அன்றாட செயல்பாடுகளில் தொடர்ந்து கவனம் செலுத்தலாம். வாகனம் ஓட்டுவதும் தவறில்லை. பாதுகாப்பாக ஓட்டுவது அவசியம். அதுபோல் சீட் பெல்ட் அணிவது வயிற்றுக்கு கூடுதல் அழுத்தம் கொடுக்காது. மாறாக வயிற்றில் வளரும் குழந்தைக்கு பாதுகாப்பு வழங்கவே செய்யும்.


கர்ப்பகாலத்தில் தடுப்பூசி போடுவதற்கு பல பெண்கள் முன்வருவதில்லை. அது தவறு. தடுப்பூசிகள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் தன்மை கொண்டவை. மேலும் தொற்றுநோய்களில் இருந்து பாதுகாக்கவும் உதவும். வயிற்றில் வளரும் குழந்தைக்கும் பாதுகாப்பு அளிக்கிறது. எதிர்காலத்தில் கர்ப்பப்பையை பாதிக்கக்கூடிய நோய்களில் இருந்தும் பாதுகாக்க உதவுகிறது. கர்ப்பகாலத்தில் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள், தடுப்பூசிகளை கர்ப்பிணிகள் தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது மருத்துவர்களின் கருத்தாக இருக்கிறது.


வேலைக்கு செல்லும் பெண்கள் பிரசவ காலங்களில் விடுமுறை எடுப்பது அவர்களது பணித்திறனை பாதிக்கும் என்றும் கருதுகிறார்கள். அதுவும் தவறான கண்ணோட்டம் என்பது டாக்டர்களின் கருத்து.


கிராமப்புறங்களில் வசிக்கும் பெண்கள் கர்ப்பகாலத்தில் வீடு களிலும், வயல்களிலும் தொடர்ந்து வேலை பார்க்கிறார்கள். கர்ப்ப காலத்தில் வேலை செய்வதால் எந்த பாதிப்பும் ஏற்படாது. அதே நேரத்தில் ஒவ்வொரு பணியையும் கவனமாக செய்ய வேண்டும்.




கர்ப்பகாலத்து தவறுகள்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு